பரந்தனில் பூத்த கருப்பு மலர்

இலங்கை என்கிற நாடு வெறும் 'பிடாரி' இல்லை... அடங்காப்பிடாரி. புத்தனின் பல்லில் ரத்தக் கறை இருப்பதை மூடிமறைக்க, எப்போதும் போல இப்போதும், அழிச்சாட்டியம் செய்கிறது.
இலங்கைக்கு வெளியேயிருக்கும் அத்தனைப் பேரும் இதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். இலங்கைக்கு உள்ளேயிருந்தே இதை எதிர்க்க வேண்டிய எதிர்க்கட்சி என்ன செய்துகொண்டிருக்கிறது? இது சம்பந்தமாக நமக்குத் தகவலில்லை. போர்க்குற்றவாளிகளுக்கு இரக்கம் காட்டப்படுமாம்.... கருணை காட்டப்படுமாம்... அதற்காக ஒரு சபையாம்.... பௌத்த பிக்குகளிலிருந்து அனைத்து மதத் தலைவர்களும் அதில் இருப்பார்களாம்...! இப்படிச் சொல்லியிருப்பவர் யாரோ ஒரு சோப்ளாங்கி சாமியார் இல்லை.... இலங்கையின் பிரதமர் ரணில்தான் இப்படியெல்லாம் கூசாமல் பேசுகிறார். 'குற்றமிழைத்தவர்களில் யார் யாருக்கு மன்னிப்புக் கொடுக்கலாம் - என்று மதத்தலைவர்கள் பரிந்துரை செய்வார்கள்' என்கிறார் ரணில். எந்தக் கொடுங் குற்றங்களுக்கு, 'எவராலும் எந்த அரசாலும் மன்னிப்பு கொடுத்துவிட முடியாது' என்று நவநீதம் பிள்ளை சொன்னாரோ, அதே குற்றங்களுக்கு மன்னிப்புக் கொடுக்கத் தயாராகிறார் .... இலங்கையின் பிரதமர். சென்ற மாதம் வெளியிடப்பட்ட ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசெய்னின் அறிக்கை, அப்பாவித் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட பாலியல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதைக் கவலையுடன் குறிப்பிட்டது.
'பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பான ஆதாரங்களிலிருந்து - அது திட்டமிட்ட தாக்குதல் என்பதும், தமிழினத்தை அழிப்பதை நோக்கமாகக் கொண்டது என்பதும் தெரிய வருகிறது' என்கிறார் நவநீதம் பிள்ளை.
பாதிக்கப்பட்ட தமிழ்ச் சகோதரிகளை நேரில் சந்தித்து, அவர்களது அவலங்களைக் காதுகொடுத்துக் கேட்டபிறகே வேதனையுடன் பேசுகிறார் அவர்.
தமிழினி போன்ற எம் இனத்தின் விடுதலைப் போராட்ட வீராங்கனைகளை நவநீதம்பிள்ளை சந்திக்க முடியாது போனது, உண்மையிலேயே மிகப் பெரிய இழப்பு.
இராணுவ மிருகங்களால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பிள்ளை நேரில் கேட்டறிய முடியவில்லை. இனி, நவ்விப் பிள்ளையோ, சர்வதேசத்தின் பிரதிநிதியான வேறெவருமோ சந்திக்க முடியாத தொலைவுக்குப் போய்விட்டாள் எங்கள் தமிழினி...
தமிழினியின் உயரம் - 6.2. 'இது சத்யராஜின் உயரம்' என்று சொன்னவுடன், 'எமது விடுதலைப் போராட்டத்தைப் போற்றுகிற கலைஞர் என்கிற அடிப்படையில், அவரது உயரம் இன்னும் கூடுதல்' என்றது பரந்தனில் பூத்த அந்தக் கருப்பு மலர். அந்த மலர்தான் 43 வயதிலேயே உதிர்ந்திருக்கிறது.
43 வயதில் தமிழினி புற்றுநோய்க்கு இரையாகியிருப்பது குறித்து சந்தேகங்கள் எழுவது இயல்பானது. புற்றுநோய் யாருக்கு வேண்டுமானாலும் வர வாய்ப்பிருக்கிறது,
அதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கலாம்..... இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், தமிழினி தொடர்பாக எழுகிற சந்தேகங்கள் நியாயமானவை. அவற்றை நமக்குள்ளேயே பொதிந்து வைத்துக் கொண்டிருக்கக் கூடாது.... நம்மில் எவரும் மௌனம் சாதித்துவிடக் கூடாது.
2009 மே மாதம் கைது செய்யப்பட்ட தமிழினி, கொழும்பு சிறையில் 3 ஆண்டுகள் இருக்க நேர்ந்தது. அந்த மூன்று ஆண்டுகளும், சொல்லொணாக் கொடுமைகளை அன்றாடம் அவர் அனுபவிக்க நேர்ந்திருக்கும். சமந்தகர்களால் கூட இதை மறுக்க முடியாது.
அதன்பிறகு, இரண்டாண்டுகள் புனர்வாழ்வு மையம் என்கிற போர்வையில் நடத்தப்பட்ட சித்திரவதை முகாமில் வைக்கப்பட்டிருந்திருக்கிறார். அங்குமட்டும் வேறென்ன நடந்திருக்கும்!

தமிழினி சிங்கள ராணுவ மிருகங்களால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதற்கும், அதனால் அவருக்கு ஏற்பட்ட உடல் உபாதைகளுக்கு உரிய சிகிச்சை கூட வழங்கப்படாததற்கும் (அல்லது திட்டமிட்டே தவறான சிகிச்சை வழங்கப்பட்டதற்கும்), அவரது உயிரைக் குடித்திருக்கும் புற்று நோய்க்கும் சம்பந்தம் இருக்கிறதா? இதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி.
மெல்ல மெல்லத் தமிழினி சாகவேண்டும் - என்று கோதபாய என்கிற கொலைவெறியன் மனப்பூர்வமாக விரும்பியிருக்க வாய்ப்பிருக்கிறது. தமிழினி, விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல் பிரிவுப் பொறுப்பாளராக இருந்தவர். அவரிடமிருந்து தாங்கள் பெற நினைத்த தகவல்களைப் பெற இயலாத நிலையில், கோதபாய மிருகம் அப்படித்தான் நினைத்திருக்கும்.
அந்த ஆத்திரத்தில், மிக மிக அதிகபட்ச சித்திரவதைகளைப் பிரயோகித்துப் பார்க்க, கோதாவின் ஆணைப்படி செயல்பட்ட மிருகங்கள் தயங்கியிருக்கப் போவதில்லை.
கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லப்படுவாய் - என்று தமிழினி அச்சுறுத்தப் பட்டிருக்கக் கூடும். ஓர்மம் மிக்க அந்தச் சகோதரி, அதற்கெல்லாம் அஞ்சியிருக்க வாய்ப்பில்லை.
தமிழினி என்கிற அந்தக் கருப்பு மலர், தேசத்தைத் தவிர வேறெதன் மீதும் பற்று வைக்காத நெருப்பு மலர். உள்ளுக்குள் புற்று வைப்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அந்தப் புனித மலர், சித்திரவதைகளைத் தாங்கியிருக்கக் கூடும். வாழ்வதற்கான வைராக்கியத்தைக் காட்டிலும் கோடானுகோடி மடங்கு உயர்வானது - சாவதற்கான வைராக்கியம்.
தமிழினி என்கிற எம் இனத்தின் வானம்பாடி - சிறகுகளெல்லாம் எரிக்கப்பட்ட நிலையில் வீழ்ந்தபிறகுதான், பரந்தனில் பிறந்த அந்த விடுதலைப் பறவைக்கு புற்றுநோய் இருந்தது என்பதே தெரியவந்திருக்கிறது. இதுதான், எல்லாக் கேள்விகளுக்கும் அடிப்படையாக அமைந்துவிட்டது.
கொழும்பிலேயே, தமிழினிக்குப் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்க வேண்டும். இதில் சந்தேகத்துக்கு இடமேயில்லை. அப்படியென்றால், அதை ஏன் ரகசியமாகவே வைத்திருந்தார்கள்?
கொழும்பில் எந்த மருத்துவமனையில் இதுதொடர்பான மருத்துவச் சோதனை நடத்தப்பட்டது? அந்தச் சோதனை மூலம் அறியப்பட்ட புற்று நோய்க்கான காரணம் என்ன? அவருக்கு என்னென்ன சிகிச்சைகள் தரப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது?
மருத்துவர்கள் கூறியபடி சிகிச்சை மற்றும் மருந்துகள் தமிழினிக்கு தரப்பட்டதா? புற்று நோயாளி ஒருவர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படாமல், சிறையிலேயே வைக்கப்பட்டிருந்தது ஏன்? தமிழினிக்குப் புற்றுநோய் இருக்கிறது என்கிற தகவல் ஏன் மூடி மறைக்கப்பட்டது?........
இந்தக் கேள்விகளையெல்லாம் நானும் கேட்கலாம், நீங்களும் கேட்கலாம்.... ஆனால், இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற உன்னதமான உரிமையின் அடிப்படையில் இந்தக் கேள்விகளை சம்பந்தன் எழுப்பும்போதுதான் உண்மைகளை அறிய முடியும்.
பாதுகாப்புப் படைகளின் பிடியிலிருந்த தமிழினியின் உடல்நலன் குறித்து, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு நிச்சயம் தெரிவிக்கப்பட்டிருக்கும். கைதாவதற்கு முன்பே அவருக்குப் புற்றுநோய் இருந்ததா, அல்லது, தொடர் சித்திரவதைகளும் சிகிச்சை மறுப்பும் தான் அதற்குக் காரணமா என்பது கூட அந்த மிருகத்துக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கக் கூடும்.
இதுதொடர்பாக கோதபாய என்ன பதிலளித்தான் - என்பது குறித்தும் சம்பந்தன் கேள்வி எழுப்ப வேண்டும். இல்லாவிட்டால், வேறெதற்காக எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர்ந்திருக்கிறார் - என்கிற கேள்வி நிச்சயமாக எழும்.
தமிழினிகள், சர்வதேச சமூகத்தின் மாதரசிகளுக்கு நிகராக எம் சமூகத்துச் சகோதரிகளின் ஆற்றலையும் அறிவையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர்கள்.
'அடுப்பறைக்கும் படுக்கையறைக்கும் இடையே ஓடி ஓடி இடுப்பொடிந்து போனவர்கள்' என்றெல்லாம் வருத்தப்பட்ட கவிஞர்களின் கண்ணீர் ஆனந்தக் கண்ணீராகவே மாறுகிற அளவுக்கு எதிரிகளின் இடுப்பொடித்தவர்கள். தமது இதயத்துக் கருப்பையில் எம் தேசத்தைச் சுமந்தவர்கள்.
மீளக் கைப்பற்றிய கிளிநொச்சி நகரில் தேசத்தின் கொடியை ஏற்றுகிற பெருமையை விதுஷா பெற்றது எமது பெண்ணினத்துக்கு தாய்ப்புலி கொடுத்த அங்கீகாரமென்றால், தமிழினியின் பொறுப்பில் மகளிருக்கென ஒரு தனி அரசியல் பிரிவை ஏற்படுத்தியது இன்னொரு அங்கீகாரம்.
அவர்களது மரணத்துக்குக் காரணமானவர்கள் எவராக இருந்தாலும், அவர்களைக் கூண்டில் நிறுத்தத் தவறிவிடக் கூடாது. அதனால்தான், தமிழினிகளையும் இசைப்பிரியாக்களையும் தனது சொந்தப் பிள்ளைகளாக நினைத்து சம்பந்தன் நியாயம் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
யாழ்ப்பாண வீதி ஒன்றில் தமிழினியைச் சந்திக்க நேர்ந்தபோது கேட்ட கேள்வியும், அதற்கு அந்தச் சகோதரி அளித்த பதிலும் இன்றைக்கும் நினைவிருக்கிறது எனக்கு!
அப்போது சமாதானக் காலம். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்துசெல்ல புலிகளுக்கு அனுமதி தரப்பட்டிருந்தது.
அது - நிபந்தனையுடன் கூடிய அனுமதி. ஆயுதங்களுடன் வரக்கூடாது என்பது நிபந்தனை. அதன்படி, சுய பாதுகாப்புக்கு ஒரு சிறிய கைத்துப்பாக்கியைக் கூட புலிகள் வைத்திருக்கக் கூடாது.
அதே சமயம், புலிகளைத் தீர்த்துக் கட்டவேண்டும் - என்பதற்காகவே சிங்கள அரசால் கொம்புசீவப்பட்ட அரசு ஆதரவுக் குழுக்கள், ஒப்பந்தத்துக்கு நேர்மாறாக, துப்பாக்கிகளுடன் திரிய அனுமதிக்கப்பட்டது. அது, சமாதானத்தை நம்பிய புலிகளுக்கு செய்யப்பட்ட நம்பிக்கைத் துரோகம்.
அப்படியொரு சூழ்நிலையில்தான், தற்காப்புக்கான ஆயுதம் கூட இல்லாமல் வந்த தமிழினியையும் வேறு இரு சகோதரிகளையும் சந்திக்க நேர்ந்தது. 'ஆயுதம் எதுவும் எடுத்துவர முடியாத நிலையில்,
இப்படி வருவது ஆபத்தானதாயிற்றே' என்றேன் கவலையுடன்! 'எங்களுக்கு ஒண்டும் ஆகாது' என்று தமிழினியுடன் இருந்த சகோதரி (பெயர் பிரமிளா என்று நினைவு) சிரித்தபடியே சொன்னபோது,
தமிழினியின் முகத்திலும் புன்னகை தொற்றிக் கொண்டது. ஓர் அசாத்திய நம்பிக்கை ஒளிர்ந்தது அந்த முகத்தில்! எங்களைக் கடந்துபோகிறவர்களின் புன்சிரிப்புக்கு தனது மென்சிரிப்பால் பதிலளித்தபடியே பேசியது அந்தக் கருப்பு மலர்.
"அண்ணா, இது எமது மண். நாங்கள் இந்த மக்களின் பாதுகாப்புக்காகத்தான் ஆயுதமேந்தியிருக்கிறோம்.... இவர்கள் எங்களைப் பாதுகாக்காமல் போய்விடுவார்களா என்ன" என்று தமிழினி கேட்டபோது ஏற்பட்ட நெகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இந்த நொடிவரை என்னால் இயலவில்லை.
அந்த மலர்தான் உதிர்ந்திருக்கிறது இன்று.....
இல்லை... உதிர்க்கப்பட்டிருக்கிறது...
எதற்கும் நியாயம் கேட்கிற நாம் இதற்கும் நியாயம் கேட்கிறோம்.
இலங்கையில், எந்த வழக்கும் இல்லாமல் சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தங்களை விடுதலை செய்யும்படி போராடிய பிறகு, அரசு பெயரளவுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்திருக்கிறது.
அதை நிறைவேற்றுமா என்பது தெரியவில்லை. ஆனால், 'சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் இல்லவே இல்லை' என்று நீதித்துறை அமைச்சர் வெளிப்படையாக மறுத்த நிலையில்,
இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் சிறையிலிருப்பதாக அரசே ஒப்புக் கொண்டிருப்பது அவர்களது போராட்டத்துக்குக் கிடைத்த உண்மையான வெற்றி.
அரசு ஒப்புக்கொள்கிற கணக்கே இதுவென்றால், கணக்கிலேயே வராமல் சட்டவிரோதமாக சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை இதைப்போல் பல மடங்காக இருக்கக் கூடும். சர்வதேசத் தலையீடு இல்லாமல், இதை அம்பலப்படுத்த முடியாது.
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை பல்வேறு நம்பிக்கைகளை நம்மிடையே விதைத்திருக்கிறது. சட்ட விரோதச் சிறைகளிலும், புனர்வாழ்வு மையங்கள் என்கிற சித்திரவதைக் கூடங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் யார் யார் என்கிற விவரங்கள் நிச்சயமாக அம்பலமாகும் என்கிற நம்பிக்கையும் அவற்றில் ஒன்று.
அந்த விவரங்கள் அம்பலமாகும் போது, இத்தனை ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டு, தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வந்த அவர்களுக்கு சர்வதேச மருத்துவக் குழு மூலம் முழு உடல் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.
தமிழினியைப் போல் யார் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதற்குக் காரணமான ஒவ்வொருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று கேட்காதீர்கள். எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் தான் இதையும் செய்தாக வேண்டும்.
சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதற்கும் உடல் நோய்களுக்கும் என்ன தொடர்பிருக்கிறது....
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதீர்கள்.... என்றெல்லாம் எ னது நண்பர்கள், இலங்கை மிருகங்களுக்காக மின்னஞ்சல் வழி வக்காலத்துப் போடக்கூடும். சங்கறுப்பதைப் போல நமது குரல்வளையையும் அறுத்துவிட முடியும் என்று நம்புகிறவர்கள் அவர்கள்.
தமிழினிக்கு என்னென்ன நேர்ந்தது - என்பதை அவரை நேரில் சந்தித்துப் பேசிய சகோதரியின் வாயிலாகவும், நேர்மையும் ஓர்மமும் கொண்ட போராளிகளுக்கு ஈவிரக்கமற்ற அரசுகள் எதையெல்லாம் 'சிறைப்பரிசாக' வழங்கும் என்பதை 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி.யின் வரலாறு வாயிலாகவும் அறிந்தவன் என்கிற முறையிலேயே எழுதுகிறேன் இதை!
எம் இனத்தின் அடையாளங்களில் ஒன்றாகவே நான் கருதும் பரந்தன் மலர் தமிழினிக்கு இரங்கல் தெரிவிப்பதை விட, அவருக்கு நீதி கேட்பதுதான் முக்கியம் என்பதை உணர்ந்தே எழுதுகிறேன்.
தமிழினியைச் சிறைவைத்திருந்த அதிகாரிகள், 'புனர்வாழ்வு' கொடுத்த பௌத்தப் பொறுக்கிகள், அதற்கான ஆணையைப் பிறப்பித்தவர்கள் - என்று அத்தனைப் பேரையும் சட்டத்தின் முன் நிறுத்த இலங்கை அரசு தவறினால்,
தமிழீழ அரசு சர்வநிச்சயமாக அதைச் செய்யும். அந்த நாள் நீண்ட தொலைவில் இல்லை. அடங்காப் பிடாரிகளின் கவனத்துக்கு மெத்தப் பணிவோடு இதைக் கொண்டு வருகிறேன்.
புகழேந்தி தங்கராஜ்
mythrn@yahoo.com

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila