ஒவ்வொரு வருடமும் கழிந்து புதிய வருடம் ஒன்று பிறக்கும்போது தமிழர் வாழ்வில் விடியல் பிறக்குமா? மாற்றங்கள் நிகழுமா என்ற ஏக்கங்கள்தான் ஏற்படுகின்றன. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் சந்தித்த ஆண்டுகள் முக்கியமானவை. குருதியோடும் கண்ணீரோடும் வரலாறாகியவை. உரிமைக்கான போராட்டத்தில் பல்வேறு விளைவுகளை கொண்ட பல ஆண்டுகளை கடந்திருக்கிறோம். எங்கள் கலண்டரில் இழப்புக்களும் படுகொலைகளும் போராட்டங்களும் என்று ஆண்டு முழுக்க ஆறாத வடுக்கள் நினைவுபடுத்தப்படுகின்றன. இந்த வகையில் தமிழர்கள் வாழ்வில் மாற்றத்தை, விடியலை பதிவு செய்யும் ஆண்டாக 2016 அமையுமா?
ராஜபக்சவுக்குத் தோல்வி
ஈழத் தமிழர் போராட்டத்தில் மறக்க முடியாத பல வருடங்கள் உள்ளன. மறக்க முடியாத பல நாட்கள் உள்ளன. 2015ஆம் ஆண்டில் பல வரலாற்றுத் திருப்பமான சில விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன. குறிப்பாக இலங்கை ஜனாதிபதியும் ஈழத் தமிழர்களை இனப்படுகொலைக்கு உள்ளாக்கியவர்களில் ஒருவருமான மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் வாக்குப் பலத்தால் தோற்கடிக்கப்பட்டார். கடந்த பத்தாண்டுகளாக ராஜபக்சவின் கொடுங்கோல் ஆட்சியில் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள். யுத்த வலயங்களிலும் யுத்த வலயத்திற்கு வெளியிலுமாக பல்வேறு வழிமுறைகளில் அழிக்கப்பட்டார்கள்.
தமிழர் தேசத்தில் பல்வேறு விதமாகவும் இன அழிப்பையும் நில அபகரிப்பையும் தீவிரப்படுத்தி இனச் சுத்திரிப்பை மேற்கொண்டவர் மகிந்த ராஜபக்ச. 2009இல் தமிழ் மக்களை லட்சக்கணக்கில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்து அதன் ஊடாக வீர யுத்தம் ஒன்றை மேற்கொண்டதாக தனது இருப்பையும் அரசியலையும் நிறுவும் செயல்களில் ஈடுபட்டார். இந்த நிலையிலேயே தமிழ் மக்கள் தொடர்ந்து ராஜபக்சவை தேர்தல்களில் தோற்கடித்து தமிழருக்கு அவர் என்ன செய்தார் என்பதை வெளிப்படுத்தி வந்த நிலையில் ராஜபக்சவின் இருப்பை தீர்மானிக்கும் ஜனாதிபதித் தேர்தலில் அவரை முற்றாக தோற்கடித்தார்கள்.
புதிய ஆட்சியும் தமிழரும்
ராஜபக்ச தோற்கடி்க்கப்பட்டு புதிய ஆட்சி ஏற்பட்டது தமிழர் வாழ்வில் பெரிதாக எந்த மாற்றங்களையும் உருவாக்கிவிடவில்லை. தமிழர்களின் நிலங்களை விடுவிப்போம் என்றும் அரசியல் கைதிகளை விடுவிப்போம் என்றும் இலங்கையின் புதிய அரசு வாக்குறுதி அளித்திருந்தாலும் அதில் மிகவும் குறைந்தளவு விகிதமே நடைமுறைப்பட்டது. சம்பூரில் ஒன்பது வருடங்களாக அகதிகளாக இருந்து நிலத்திற்குப் போராடிய மக்களின் சுமார் 450 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. 25 வருடங்களாக வலி வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் 5ஆயிரம் ஏக்கர் காணிகளில் ஆயிரம் ஏக்கரை மாத்திரம் விடுவித்துள்ளதுதடன் தற்போது சுமார் 700 ஏக்கரை விடுவிக்க இணங்கியிருக்கிறது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இலங்கை அரசு மந்தமான கதியிலேயே காணப்படுகின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று உலக நாடுகள் கூறி வருகின்றன. பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் கொடியதொரு சட்டம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள புதிய அரசு அந்தச் சட்டத்திற்கு பலியாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தயக்கம் காட்டுகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக மற்றொரு சட்டத்தை சிங்கள இனவாதிகளை திருப்திப்படுத்த கொண்டு வருகின்றது.
புதிய அரசு தமிழர் பிரச்சினையை வெளிப்படையாக கையாளத் தயங்குகிறது. தமிழர் கோரிக்கை, சர்வதேசத்தின் அழுத்தம், சிங்கள மக்களின் மனநிலை, ராஜபக்ச தரப்பின் பிரசாரம் என இவைகளுக்குள் சிக்கித் தவிக்கும் அரசு தமிழர் விடயத்தில் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வெளிப்படையாக கையாளத் தயங்குவதனாலேயே இத்தகைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. ராஜபக்சவை யுத்த வெற்றி நாயகனாக ஏற்றுகொண்டு ராஜபக்சவால் இராணுவத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை எப்படி விடுவிப்பது? இராணுவமய நீக்கம் செய்து சிவில் சூழலை எப்படி ஏற்படுத்துவது?
இனப்படுகொலைத் தீர்மானம்
2015ஆம் ஆண்டில் “இலங்கையில் நடந்தது இனப்படுகொலை“ முக்கியமானதொரு தீர்மானம் வடக்கு மாகாண சபையால் கொண்டுவரப்பட்டது. 2009 முள்ளிவாய்க்காலில் மாத்திரமின்றி இலங்கையின் வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பின்னரான அரசுகள் அனைத்தும் தமிழ் மக்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்து வந்திருக்கின்றன என்பதை அந்த தீர்மானம் மிகவும் ஆதாரபூர்வமாகவும் வலிமையோடும் எடுத்துரைக்கின்றது. இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் என்று மாத்திரம் அணுகப்படும் நிலையில் இங்கு நடந்தது மிகக் கொடிய இன அழிப்பு என்பதை பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் அந்த மக்களின் பிரதிநிதிகள் கொண்டுவந்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை தன்னுடைய அறிக்கையிலும் இலங்கையில் நடந்தது மிகவும் கொடூரமான போர்க்குற்றங்கள் என்றே அடையாளப்படுத்துகின்றது. அந்தப் போர்க்குற்றங்கள் எதற்காக நிகழ்த்தப்பட்டவை என்பதை அந்த அமைப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கொத்துக் கொத்தாக கொத்துக் குண்டுகளும் தடைசெய்யப்பட்ட நச்சு வாயுக்களும் பிரயோகிக்கப்பட்டு ஈழத் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்பாவிகள் மிகவும் கண்மூடித்தனமாக தாக்குதல்களின் ஊடாக கொன்றழிக்கப்பட்டார்கள். பல்வேறு நாடுகளின் ஒடுக்கப்படும் இனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இத்தகைய தாக்குதல்கள் அழிப்பு நடவடிக்கைகள் இன அழிப்பின் பாற்பட்டவை என்பதை உலக சாசனங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
தமிழர்களின் போராட்ட வரலாற்றில் இனப்படுகொலைத் தீர்மானத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்பதை உலகும் இலங்கை அரசும் ஏற்றுக்கொள்ள நேரிடும். அதற்கு முதன்மையான சாட்சியமாக ஆதாரமாக வடக்கு மாகாண சபையால் ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் இருக்கிறது.
ஆற்றப்படதா காயங்கள்
வடக்கு மாகாண சபையின் இனப்படுகொலைத் தீர்மானத்தை இலங்கையின் புதிய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்திருப்பது தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட காயங்களை மறைக்கும் செயலே. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் கடந்த அறுபது வருடங்களாக ஆறாத காயங்கள். இனப்படுகொலையும் இன அழிப்பும் ஏற்படுத்திய காயங்கள் வடுக்களாக தங்கிவிட்டன. நிலைத்துவிட்டன. 83 கலவரங்கள் இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கின. அதைத் தொடர்ந்து யுத்தமும் இன அழிப்பும் தொடர்ந்ன. 2009இல் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை யுத்தம் மாபெரும் காயங்களை உருவாக்கியது. தமிழ் இனத்திற்கு மாபெரும் காயத்தை ஏற்படுத்திய யுத்தம் சிங்கள இனத்தினால் வீரமிகு யுத்தமாக கொண்டாடப்படுகின்றது.
இந்த யுத்தத்தில் தமிழ் மக்களின் லட்சகணக்கான உறவுகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் கொல்லபடப்டமைக்கான நீதியை தமிழ் சமூகம் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறது. பல்லாயிரக்கணக்கானவர்கள் சரணடைந்தும் காணாமல் போயுமுள்ளனர். அவர்களை தேடும் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. புதிய அரசு பதவியேற்ற பின்னர் அண்மையில் காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழு முன்பான சாட்சியம் வழங்கிய மக்கள் கண்ணீரோடு தெரிவித்தவை யார் எக்குற்றங்களை எவ்வாறு இழைத்தனர். அதற்கு மக்கள் என்ன நீதியை கோருகிறார்கள் என்பதை உணர்த்தின.
எந்த உதவிகளும் வேண்டாம். எங்கள் பிள்ளைகளே எங்களுக்கு வேண்டும். எங்களுக்கு நீதி வேண்டும். எங்கள் பிள்ளைகள் இப்போதும் இராணுவத்திடம் உள்ளனர். சிறைச்சாலையில் என் பிள்ளையை ஒருவர் கண்டார். மைத்திரியுடன் எனது மகள் காணப்படுகிறார். என் கணவரை பல நூறு போராளிகளுடன் இராணுவம் பஸ்ஸில் ஏற்றிச்சென்றது என்று ஒரு இனம் சந்தித்த மிகப் பெரிய இன அழிப்பின் கோரங்களின் ஒரு பகுதி குறித்த சாட்சியங்களை அண்மையில் யாழில் மக்கள் பதிவு செய்திருந்தனர்.
தமிழ் மக்களின் காயங்களை ஆற்றுவது மிக மிக அவசியமானது. இன மேலாதிக்கத்தை நிறுவும் வகையில் இன அழிப்பு நோக்கில் செய்யப்பட்ட யுத்தத்த்தின் காயத்தை ஆற்றுவதற்கு இலங்கை அரசு தயாராக இல்லை. உண்மைகளை பேசவும் மேற்கொள்ள வேண்டியவைகளை செய்யவும் தயங்கும் அரசு உண்மையில் யுத்தம் ஏன் நடந்தது? யுத்தத்தில் தமிழ் மக்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்று வெளிப்படையாக பேச தயங்குகிறது. யுத்தத்தத்தை கேள்விக்குட்படுத்தவும் அதனை உண்மையாக மதிப்பிடவும் தயங்காமல் இன அழிப்பு யுத்தத்தை புனிதப்படுத்துவது தமிழர் காயங்களை இன்னும் பெருப்பிக்கும்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமா?
இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் தமிழர்களின் பிரச்சினைக்கு இலங்கையின் புதிய அரசு 2016இல் தீர்வொன்றை முன்வைக்கவுள்ளதாக குறிப்பிடுகின்றது. புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க முனைவதாகவும் குறிப்பிடுகிறது. இது இலங்கை இனப்பிரச்சினையை தீர்க்க மெற்கொள்ளும் இதய சுத்தியான நடவடிக்கையா அல்லது ஜெனீவா போன்ற சர்வதேச காய் நகர்த்தல்களுக்கான நடவடிக்கையா என்பது தொடர்பில் தமிழர்களுக்கு பெரும் சந்தேகம் உண்டு. 2016இல் தீர்வு பெற்றுத் தரப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்து வந்தார். அண்மையில் மட்டக்களப்பில் கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசியபோது 2016ஆம் ஆண்டு தமிழர் போராட்ட சரித்திரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக அமையும் என்றும் இரா. சம்பந்தன் கூறியிருக்கிறார்.
ஆனால் கடந்த பொதுதத் தேர்தலில் வடகிழக்கு இணைக்கப்பட்டு சுயாட்சி பெற்றுத்தருவோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு தெரிவித்து வாக்கு கோரியது. வடக்கு கிழக்கு கடந்த அறுபது வருட காலமாக சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு சுயாட்சி ஒன்றே தீர்வு என்பதை அறுபது வருடங்களாக தமிழ் தலைவர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர். தமிழர் பிரச்சினைக்கு பண்டாரநாயக்காவே சுயாட்சித் தீர்வை வலியுறுத்தியவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமா? என்பதன் ஊடாகவும் 2016 முக்கியத்துவமான ஆண்டு.
எனவே தமிழ் மக்களின் பிரச்சினையை தேசிய இனப்பிரச்சினை தீர்க்கும் வதமான தீர்வு முன்வைக்கப்படுமா? அல்லது சர்வதேச அழுத்தத்திலிருந்து தப்பித்துக்கொள்ள தீர்வு என்ற பெயரில் எதாவது திணிக்கப்படுமா என்பது தொடர்பில் தமிழர்கள் மத்தியில் சங்தேகங்கள் நிலவுகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கான நிரந்தரமான நியாயமான தீர்வுக்கே இணங்கும் என்பதும் தமிழ் மக்களின் நம்பிக்கை. எனவே தமிழரை்களின் சுய உரிமைகள் அங்கீகரிக்கப்படுவதும் அவர்களின் காயங்கள் ஆற்றப்படுப்படுவதும் அவர்களுக்கு நிகழ்ந்த அநீதிகளை ஏற்றுக்கொள்வதும் ஒன்றோடு தொடர்புடையவையும் அவசியமானவையும். இந்த மாற்றங்கள் இந்த ஆண்டிலாவது நிகழுமா?