ஏகலைவன் பெரு விரலைக் கொடுத்தான் மாணவர்களே! நீங்கள் என்ன கொடுப்பீர்கள்


அதுவொரு பாடசாலை போல இருக்கிறது. ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்குப் பாடம் புகட்டிக் கொண்டிருந்தார். பிள்ளைகளே! குருவுக்கு மரியாதை-மதிப்பு செய்வது மாணவர்களின் தலையாய கடமை.

குருவை நிந்தனை செய்வது மிகப்பெரும் பாவம். ஆகவே எமக்குக் கற்றுத் தந்த ஆசான்களை போற்றி வணங்குவது எங்கள் வாழ்வின் சிறப்புக்கு வழிவகுக்கும். இப்படிக்கூறிய அந்த ஆசிரியர், மாணவர்களே! உங்களுக்கு ஏகலைவன் பற்றித் தெரியுமா? என்று கேட்டார். மாணவர்கள் தெரியாது என்றார்கள். 
மாணவர்களே! ஏகலைவன் மிகச் சிறந்த குருபக்தி உடையவன். வில்வித்தையை பயில வேண்டும் என்பது அவனின் நீண்ட நாள் விருப்பம். எனினும் அவனின் விருப்பத்தை நிறைவேற்ற துரோணர் மறுத்து விட்டார். 

இந்நிலையில் துரோணரை தனது மானசீகக் குருவாகக் கொண்டு வில்வித்தையைக் கற்க ஆரம்பித்து அதில் விற்பன்னன் ஆகினான் ஏகலைவன். 
ஒருநாள் துரோணாச்சாரியாரும் அருச்சுனனும் காட்டுக்குச் செல்கின்றனர். கூடவே அவர்களின் நாயும் செல்கிறது. காட்டில் ஏகலைவன் செய்து வைத்திருந்த துரோணாச்சாரியாரின் சிலை மீது அந்த நாய் சிறுநீர் கழித்தது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஏகலைவன் தன் அம்பை எடுத்து நாய் மீது ஏவினான். அந்த மாத்திரத்தில் நாய் வீழ்ந்து உயிர் துறந்தது. 
அம்புபட்டு நாய் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்த துரோணர் அதிர்ச்சி அடைந்தார். என்ன அதிசயம் ஒரு அம்பு ஆயிரம் துளைகளை நாய் மீது ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வில்வித்தையை நான் அருச்சுனனுக்கு மாத்திரமே சொல்லிக் கொடுத்தேன்.

இந்தக் காட்டில் யார் இந்த வில்வித்தையை பயின்றுள்ளது என்று அதிசயித்த துரோணர், நாய்  மீது அம்பு எய்தியது ஏகலைவன் என்று அறிகிறார். ஓர் அம்பில் ஆயிரம் துளையிடும் கலையை ஏகலைவன் பிரயோகிப்பதை துரோணர் விரும்பவில்லை. 
இதனால் தன்னை மானசீகக் குருவாகக் கொண்ட ஏகலைவனிடம் அவனது வலது கரத்து பெருவிரலை குரு தட்சணையாகக் கேட்க, ஏகலைவன் தன் விரலை வெட்டி தனது மானசீகக் குருவான துரோணருக்கு குரு தட்சணையாகக்  கொடுக்கிறான். 

பார்த்தீர்களா மாணவர்களே! தனக்குப் படித்துக் கொடுக்காத குரு மீது ஏகலைவனுக்கு இத்துணை பக்தியிருக்குமாயின்  கற்றுக் கொடுத்த ஆசான் மீது உங்களுக்கு அதீத  பக்தி இருக்கவேண்டுமல் லவா? ஆசிரியரின் கேள்விக்கு மாணவர்கள் ஆம் என்று உரத்த குரலில் பதில் சொன்னார்கள். 
அது சரி, நீங்கள் படித்துப் பட்டம் பெற்று பெரிய வர்களான பின் உங்களின் குருதட்சணை என்ன வாக இருக்கும்? இப்படி ஆசிரியர் கேட்க, ஒரு மாணவன் எழுந்து சேர் நான் பெரியவன் ஆனதும் நீங்கள் அப்போது என்ன பதவியில் இருக்கிறீர்களோ! அந்தப் பதவியில் இருந்து ஆளை நீக்கு என்று சொல்லுவேன் என்றான். ஆசிரியர் அதிர்ந்து போனார்.  

அச் சமயம் எழுந்த இன்னொரு மாணவன், சேர் கவலைப்படாதீர்கள். இது கலி காலம் குரு தட்சணை இப்படித்தான் இருக்கும். இருந்தாலும் குருவின் தட்சணை பலமாக இருந்தால் எல்லாம் சரியாகும் என்றான் பலத்த குரலில். அந்த மாணவனின் உரத்த குரலில் திடுக்குற்றேன். கண்டது கனவு என்பது அப்போதுதான் தெரிந்தது.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila