25 வருடங்களாக முகாம்களில் வாழும் மக்களை சொந்த இடங்களிலே குடியேற்ற வேண்டும்: சீ.வி.விக்னேஸ்வரன்

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்து கடந்த 25 வருடங்களாக முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் அவர்களுடைய சொந்த நிலங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும்.

சொந்த நிலங்களில் மீள்குடியேற்றப்படாமல் அதற்குப் பதிலாக எடுக்கப்படும் மாற்று நடவடிக்கைகள்,  அந்த மக்களின் தொழில் மற்றும் வாழ்க்கை முறையை பாதிக்கும் வகையிலேயே அமையும். மக்கள் கடந்த 25 வருடங்களாக முகாம்களில் அனுபவிக்கும் இன்னல் நிறைந்த வாழ்க்கை குறித்து நாங்கள் நன்றாக அறிந்திருக்கிறோம்.  அதற்கான தீர்வு மக்களை அவர்களுடைய நிலத்தில் மீள்குடியேற்றுவதேயாகும். மேற்கண்டவாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்குச் சென்றிருந்த முதலமைச்சர் அங்கு மக்களுடன் பேசியிருந்தபோது தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மற்றும் தங்களுடைய மீள்குடியேற்றத்தின் தேவை தொடர்பாக மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் என்ன?
அண்மையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் மீள்குடியேற்றம் தொடர்பான மாவட்ட மற்றும் மாகாண மட்ட செயற்பாட்டு குழு இவ்விடயத்தை கவனத்தில் எடுக்குமா? என்பன குறித்துக் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
மக்களுடைய நிலங்களை மக்களிடமே வழங்குவதற்கு படையினர் பின்னிற்கின்றார்கள். மேலும் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கலாம் என கூறும் படையினர்
பின்னர் வலைகளையும், படகுகளையும் எடுத்துக் கொண்டு தங்களுடைய தற்காலிக இருப்பிடங்களுக்கு திரும்பி விடவேண்டும் எனக்கேட்கின்றார்கள்.
எனவே இவ்வாறான கஸ்டம் நிறைந்த ஒரு ஒழுங்கமைப்பை மக்கள் ஒத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் மக்கள் தங்களுடைய சொந்த நிலங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்பதுடன்,
நேற்றைய தினம் கோணப் புலம் முகாமிற்குச் சென்றிருந்தபோது அங்கு தாங்கள் கடந்த 25 வருடங்களாக படும் கஸ்டங்கள் தொடர்பாக மக்கள் எமக்கு சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
குறிப்பாக 10 குடும்பங்களுக்கு ஒரு மலசலகூடம் அமைக்கப்பட்டிருப்பதாக கூட சொன்னார்கள். இதனை விட வறுமை, இளவயது திருமணங்கள், முறையற்ற கர்ப்பங்கள், உள்ளிட்ட பல சிக்கல்கள் உள்ளதாக கூறினார்கள்.

இந்நிலையில் இந்த மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யாமல் மாற்று இடங்களில் மீள்குடியேற்றினால் அது அந்த மக்களின் முழுமையான பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது.
குறிப்பாக சொந்த நிலங்களில் மீள்குடியேற்றாமல் மாற்று இடங்களில் மீள்குடியேற்றுகிறோம் என்ற பெயரில் கடலே இல்லாத இடத்தில் குடியேற்ற முடியாது.
காரணம் அந்த மக்களுடைய அடிப்படை வாழ்வாதார தொழில் கடற்றொழிலாகும். எனவே இவ்வாறான சிக்கல்கள் உள்ளது.
எனவே அவர்கள் தங்கள் சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். ஆனால் மக்களுடைய சொந்த நிலங்களில் அவர்களுடைய வீடுகள் அனைத்தும் இடித்து வெறும் தரையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாங்கள் அந்தப் பகுதியை கூகுள் படங்கள் மூலம் அவதானித்து அங்கு வீடுகள் இருந்தமைக்கான ஆவணங்களையும், அவை யாருடைய வீடுகள் என்ற ஆவணங்களையும் பெற்றிருக்கின்றோம்.
எனவே எம்மை பொறுத்தமட்டில் மக்கள் அவர்களுடைய சொந்த நிலங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்தும் எடுப்போம் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்த இலங்கையில் சட்டங்கள் இல்லை- சீ.வி.விக்னேஸ்வரன்
இந்திய- தமிழக மீனவர்கள் மட்டுமல்லாமல் வடமாகாணத்தின் சில மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களும் இழுவை படகுகளை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
ஆனால் இழுவை படகுகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் இலங்கையில் இல்லை.
இந்நிலையில் அரசாங்கம் இழுவை படகுகளை எங்கள் கடப்பகுதியில் பயன்படுத்துவதற்கு முழுமையான தடைவிதிக்க வேண்டுமாயின் அதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும்.
அதற்கான கோரிக்கைகளை நாங்களும் பல தடவை முன் வைத்திருக்கிறோம் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை மேற்கண்டவாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்துக்கோரும் கோரிக்கைகள் வலுப்பெற்றுவரும் நிலையில் இலங்கையில் குறிப்பாக வடமாகாணத்திலும் இழுவை படகுகள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றமை தொடர்பிலும்,
குறிப்பாக இந்திய இழுவை படகுகளால் உண்டாகும் பாதிப்புக்களை ஒத்த பாதிப்புக்கள் எமது மீனவர்களாலும் மற்றைய மீனவர்களுக்கு உண்டாக்கப் படுகின்றமை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
குறித்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மாதம் கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட வேரவில், கிராஞ்சி பகுதிகளுக்குச் சென்றிருந்தபோது யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளின் இழுவை படகுகளால் பெரும் பாதிப்புக்களை தாங்கள் சந்தித்துக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்யுள்ளனர்.
எனவே இங்கு முக்கியமான விடயம் இழுவை படகுகளை கட்டுப்படுத்துவதற்கு மற்றும் முழுமையாக நிறுத்துவதற்கு இலங்கையில் சட்டங்கள் எவையும் இல்லை.
இந்நிலையில் அவ்வாறான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக முன்னைய கடற்றொழில் அமைச்சிடமும், தற்போதைய
ஜனாதிபதியிடமும் கூட நான் சுட்டிக்காட்டியிருக்கின்றேன்.
ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் இழுவை படகுகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தை இலங்கை, இந்திய அரசாங்கங்கள் உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்பதுடன்,
இழுவை படகுகளை, வங்காள விரிகுடா அல்லது அரபுக் கடலுக்குள் சென்று மீன்பிடிப்பதற்கான முறைமை அமுல்ப்படுத்தப்பட வேண்டும் உண்மையில் இழுவை படகுகள் வருவதற்கு முன்னர் எமது பாரம்பரிய மீன்பிடியாளர்கள் மிகவும் நிம்மதியாக தமது தொழிலைச் செய்து கொண்டிருந்தார்கள்.
ஆனால் இழுவை படகுகள் வந்ததன் பின்னர் அவர்களுடைய வாழ்வாதாரம் மற்றும்க கடல் வளம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் எம்மால் அதாவது வடமாகாண சபையினால் இழுவை படகுகளை தடை செய்வதற்கான சட்டங்களை உருவாக்க முடியாது. என்பதுடன் நாம் அவைகுறித்துப் பேசினாலேயே தெற்கில் உள்ள ஊடகங்கள் இவர் எப்படி பெருங்கடல் விடயங்களை பற்றி பேச முடியும்?
இவருக்கு நன்னீர் மீன்பிடி தொடர்பான உரித்து மட்டுமே உள்ளது என உடனேயே பேசுகின்றன. எனவே இழுவை படகுககளை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவே அதற்கான கோரிக்கைகளை தொடர்ந்தும் நாம் கொடுக்கலாம் என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila