நீண்டகாலமாக எங்கள் பிள்ளைகள் சிறைகளில் வாடுவது குறித்து இதுவரை யாரும் கவனம் செலுத்தாத நிலைமையே இருந்து வந்துள்ளது.
தங்களின் விடுதலைக்காக தாங்களே போராட வேண்டும் என்ற துணிவோடு, சிறைகளில் அடைக் கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதையடுத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி சகலரும் சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இருந்தும் கொழும்புத் தமிழ் அரசியல் தலைமையின் நேர்மையற்ற போக்குகள் காரணமாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது இன்னமும் சாத்தியமாகவில்லை.
எதிர்க்கட்சித் தலைமையைப் பெற்றுக் கொள்வதற்காக கடும் முயற்சி செய்தவர்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் அத்தகையதொரு முயற்சியை எடுத்திருந்தால், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகியிருக்கும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையையும் முன்வைத்திருந்தால், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான கையோடு தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை பெற்றிருப்பர். ஆனால் கைதிகளின் விடுதலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமைக்கு கிஞ்சித்தும் விருப்பமில்லை.
இதனால் கைதிகளின் விடுதலை பற்றி அவர்கள் எதுவும் கதைக்கவில்லை. மகிந்தவின் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவுக்கு; மைத்திரி ஜனாதிபதி யானதும் பீல்ட் மார்சல் என்ற உயர் கெளரவப் பட்டம் வழங்கப்பட்டது.
மகிந்த ராஜபக்வின் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்டு எம்.பி பதவியையும் இழந்திருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்சல் பட்டத்தை ஜனாதிபதி மைத்திரி வழங்கியபோது,
ஐயா! எங்கள் தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுவியுங்கள் என்று தமிழ் அரசியல் தலைமை கேட்டிருந்தால் நிச்சயமாக தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை பெற்றிருப்பர்.
சரியான காலநேரத்தை தவறவிட்டு தாமும் பதவியைப் பெற்ற பின்னர், தமிழ் அரசியல் கைதிக ளுக்கு பொது மன்னிப்பு வழங்குங்கள் என்றால் அதற்குச் சாட்டுதல்கள் சொல்லவே செய்வர்.
என்ன செய்வது! முற்று முழுதாக சுயநல நோக் குடைய கொழும்புத் தமிழ் அரசியல் தலைமையின் போக்கால் எங்கள் பிள்ளைகள் விடிவின்றி சிறைகளில் வாடுகின்றனர்.
கைதிகளின் விடுதலை பற்றி பேச வேண்டிய நேரத்தில் பதவி பெற்றவர்கள் நாட்டிலேயே இல்லை. சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளில் தமது பிள்ளைகளும் இருந்திருந்தால் இவர்கள் வெளிநாட்டுக்குச் செல்வார்களா என்ன?
ஆக, வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் அவரின் நேர்மைக்கு ஆதரவு கொடுக்கின்ற தமிழ் அரசியல்வாதிகளுமே இன்று கைதிகளின் விடுதலை தொடர்பில் கடும் பிரயத்தனம் எடுக்கின்றனர்.
எது எப்படியாயினும் நீண்டகாலமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் விடுதலை வழங்கப்பட வேண்டும். இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்வது அவரின் தார்மீகக் கடமை.
கைதிகளின் விடுதலையை தாமதிப்பதென்பது நல்லாட்சியிலும் தமிழர்களுக்கு கேடுதான் என்பதாக நிலைமை முடிந்துவிடும்.