யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட புகையிரத நிலையம் மற்றும் பொதுநூலகம் என்பவற்றின் கட்டிட நிர்மாணம் பற்றி இன்று வரை புகழ்ந்து பேசப்படுவதை நாம் அறிய முடியும்.
இது மட்டுமல்ல அந்தக் காலத்தில் வடபகுதியில் அமைக்கப்பட்ட வைத்தியசாலைகள், கிராம சபைகள் இன்றும் கம்பீரமாக காட்சி தருவதைக் காண முடிகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள பரமேஸ்வராக் கல்லூரியின் கட்டிடம் இன்று இராமநாதன் கட்டிடம் என்ற பெயரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடையாளச் சின்னமாகக் காட்சி தருகிறது.
யாழ்ப்பாணம் என்றால் நல்லூர் கந்தன் ஆலயத்தின் முகப்புத் தோற்றம், யாழ்.பொது நூலகத்தின் முன் அமைப்பு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் கட்டிடம் என்பவற்றால் சான்றுப் படுத்தப்படுகின்றது எனின், அவற்றின் உருவாக்கத்தின் பின்னணியில் இருந்த நிபுணத்துவ சேவையின் கனதி பற்றி அறியமுடியும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தலைமை நிர்வாகம் இயங்குகின்ற இராமநாதன் கட்டிடம் பழைமையாகிவிட்டது. எனவே அதனை உடைத்து அந்த இடத்தில் மீள்கட்டுமானம் செய்ய வேண்டும் என்று பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றவர்கள் கோரிக்கை விடுத்த காலம் அது.
அப்போது யாழ்.பல்கலைக்கழகத்தின் பதிவாள ராக மிகச் சிறந்த நிர்வாகி சிவராசா அவர்கள் கட மையாற்றிக் கொண்டிருந்தார். அந்தக் கட்டிடத்தை உடைப்பதா? இல்லையா? என்பதை முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் க.துரைராஜா அவர்களே தீர்மானிப்பார் என்று முடிவு செய்யப்பட்டது.
கட்டிடத்தின் சுவரில் துளையிட்டு ஒரு பரிசோதனையை நடத்திய பேராசிரியர் துரைராஜா அவர்கள் இன்னும் 75 வருடத்திற்கு இந்தக் கட்டிடத்தில் எந்தப் பழுதும் ஏற்படாது என்று கூற, அதனால் அந்தக் கட்டிடம் காப்பாற்றப்பட்டது.
சேர் பொன்.இராமநாதனின் அடையாளத்தை இல்லாதொழிப்பதற்காகவே அந்தக் கட்டிடத்தை உடைக்க வேண்டும் என்று சிலர் நினைத்தனர் என்ற விமர்சனம் அப்போது எழுந்ததும் உண்டு.
எதுவாயினும் பேராசிரியர் க.துரைராஜா என்ற உலகப் புகழ்பெற்ற நிபுணர் இருந்தமையால் அந்த உன்னதமான கட்டிடம் காப்பாற்றப்பட்டது.
இனி எவர் நினைத்தாலும் அந்தக் கட்டிடத்தில் கைவைக்க முடியாது என்றளவில் தொல்லியல் சிறப்பு மிக்க கட்டிடமாக அது பெறுமதி பெற்றுள்ளது.
ஆக, ஒரு காலத்தில் வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட கட்டுமானங்களில் நிபுணத்துவ சேவை முதன்மை பெற்றிருந்தது. ஆனால் இன்று அந்த நிலைமை அறவேயில்லை எனலாம். இத ற்கு திருநெல்வேலியில் அமைக்கப்பட்டுள்ள சந்தைக் கட்டிடம் தக்க சான்றாகும்.
இதுமட்டுமல்ல வீதிகள், பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் என எல்லாமுமே ஏதோ ஒரு வகையில் பலவீனமானவையாக -உரிய நிபுணர்களின் வழி காட்டல்களில் அமைக்கப்படாதவையாக இருப்பதைக் காணமுடியும்.
இத்தகைய போக்குகள் வடபுலத்தில் ஒழுங்கற்ற கட்டுமானத்தையே உருவாக்கும் என்பதால், இது தொடர்பில் பொறுப்பானவர்கள் கவனம் செலுத்த வேண்டும். இது மிகவும் அவசியமானது.