ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் அரசு விசாரணை செய்ய வேண்டும் (வடக்கு மாகாணசபையில் தீர்மானம்)


தென்னிலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது போன்று, யுத்தத்திற்கு முன்னர் வடக்கு கிழக்கினை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்மை தொடக்கம் இறுதியாக வலம்புரி பத்திரிகையின் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் வரை புதிய அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கோரும் தீர்மானமொன்று வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் கைதடியில் நடைபெற்றது. இதன் போதே உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம், அ.பரஞ்சோதி ஆகியோரால் பிரேரணை கொண்டுவரப்பட்டு உறுப்பினர்கள் அனைவரது ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
கடந்த அரசு பதவியிலிருந்தபோது நடைபெற்றதாக கருதப்படும் அரசியல் வாதிகள் ஊடகவியலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் படுகொலை சம்பந்தமாக தற்போதைய அரசாங்கம் மீள எடுத்து விசாரித்து வருவதை இந்த சபை பாராட்டுவதோடு, அவ்வாறே தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் பிரகீத் எக்னெலிகொட, லசந்த விக்கிரமதுங்க ஆகியோரது படுகொலைகளும் தற்போது விசாரிக்கப்படுகின்றன.
ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் பல ஊடகவியலாளர்கள் கடந்த அரசின் காலத்தில் படுகொலை செய்யப்பட்டும் தாக்கப்பட்டும் கடத்தப்பட்டும் ஊடக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டும் எரியூட்டப்பட்டும் உள்ளன. ஆனால் அது பற்றி உரிய விசாரணை நடாத்தப்படாமல் காலங்கடத்தப்பட்டு வந்தமை யாவரும் அறிந்தமையே.
ஊடகவியலாளர் தராக்கி சிவராம், நிமலாராஜன் என பலர் வடக்கு கிழக்கில் கடந்த காலங்களில் கொல்லப்பட்டிருந்தனர். இக்கொலைகள் தொடர்பிலும் இப்போது உள்ள புதிய அரசு விசாரணை மேற்கொண்டு கொலைகளுக்கான நீதியினை வழங்க வேண்டும்.
குகநாதன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இனங்காணப்பட்ட போதிலும் அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை, மற்றும் இறுதியாக வலம்புரி பத்திரிகையின் ஊடகவியலாளர் உதயராசா சாளின் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆகவே இந்த இறுதி தாக்குதல் வரையான காலப்பகுதிக்குள் ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் விசாரணை செய்யப்பட வேண்டும்.
என பிரேரனையை பிரேரணையை முன்மொழிந்தனர். இதனையடுத்து உறுப்பினர்களின் ஏகொபித்த ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. பிரேரணையின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதம மந்திரி, சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை அமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila