அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :- ‘விடுதலைப் புலிகள் காலத்தில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை இன சுத்திகரிப்பு என யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கூறியிருப்பது பிழையான கருத்தாகும். இதனை அவர் கூறுவதன் மூலமாக தன்னை தானே சிலருக்காக சுத்திகரித்துக் கொள்ள முயற்சிக்கின்றார் என்ற சந்தேகம் எழுகின்றது. வட மாகாணத்திலிருந்து முஸ்லிகள் வெளியேற்றப்பட்டமையை ஒரு போதும் நியாயப்படுத்தி விட முடியாது. இருப்பினும் அன்றைய யுத்த கால தமிழ் தேசிய போராட்டத்தின் காலத்தின் கட்டாயமாக இந்நிகழ்வு இடம்பெற்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. வடக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்பு அவர்களது நிலங்களை விடுதலைப் புலிகள் அபகரித்து தமிழர்களுக்கு தாரை வார்க்கவில்லை. அதே போல் முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து வெளியேறியதன் காரணமாக யுத்தத்தின் மூலமான நேரடி தாக்குதல்களிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள கூடியதாக இருந்தது. முஸ்லிம் மக்களின் உயிரிழப்புகள் இதன் மூலம் தவிர்க்கப்பட்டது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் இனத்தை அடக்கி ஆளும் சிங்கள அரசாங்கத்தின் இராணுவதிற்கு எதிரான தமிழ் தேசிய போராட்டத்தின் போது இப்படியான சில எதிர்மறை நிகழ்வுகள் தவிர்க்க முடியாத ஒன்றாகும். இன்று தன்னை வெகு சுத்தமான மனிதனாக காட்டிக் கொள்வதற்காக வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை இன சுத்திகரிப்பு என்று சொல்லும் இந்த பாராளுமன்ற உறுப்பினர் விடுதலைப் புலிகள் இன்றும் இருப்பார்களேயாயின் வாய் திறந்து தைரியமாக பேசுவாரா? இதனைப் பார்க்கும் பொழுது இவரை விட தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி நேர்மையான மனிதராக தெரிகின்றார். இன்று இவ்விடயம் சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் கிட்டத்தட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இவரது கூற்றை கடுமையாக எதிர்க்கின்றார்கள் என்று தெரிந்தும் இவர் இதனை மீண்டும் வலியுறுத்துவதன் மூலம் சர்வதேசத்திற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தாளத்திற்கும் ஆட முயற்சிக்கின்றார். முஸ்லிம் மக்களின் நியாயமான உணர்வுகளை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். அவர்களது உரிமைப் போராட்டங்கள் முன்னெடுக்கும் போது அதற்கு நாங்கள் துணை நிற்க தயாராக இருக்கின்றோம். அதேநேரத்தில் எமது விடுதலைப் போராட்ட காலத்தில் அவர்கள் எந்த அளவு எமக்கு உறுதுணையாக நின்றார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இன்று நல்லாட்சி என்று சொல்லப்படும் இந்த ஆட்சியில் தமிழ் மக்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டு விட்டது. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு விட்டது. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். தமிழர் தாயக நிலங்கள் மீண்டும் கையளிக்கப்பட்டு விட்டது. இடிக்கப்பட்ட இந்து கோயில்கள் கட்டி முடிக்கப்பட்டன. தமிழ் மொழி அமுலாக்கம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வடக்கிலிருந்து இராணுவம் விலக்கப்பட்டு விட்டது. வடமாகாண சபைக்கு பொலிஸ் காணி முதற்கொண்டு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டு விட்டது. மேற்குறிப்பிட்ட அனைத்து விடயங்களும் நடைபெற்று விட்டதாக கனவு காணும் இந்த பாராளுமன்ற உறுப்பினர் நடந்து முடிந்த தமிழ் தேசிய போராட்டத்தினை சுய சிந்தனையுடன் திரும்பி பார்க்க வேண்டும். இன்று இவரது கருத்தின் மூலமாக வடக்கிலிருந்த வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினையினை ஐ.நா விசாரனை பொறிமுறையில் உள்ளீர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உருவாகியுள்ளது. இதன் மூலம் தமிழ் மக்களுக்கான நியாயமான ஐ.நா விசாரனை தடம்புரள வழிவகுத்துள்ளது.’ என்றும் கூறினார். |
சுமந்திரனின் கருத்து ஐ.நா விசாரணையை தடம்புரள வைத்து விடும்! - பிரபா கணேசன்
Related Post:
Add Comments