அவுஸ் சிட்னியில் எனக்கு நடந்தது என்ன - விளக்குகிறார் சுமந்திரன்

இனவழிப்பு நடக்கவில்லையென நான் சொன்னதாக ஒரு பொய்க் குற்றச்சாட்டை தொடர்ச்சியாக முன்வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். தேர்தலுக்கு முன்னரும் இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டது.
இனப்படுகொலை பற்றி இலங்கைப் பாராளுமன்றத்திலே பேசிய முதலாவது நபர் நான்.

அந்த வகையில், இனப்படுகொலை நடக்கவில்லையென எந்தக் கால கட்டத்திலும் எங்கேயும் நான் சொன்னது கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் லங்காசிறி  24 செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.
சுமந்திரனுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்
அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.  சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் இன்று  அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகவும், இதன் போது சுமந்திரனுக்கு எதிராக கூடியிருந்த இளைஞர்கள் தமது கருத்தை வெளியிட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர் அமைப்புக்களைச் சந்திப்பதற்கும் சுமந்திரன் அங்கு சென்றிருந்தார்.
ஆனால் திடீரென அங்கு கருத்து மோதல் ஒன்று ஏற்பட்டதாகவும்,  இதன் போது அண்மைய நாட்களாக சுமந்திரனின் அரசியல் செயற்பாடானது, தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக புலம் பெயர் தமிழ் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் அங்கு கூடியிருந்த இளைஞர்கள்  சுமந்திரனுடைய அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் தமிழ் மக்களின் உண்மையான தேசிய போராட்டத்தை கொச்சைப்படுத்தி களங்கப்படுத்துவதாகவே அமைந்திருப்பதாக  ஆவேசமாக பேசியுள்ளனர்.
இதன் பின்னர் வாய்த் தர்க்கம் ஒன்று ஏற்பட்டு, அங்கு பரபரப்பான சூழ்நிலை ஒன்றும் ஏற்பட்டது. இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் இளைஞர் ஒருவர், தமிழ் அரசியல் கைதிகள் 7ம் திகதி விடுதலை செய்யப்படுவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில், நீங்கள் இந்த சூழலில் இங்கே வந்தது சரியா என்றும் கேள்வி எழுப்பினர்.
இதேவேளை இன்னும் சில இளைஞர்கள், சுமந்திரனிடம் எமது விடுதலைப் போராட்டத்தை பற்றி கொச்சையாக பேசுவதற்கு உமக்கு உரிமையில்லை என்று ஆவேசப்பட்டார்கள் என அங்கு கூடியிருந்தவர்கள் தெரிவித்தனர்.
எனினும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை அவுஸ்திரேலிய பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
கடந்த ஒரு சில வாரத்திற்கு முன்னர் கொழும்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில் பேசிய சுமந்திரன் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு தான் தமிழ்ப் பிரதிநிதி என்ற வகையில் வெட்கித் தலைகுனிவதாக தெரிவித்திருந்ததுடன், முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் போது தமிழ் மக்கள் மௌனம் சாதித்தமை தவறானது என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila