சுமந்திரனின் சுத்துமாத்துக்கள் என்ன ? - வலம்புரி காட்டம்


தமிழ் மக்கள் இப்போது தமிழ் அரசியல் தலைமையினால்
ஏமாற்றப்பட்டு வருகின்றனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் இன அழிப்பு இலங்கையில் நடைபெறவில்லை என்று கூறியிருந்தார். அந்தக் கூற்றுத்தான் சர்வதேச விசாரணையை இல்லாமல் செய்தது என்பதை எம் இனம் அறியாமல் இருந்தால் அது பெரும் அபத்தமாகும்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த மிகப்பெரும் கொடூரப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட நிட்டூரம் பற்றி இம்மியும் சிந்திக்காது, இலங்கையில் தமிழின அழிப்பு நடை பெறவில்லை என்று தமிழ் அரசியல் தலைமை கூறுமாக இருந்தால், இதைவிட அக்கிரமம் வேறு எதுவுமாக இருக்காது. 

எது எவ்வாறாயினும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் உள்ளக விசாரணையை முன்னெடுக்கும் போது அதில் விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களுமே குற்றவாளிகள் என்று நிரூபிக்கின்ற முயற்சிகள் பெரும் எடுப்பில் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில்தான் அனைத்து நகர்வுகளும் இடம்பெறுகின்றன. 

குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதன் 25ஆவது ஆண்டு நிறைவு அண்மையில் நினைவு கூரப்பட்டது. முஸ்லிம் அரசியல் தலைமையை பின்னணியாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையை தமிழ் மக்கள் கூட்டாக தடுத்து நிறுத்தவில்லை. இதற்காக தமிழ் மக்கள் தலை குனியவேண்டும் என்று கூறியிருந்தார். 

ஆக, 25 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவத்தை இப்போது முதன்மைப்படுத்துவதன் மூலம் விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் குற்றவாளிகள் என்று நிரூபணம் செய்யப்படுகின்றது. இதன்மூலம் போர்க்குற்ற விசாரணையைப் பலவீனப்படுத்துவது அல்லது விசாரணையை தமிழர்களுக்கு பாதகமாக்குவது என்ற செயற்பாடு, அரசுடன் இரகசிய உடன்பாடு செய்துகொண்ட தமிழினப் பிரதிநிதித்துவம் சிலவற்றின் முடிவாகும். 

இத்தகையதொரு நோக்கிலேயே மேற்படி 25 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு நடத்தப்பட்டது. இது தவிர, மிக நீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் தமிழ் அரசியல் தலைமை விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை. தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரி நினைத்திருந்த போதிலும் தமிழ் அரசியல் கைதிகளை மூன்று வகைமையாகப் பிரித்து சிலருக்கு பிணை, சிலருக்கு தொடர்ந்து சிறை என்ற மிக மோசமான குழப்பத்தை செய்தவர்கள், அதற்கு திட்டம் தீட்டியவர்கள் எங்கள் பிரதிநிதி (கள்) என்பது முற்றுமுழுதான உண்மை. 

இவை எல்லாம் வெளிப்படையாக நடந்து கொண் டிருக்கும் போது இன்னமும் தமிழ் அரசியல் தலை மையை நாங்கள் நம்பிக் கொண்டிருக்கிறோமே இதுதான் மிகப்பெரிய அபத்தம். எனவே அன்புக்குரிய தமிழ் புத்திஜீவிகளே! தமிழ்ப் பற்றாளர்களே! தமிழர்களுக்கான புதிய அரசியல் தலைமை பற்றி சிந்தியுங்கள். இந்தச் சிந்தனை ஏற்படாத வரை நாங்கள் நம்பிக் கெட்டுப் போவது தவிர்க்க முடியாததே.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila