வவுனியா வடக்கில் தனிக்கல்லை அண்டியுள்ள 400 ஏக்கர் விவசாய நிலம் பறிபோகும் அபாய நிலை

வவுனியா வடக்கில் தனிக்கல்லு குளத்தையண்டிய 400 ஏக்கர் விவசாய நிலம் பறிபோகும் அபாயநிலையில் இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
1965 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்ட இக்குளம் கடந்த 50 வருடங்களாக புனரமைக்கப்படாத நிலையிலேயே உள்ளது. 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரங்களையடுத்து இடம்பெயர்ந்த இப்பகுதி விவசாயிகள் 2010 ஆம் ஆண்டு மீள்குடியேறிய போது குறித்த குளத்தின் கீழான வயற்காணிகள் எல்லையோரத்தில் குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவரால் பயிர்செய்கைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால், மக்கள் தமது காணி ஆவணங்களைக் காட்டி அவற்றை அவர்களிடம் இருந்து மீட்டு, நெற் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 2012 ஆம் ஆண்டு குறித்த குளத்தினை புனரமைப்பு செய்வதாக கூறி விவசாய திணைக்கள பொறியியலாளரால் 10 மில்லியன் ரூபாய் தேவை என மதிப்பீடு செய்யப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால், அதன்பின் இன்று வரை இக்குளமானது புனரமைக்கப்படவில்லை. அதனால் 250 ஏக்கர் நீர்பாய்ச்சல் விவசாய காணிகளையும் செய்கை பண்ணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்யும் மழை நீரை முழுமையாக தேக்க முடியாத நிலையும் காணப்படுகின்றது. எமது வயற்காணிகள் ஊடாக அருகில் இருந்தும் எல்லையோர பெரும்பான்மை இனத்தவரின் குடியேற்றத்திற்கான பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
குளமும் புனரமைக்கப்படாத பட்சத்தில் இந்நிலத்தை நாம் இழக்க வேண்டி வரும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இது தொடர்பில் உரிய அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்தி தனிக்கல்லு குளத்தினை புனரமைத்து தரவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரியுள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila