வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களிற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் பருத்தித்துறை பிரதேச செயலக மண்டபத்தில் கடந்த 12ம் திகதி நடைபெற்றிருந்தது.
இந்நிலையில் அங்கு சென்றிருந்த வடமாகாணசபையின் கூட்டமைப்பு உறுப்பினர் கேசவன் சயந்தன் வருகை தந்திருந்த மக்களிடையே விடுதலைப் புலிகளுக்கு எதிராக சாட்சியங்களை வழங்குமாறு நிர்ப்பந்தங்களை பிரயோகித்திருந்தார்.
குறிப்பாக இலங்கை அரசிற்கு எதிராகவே எல்லோரும் சாட்சியமளித்தால் சர்வதேசம் நம்பமாட்டாதெனவும் அதனால் நீங்கள் புலிகளது கட்டாய ஆட்சேர்ப்பு போன்றவற்றினை சாட்சியத்தில் சொல்லவேண்டுமெனவும் நிர்ப்பந்தித்துள்ளார்.
இதனையடுத்து பொதுமக்களிற்கும் சயந்தனிற்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்த யாழ்ப்பாண ஊடகவியலாளர் சாளின் பின்னர் சயந்தன் அங்கிருந்து தப்பித்து சென்றிருந்ததாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஆறு நாட்களாக நடைபெற்றிருந்த அமர்வில் ஏனைய எந்தவொரு அமர்விற்கும் சென்றிராத சயந்தன் மருதங்கேணி பிரதேச செயலக அமர்விற்கு மட்டுமே சென்றிருந்தார்.
2009 வரை விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணத்தில் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவே இருந்திருந்தது.
இதனிடையே யாழ்ப்பாணத்தில் அளிக்கப்பட்ட வாக்குமூலங்களில் பெரும்பான்மையானவை இலங்கை முப்படைகளிற்கும் எதிராகவே செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.