இந்திய, அமெரிக்க நிலைப்பாடு என்ன?


காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அளித்த சாட்சியங்களை அறியும்போது நெஞ்சு வெட்டித்துவிடும் போல் உள்ளது. 

அந்தளவுக்கு எங்கள் மக்கள் தாங்கொணாத் துன்பங்களை தம் இதயங்களில் சுமந்து கொண்டுள்ளனர். 
அதேநேரம் அவர்கள் சாட்சியம் அளிக்கின்ற போது-அவர்கள் கூறுகின்ற சம்பவங்களைப் பார்க்கின்றபோது எங்கள் தமிழினம் அநாதையாக நிற்கின்றதோ என்று எண்ணத் தோன்றும். 

இருந்தும் அரசியல் தலைமைகளின் எந்தவித பக்க பலமும் இல்லாத போதும் காணாமல்போன தங்கள் உறவுகளை மீட்டு எடுக்க வேண்டும் என்பதற்காக எந்த ஆபத்து வந்தாலும் அதற்கு அஞ்ச மாட்டோம் என்ற துணிச்சலோடு அளித்த சாட்சியங்கள் கண்டு அழுகையிலும் எம் நெஞ்சம் உயர்ந்து கொள்கிறது. 

இவை எல்லாம் ஒருபுறம் நடந்து கொள்ளும் அதேநேரம், ஈழத்தமிழினத்தின் எதிர்காலம் என்பது இந்தியாவிடமும் அமெரிக்காவிடமும் இருப்பது தெரிகிறது. எனினும் இந்தியாவும் அமெரிக்காவும் எங்கள் விடயத்தில் ஒத்த தன்மையைக் கொண்டுள்ளனவா? என்பதுதான் இங்கு கேள்விக்குரியது.

ஈழத்தமிழர்களின் விடயம் தொடர்பில் அமெரிக் காவும் இந்தியாவும் கவனம் கொண்டிருந்தாலும் இரண்டு நாடுகளையும் சமாளித்தல் என்பதில் தமிழ் அரசியல் தலைமைகள் வெற்றி கண்டால் மட் டுமே எங்கள் இலக்கு அடையப்படும்.

எனினும் தமிழ் அரசியல் தலைமைகளில் இருக் கக்கூடிய சிலர் அமெரிக்கா பக்கம் சாய்ந்து போவதாக இந்தியா கருதுவதும் தெரிகிறது. 
இதனால்தான் அமெரிக்கத் தூதுவரும் இந்தியத் தூதுவரும் அடுத்தடுத்து வடக்கின் முதலமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர், வடக்கு மாகாண சபை முதலமைச்சரின் கருத்துக்கள் இறுக்கமானதாக இருப்பதாகக் கருதியுள்ளார். 

எதுவாயினும் கொழும்புத் தமிழ் அரசியல் தலைமையில் இருக்கக் கூடியவர்களில் ஒருவர் அமெரிக்கா பக்கமும் இன்னொருவர் இந்தியாவின் பக்கமுமாக நின்று கொண்டாலும் இருவரும் வடக்கின் முதல்வரை சுட்டிக்காட்டி அவரைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை இரண்டு நாட்டுத் தூதுவர்களி டமும் தனித்தனியாகக் கருத்துரைத்திருப்பர் போலும்.

இந்நிலையில் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் வடக்கின் முதல்வரின் இறுக்கமான போக்கை மனக்கிலேசத்துடன் நோக்கியுள்ளார். அதேநேரம் இந்தியத் தூதுவர் வை.கே.சிங்கா வடக்கின் முதல்வரை கொழும்புத் தமிழ் அரசியல் தலைமையுடன்  இணைந்து போகுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆக, இரண்டு நாட்டுத் தூதுவர்களும் தத்தம் நாடுகளின் பலத்தை இலங்காபுரியில் நிலை நிறுத்தும் பொருட்டு செயற்படுகின்றனர் என்பதே இறுதி முடிவாக இருக்கிறது. 

எதுவாயினும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற  உரிமைகள், அபிலாசைகள் தொடர்பில் மக்களின் கருத்தை யார் வலியுறுத்துகின்றனரோ அவர்கள்  பக்கம் தமது ஆதரவை தெரிவிக்க வேண்டிய கடப்பாட்டை உலக நாடுகள் கொள்ள வேண்டுமாயின் தமிழ் மக்களின் ஆதரவுடன் தீர்வுத் திட்ட வரைபு தயாரிக்கப்படுவது அவசியமாகும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila