தமிழ் மக்கள் பேரவையின் பொதுக்கூட்டம் அதன் உபதலைவர் எஸ்.வசந்தராசா தலைமையில் மட்டக்களப்பு நகரில் உள்ள கூட்டுறவு நிலைய ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்த் தேசிய முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன், ஈ.பி.ஆர்.எல்.பி. கட்சியின் பொதுச்செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் உட்பட தமிழ் மக்கள் பேரவையின் முக்கிஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்துஉரையாற்றிய கஜேந்திரன்,
பத்தாம் திகதியன்று உத்தேச வரவை வெளியிட இருக்கின்றார்கள். அதற்குப் பின்னர் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குப் பின்னர் சிலவேளைகளில் பொதுசன வாக்கெடுப்பிற்கு அதனை கொண்டுவரக்கூடும்.
அப்படி நடக்கும் சந்தர்ப்பத்தில் எங்களுடைய மக்கள் தமது அறியாமை காரணமாக ஏமாற்று சக்திகளின் கவர்ச்சியான பிரசாரங்களை நம்பி ஒற்றையாட்சிக்கு வாக்களித்து விடுவார்கள்.
சுதந்திரத்திற்குப் பின்னர் 68வருடங்களாக தமிழர்கள் நிராகரித்துவந்த ஒற்றையாட்சி முறை இலங்கையில் நடைமுறையிலிருக்கின்றது.
அதேபோன்றதொரு அரசியலமைப்பு தான் மீண்டும் வரப்போகின்றது. ஆனால் என்ன வித்தியாசமென்றால் 68 வருடங்களாக இல்லாத தமிழர்களின் ஆணை அதற்கு பெற்றுக்கொடுக்கப்படப் போகின்றது. இதுதான் இங்கிருக்கின்ற மிகப்பெரிய சதியாகும்.
வடகிழக்கு இணைப்பு இல்லாமல் ஒற்றையாட்சிக்குள் ஒரு பாராளுமன்றத்தில் 30ஆம் திகதியன்று நாங்கள் சமஷ்டியை கோரவில்லையென்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது.
அதாவது இறைமையை கோரவில்லையென்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது. சமஷ்டியை கோரவில்லையென்பதே அதன் அர்த்தமாகும்.
புதிய அரசியல் யாப்பானது தமிழ்த் தேசத்தினுடைய இறைமை, சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த அரசியல் யாப்பாக வரவேண்டும், இல்லையெனில் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்பதை முழு உலகிற்கும் சொல்லக்கூடிய வகையில் இந்த எழுக தமிழானது கிழக்கு மக்கள் ஒவ்வொருவரின் வீடுகளிற்கும் செல்ல வேண்டும்.
போருக்குப் பின்னரான இந்த ஏழு ஆண்டுகளில் முதன்முறையாக புலம்பெயர் தேசங்களில் இம்முறை இலட்சக்கணக்கான மக்கள் மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வுதான் அந்த ஒற்றுமையை கொண்டு வந்திருக்கின்றது.
நாங்கள் ஒற்றுமையாக ஓரணியில் நிற்கவேண்டும். அந்த அடிப்படையில் இந்த நிகழ்வு மிக அவசியமானது, அவசரமானது என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.