வலி வடக்குப் பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 700 ஏக்கர் நிலத்தை விடுவிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டமை தமிழ் மக்களுக்கு ஓர் ஆறுதலைத் தருகிறது.
அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மல்லாகத்துக்குச் சென்று வலி வடக்கில் இருந்து இடம் பெயர்ந்து நலன்புரி முகாம்களில் உள்ள மக்களைச் சந்தித்தார்.
இதன்போது தமது வாழ்விடங்கள் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதன் காரணமாக நலன்புரி முகாம்களில் தங்கியிருக்க வேண்டிய அவலநிலை இருப்பதாக மக்கள் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினர். இதனையடுத்து வலி வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சுமார் 700 ஏக்கர் நிலம் விடுக்கப்பட்டு உரியவர்கள் அங்கு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இச்செயலுக்கு தமிழ் மக்கள் நன்றியுடையவர்களாவர்.
அதேநேரம் அடிப்படைத் தேவைகள் மற்றும் தத்தம் உரிமைகளுக்காக அரசிடம் கோரிக்கை விடுதல் என்ற நிலைமை மக்களுக்கு இருக்குமா யின் அரசின்பணி பாகுபாடு உடையது என்றே கூறவேண்டும்.
அதாவது சொந்த வாழ்விடங்களை விட்டு வெளியேறி நலன்புரி முகாம்களில் மக்கள் இருக்கும் போது, அவர்களின் நிலத்தை படையினர் கபளீகரம் செய்து வைத்திருப்பது என்பது எந்த வகையிலும் நியாயமாகாது.
எனவே படையினர் வைத்திருக்கின்ற பொது மக் களின் நிலங்களை உடனடியாக விடுவித்து அங்கு மக்கள் மீளக்குடியமர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
இதற்காக எவரும் அரசிடம் கோரிக்கை விடவோ, உண்ணாவிரதம் இருக்கவோ வேண்டிய தேவை யில்லை என்ற நிலை உருவாக வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரியின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்ட 700 ஏக்கர் நிலம் என்பது தமிழ் மக்கள் காலாகாலமாக வாழ்ந்த மண். எனினும் அந்த இடத்தில் இன்று ஒரு குடிமனை தானும் இல்லை.
இருந்தவீடில்லை; வாழ்ந்த மனையில்லை; வேலியில்லை; கிணறில்லை; தேடிய தேட்டம் எது வும் இல்லை என்ற வெறுமையில் நலன்புரி முகா ம்களில் வாழும் மக்கள் எப்படி மீளக்குடியமர முடி யும்? என்ற கேள்வி அரசிடம் ஏற்பட வேண்டும். அவ் வாறான ஒரு கேள்விக்கான பதில், மீளக்குடிய மரும் மக்களுக்கு உடனடியாக வீட்டுத்திட்டம் வழ ங்கப்படும் என்பதே அரசின் அடுத்த செய்தியாக இருக்க வேண்டும்.
எனினும் உங்கள் காணிகளை விடுவித்தாயி ற்று எனி நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என் பது போல அரசு நடந்து கொள்ளக் கூடாது.
கேட்காமல், கோரிக்கை விடாமல் மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்து கொடுக் கப்பட வேண்டும்.
இந்த வரிசையில், நீண்ட காலமாக சிறையில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதும் கட்டாயமானதாகும்.
அரசியல் கைதிகள் சாகும் வரை உண்ணா விரதம் இருந்தால்தான் அவர்கள் பற்றி நினைப்பதென்பது அடிப்படை மனிதவுரிமை மீறலாகும். எனவே அரசாங்கம் என்பது தானாக முன்வந்து மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது, மனித உரிமைகளை பாதுகாப்பது என்பன தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் கோரிக்கை விடுவது, ஆர்ப்பாட்டம் செய்வது என்ற நிலைமை இருப்பது நல்லதல்ல.