வலி. வடக்கில் மக்களின் வீடுகளை உடைத்து உடமைகளை களவாடிய இராணுவத்தினர்

வலி. வடக்கில் புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த மக்களுடைய வீடுகளை உடைத்து அபகரித்துச் செல்லப்பட்ட ஓடுகள், கதவுகள், ஜன்னல்கள், நிலைகள் என்பவை இராணுவ முகாமிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை பொது மக்களால் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் விடுவிக்கப்பட்ட தையிட்டி பகுதியில் உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குள் உள்ள இராணுவ முகாமிற்குள்ளேயே இவ்வாறு பெரும் தொகையான மக்களுடைய சொத்து மறைத்து வைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைய இராணுவ உயர்பாதுகாப்பு வலையமாக உள்ள வலி.வடக்குப் பகுதியில் இருந்து மேலும் 486 ஏக்கர் நிலப்பரப்பு நேற்று முதல் விடுவிக்கப்பட்டிருந்தது,
தையிட்டி, வறுத்தளவினான் உள்ளிட்ட 6 கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டிருந்தது.
விடுவிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக அப்பகுதியினைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலனவர்கள் அங்கு விரைந்திருந்தனர். இருப்பினும் அப்பகுதிகள் முழுவதும் பற்றைக் காடுகளாக உள்ள காரணத்தினால் தமது காணிகளை அவர்கள் தேடிப் பிடிப்பதில் பெரும் சிரமத்தினை எதிர் கொண்டிருந்தனர்.
மேலும் அங்கிருந்து வீடுகள் பல தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாலும் மக்கள் தமது காணிகளை தேடிப்பிடிப்பிதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் மக்கள் தமது வீடுகளை கண்டுபிடித்தாலும் அவர்களுடைய வீடுகள் உடைக்கப்பட்டு ஓடுகள், நிலைகள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் என்பவை அபகரித்து செல்லப்பட்டதை கண்டு மனமுடைந்திருந்தனர்.
தையிட்டிப் பகுதியில் சில வீடுகளில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் வேண்டுமென்றே அவ்வீட்டின் கதவுகள், நிலைகள், ஜன்னல்கள் மற்றும் ஓடுகளை பிடிங்கு எழுத்துச் சென்றுள்ளமை வீடுகளில் இருந்து சிதைவுகள் மூலம் உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது.
இந்நிலையில் தையிட்டிப் கிராமத்தில் இன்னும் இராணுவம் விடுவிக்காமல் உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் பாரிய படைமுகாம் ஒன்றினை அமைத்துள்ளனர். உயர்பாதுகாப்பு வலைய எல்லையுடன் இம் முகாம் அமைந்துள்ளது.
குறித்த முகாமில் உள்ள சுமார் 3 வீடுகளில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பிடுங்கி எடுத்துச் செல்லப்பட்ட ஓடுகள், கதவுகள், ஜன்னல்கள், நிலைகள் என்பவை மறைத்து வைக்கப்பட்டுள்ளதை பொது மக்கள் அவதானித்துள்ளனர்.
தமது வீடுகளில் இருந்து களவாடிச் செல்லப்பட்ட உடமைகள் உடமைகளை கண்ட மக்கள் அவ்விடத்தில் நின்றே ஆர்ப்பரித்ததுடன் இராணுவத்தினையும் தூற்றியிருந்தனர்.
இவை அனைத்தினையும் இராணுவத்தினர் கண்ணாணித்துக் கொண்டு நின்றிருந்ததுடன், மக்களை அச்சுறத்தும் வகையில் அங்கிருந்து விலகிச் செல்லுமாறு பணித்திருந்தனர். இதனால் பொது மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila