வடக்கு மாகாண சபையின் 23ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது. அதன்போது கூட்டமைப்பு சார்பு உறுப்பினர் சர்வேஸ்வரனின் வாய்மொழி வினாவிற்கு கல்வி அமைச்சர் பதில் வழங்கி இருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளும் போது தேசிய பாடசாலைகளின் புனரமைப்புக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் நிதி செலவு செய்யப்பட்டிருந்தது. எனவே தேசியப் பாடசாலைகளுக்கு வடக்கு மாகாண அமைச்சு செலவு செய்தமை தொடர்பில் விளக்கம் தரவேண்டும் என கல்வி அமைச்சரை உறுப்பினர் சர்வேஸ்வரன் கடந்த அமர்வில் கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர் குருகுலராஜா முன்னாள் ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டபோது தேசிய பாடசாலைகளில் வடக்கு கல்வி அமைச்சினால் நிதி செலவு செய்யப்பட்டது. இதற்காக 8.87 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டிருந்தது. எனவே இவ்வாறான செயற்பாட்டிற்கு கல்வி அமைச்சு அனுமதித்து இருக்காது விட்டால் ஆளுநர் குறித்த வேலைத்திட்டங்களை எடுத்து அதிக செலவில் செயற்படுத்தி இருப்பார். எனவே அதனைக் கருத்திற்கொண்டே நாம் குறித்த வேலைத்திட்டங்களை செயற்படுத்தினோம். அத்துடன் இது ஒரு அரசியல் தாக்கமேயெனவும் அவர் சப்பைக்கட்டு கட்டியுள்ளார்.