இறைவா! ஈழத்தமிழினத்தின் ஒரே பலமாகிய தமிழக மக்களைக் காப்பாற்று!

அன்புமிகு தமிழக மக்களுக்கு! தமிழகத்தில் வரலாறு காணாத மழையால் சென்னை மாநகர மக்கள் பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் செய்தி அறிந்து தாங்கொணாத் துயரம் அடைகின்றோம்.
ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய சகோதர உறவுகள் படும் துயரம் கண்டு நாம் கண்ணீர் விடாமல் இருக்கமுடியாது. இயற்கையின் சீற்றம் சென்னையை துவம்சம் செய்வது கண்டு எங்கள் இதயம் நொந்து போயிற்று.

இயல்பு வாழ்க்கையின் பாதிப்பு என்பதற்கு அப்பால், தங்களுக்கு ஏற்பட்ட உறவுகளின் உயிரிழப்புகளும் மிகப்பெரும் சொத்தழிவுகளும் ஈடுசெய்ய முடியாத இழப்புகள் என்பதைக் கூறித்தானாக வேண்டும்.
என்ன செய்வது? தமிழ் மக்கள் என்றால் இயற் கைக்கும் இறைவனுக்கும் அடிக்கடி ஆத்திரம் வந்து விடுகிறது. அதனால் இயற்கையின் சீற்றத்திற்கு நாங்கள் ஆளாக வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
அன்புக்குரிய சென்னை மாநகரின் சகோதரர்களே! உங்கள் அவலநிலை கண்டு நாம் அழுவதைத் தவிர வேறு எதைத்தான் எங்களால் செய்ய முடியும்.
அகழ்வாரையும் தாங்கும் நிலமகள் பெருவெள்ளத்தையும் தாங்க நினைத்ததால், உங்கள் போக்குவரத்துப் பயணங்கள்; மின்சார வசதிகள்; மருத்துவ சேவைகள் என அனைத்தும் செயல் இழந்து போயின என்ற செய்திகளுக்கு அப்பால்,
உயர்ந்த மாடிக் கட்டிடங்களில் நின்று ஒருவேளை உணவுக்காக உலங்குவானூர்திகளை நீங்கள் அண்ணாந்து பார்ப்பது கண்டு எங்கள் கண்கள் நிலம் நோக்கி கண்ணீர்ப் பாரத்தை இறக்கிக் கொள்கின்றன.
ஓ நிலமகளே! எங்கள் கண்ணீர் மீது நீ கொண்ட காதலால்தானோ எம் தமிழக உறவுகளை தண்ணீ ரில் தத்தளிக்க வைக்கின்றாய்?
வரலாறு காணாத பெருவெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழக உடன் பிறப்புக்களே! நாங்கள் ஈழத் தமிழர்கள். எங்களிடம் ஆட்சியுமில்லை; அரசு மில்லை. வைகை நதி பெருக்கெடுத்த போது அணை கட்ட வக்கற்று நின்ற செம்மணச்செல்வியின் நிலைமையில்தான் நாங்களும் இலங்கையில் இருக்கின்றோம்.
செம்பகப் பெருமானே! வைகை நதி பெருக்கெடுத்த போது, செம்மணச்செல்விக்காக அணை கட்ட வந்து உதவியது போல தமிழக மக்களுக்கும் உன் உதவியைக் கொடு. அவர்களை பெருவெள்ளத்தில் இருந்து மீட்டுப் பாதுகாத்து விடு. செம்மணச் செல்வியின் நிலைமையில் நிற்கும் ஈழத்தமிழினம் உன்னிடம் இதையே வேண்டி நிற்கும். இதைத் தவிர வேறு நாங்கள் எதைத்தான் செய்ய முடியும்.
15 ஆயிரம் கோடி இந்திய ரூபாய் பெறுமதியான சொத்துக்களை பெருவெள்ளம் தின்று தீர்த்தது என்ற உங்கள் புள்ளி விபரம் கண்டு விறைத்துப் போனோம். இறைவா! ஈழத்தமிழினத்தின் ஒரே பலமாகிய தமிழக மக்களைக் காப்பாற்று.
இயற்கையின் சீற்றத்தை தணித்து அவர்களின் வாழ்க்கை இயல்புக்குத் திரும்ப உதவி செய். பெரு வெள்ளத்தின் தொடராகப் பரவ இருக்கும் தொற்று நோய்த் துயரத்தைத் கட்டுப்படுத்த நீயே கருணைபுரி.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila