
இலங்கை அரசாங்கமானது அடுத்த ஆண்டிற்கான பரிந்துரைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை அண்மையில் வெளியிட்டது. இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக வரி வருமானம் உட்பட அடிப்படை விடயங்கள் தொடர்பான அரசாங்கத்தின் கணிப்பீடுகள் தொடர்பான சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட பெரும்பாலான விடயங்கள் போலியானவை என கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் பத்திரிகையாளரான குசல் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஏனைய விவகாரங்களுக்கு மத்தியில், இந்த வரவுசெலவுத் திட்டமானது நாட்டில் பொருளாதார சமமின்மைக்கு வழிவகுக்கும் எனவும் பெரேரா கருதுகிறார். இதனைச் சாதகமாக நோக்கில், கடந்த காலங்களில் இலங்கையை ஆட்சி செய்த மகிந்த ராஜபக்சவை விட தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன, வரவுசெலவுத் திட்டம் மீது மிகக் குறைந்த கட்டுப்பாட்டையே கொண்டிருப்பார்.
2014ல் வெளியிடப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் மொத்தச் செலவீனங்களின் 62 சதவீதத்தை ராஜபக்ச தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால் 2016ல் நாட்டின் செலவீனங்களின் கிட்டத்தட்ட 10 சதவீதத்தை மாத்திரமே சிறிசேனவின் கட்டுப்பாட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் பாதுகாப்புச் செலவீனங்கள் என்பது இன்னமும் அதிகரிக்கப்பட்டுள்ளமை கெட்டவாய்ப்பாகும். 2016இன் பாதுகாப்புச் செலவீனமானது 2014ல் வரையறுக்கப்பட்ட பாதுகாப்புச் செலவீனத்தை விட 20 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2014ல் ஒதுக்கப்பட்ட பாதுகாப்புச் செலவீனத்தில் நகர அபிவிருத்தி அமைச்சின் செலவீனங்களும் உள்ளடங்கியிருந்தது. கடந்த ஜனவரியில் ராஜபக்ச ஆட்சியிலிருந்து விலகிய பின்னர், நகர அபிவிருத்தி அமைச்சானது தொடர்ந்தும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படவில்லை.
ஆகவே இந்த அடிப்படையில் நோக்கும் போது 2014 ஆம் ஆண்டை விட 2016 இல் பாதுகாப்புச் செலவீனமானது கணிசமான அளவில் அதிகரிக்கும் என்பதே உண்மையாகும்.
இலங்கையின் பாதுகாப்புச் செலவீனமானது தொடர்ந்தும் அதிகரிப்பதற்கான காரணம் என்ன? என சமூக ஊடகங்களில் வினவப்படுகிறது. இதனை நியாயப்படுத்துவதற்கு எவ்வித நியாயமான தேசிய பாதுகாப்புக் காரணங்களும் காணப்படவில்லை.
இலங்கையில் இடம்பெற்ற கொடிய யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டது. ஆனால் இலங்கையில் தொடர்ந்தும் இராணுவமயமாக்கல் இடம்பெறுகிறது. குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிறிசேன அரசாங்கமானது இன்னமும் இராணுவமயமாக்கலை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. ஆனால் பாதுகாப்புச் செலவீனம் தற்போதைய வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளதானது இது தொடர்பான பிழையான தகவலையே வெளிப்படுத்துகிறது.
சிறிசேன நிர்வாகமானது இராணுவமயமாக்கல் தொடர்பாக வெளிப்படையாகக் கதைக்க விரும்பியிருந்தால் மற்றும் இது ஒரு முக்கியமான விவகாரம் என்பதையும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் எனவும் கருதியிருந்தால் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவீனத்தை ஓரளவு குறைத்திருந்திருக்கும்.
சிறிசேன அரசாங்கம் குறைந்தது பாதுகாப்புச் செலவீனத்தைக் குறைத்திருந்தால் கூட இதனை வரவேற்றிருக்கலாம். வரவுசெலவுத் திட்டமானது இன்னமும் இறுதியாக்கப்படாது விட்டாலும் கூட, தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் செலவீனமானது தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிசேன அரசாங்கத்தால் தவறவிடப்படுகின்ற பிறிதொரு தக்க தருணமாகவே இதனை நோக்க முடியும்.