தமிழர்களின் குடிசன தொகையினை மாற்றுவதற்கு ஆளுனர் திட்டம்! சீ.யோகேஸ்வரன் பா.உ.

கிழக்கு மாகாண ஆளுனரினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் குடிசன தொகையினை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் எட்டாவது ஆண்டு கழக தினம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இன்று அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆட்கள் மாறியுள்ளார்கள் கொள்கை மாறவில்லை. நாங்கள் மோதகத்தினை கொழுக்கட்டையாக மாற்றியுள்ளோம். அதுவே முன்னைய அரசாங்கத்திற்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் உள்ள வித்தியாசம்.
இன்னும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த அரசாங்கத்தினை நம்பி பலவகையில் ஆதரவினை மறைமுகமாக வழங்கி வருகின்றோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு எந்த ஆதரவினையும் இதுவரையில் அவர்கள் வழங்கவில்லை.
இந்த ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்தோம் அது தொடர்பில் ஜனாதிபதியோ பிரதமரோ எமக்கு ஆதரவு தந்து அவற்றை வழங்கவில்லை. அதுபோன்று சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது உறவுகளை மனிதாபிமான முறையில் விடுதலை செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம் அதுவும் நடைபெறவில்லை. எமது தலைவரிடம் சில உறுதிமொழிகளைக்கூட வழங்கினார்கள். சிறைக்கைதிகள் விடுவிக்கப்படலாம் என்று எமது தலைமை கூட நம்பியது. ஆனால் ஏமாற்றிவிட்டார்கள்.
இறுதியாக மூன்று மாவட்டங்களின் அபிவிருத்திக்குழு தலைமைப்பதவி தமிழ் தேசிய கூட்டப்பிற்குத்தான் என்று கூறினார்கள். அது தொடர்பிலான பல பூதாகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.ஆனால் தற்போது இணைத்தலைமைகளை வழங்கிக்கொண்டுள்ளனர்.
இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவினைப் பெறுகின்றார்கள். ஆனால் இதுவரையில் சரியான ஆதரவினை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கவில்லை.
வடக்கு கிழக்கின் இரண்டு மாகாணத்திலும் ஆளுனராக இராணுவத்தில் இருந்தவர்கள் இருந்தார்கள். நாங்கள் நடவடிக்கையெடுத்து அவர்களை மாற்றுமாறு கூறினோம். நல்லாட்சி என்று கூறும் இந்த அரசாங்கம் அவர்களை மாற்றியது.
ஆனால் இன்று கிழக்கு மாகாண ஆளுனர் மட்டக்களப்பில் தமிழர்களின் குடிசன தொகையினை மாற்றுவதற்கு திட்டமிடுகின்றார். இந்த நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கல்குடா தொகுதியில் காராமுனை என்னும் பகுதியில் 158 குடும்பங்களுக்கும் காணிகளை வழங்குமாறு பிரதேச செயலாளரையும் மாவட்ட செயலாளரையும் அழைத்து கூறியுள்ளார். இந்த ஆளுனர் பதவியேற்றதன் பின்னர் சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதிலேயே அக்கரை செலுத்தி வருகின்றார்.
குறிப்பாக புணானைப்பகுதியில் ஐந்து சிங்கள குடும்பங்களே வாழ்ந்தது.ஆனால் இன்று திட்டமிட்ட வகையில் 29 சிங்கள குடும்பங்கள் கொண்டுவரப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளது.மேலதிகமாக 24 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக இன்னும் 56 குடும்பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள வரவுசெலவு திட்டத்தில் கூட அரச ஊழியர்களுக்கு தொடர்மாடி வீடுகளை அமைத்து கொடுப்பதற்கும் உத்தியோகத்தர்களுக்கு காணிகளை வழங்குவதற்கும் மட்டக்களப்பு மாவட்டத்தினையும் தெரிவு செய்துள்ளனர்.
அவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமாக இருந்தால் அதனை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளவர்களுக்கே வழங்க வேண்டும் என்று நாங்கள் தெரிவித்துள்ளோம்.வெளியில் உள்ளவர்களை கொண்டுவந்து இங்கு குடியேற்ற அனுமதிக்கமாட்டோம் என்பதையும் தெளிவாக தெரிவித்துள்ளோம்.
மறைமுகமான சதித்திட்டங்களை இந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பில் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila