சமகாலத்தின் தேவையாக தமிழ் மக்கள் பேரவை


வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் இணைந்து தமிழ் மக்கள் பேரவை என்ற மக்கள் நலன் கருதிய அமைப்பை 19.12.2015 அன்று உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் உருவாக்கம் தொடர்பில் ஊடகங்கள் பலவும் பலவாறான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளன. 

ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை என்பதால் ஊடகங்கள் கடுப்படைந்துள்ளன என்று எடுத்துக் கொள்ளலாம். எதுவாயினும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை எவருக்கும் எதிரான அமைப்பு அல்ல என்பதை இந்த அமைப்பினர் தெட்டத்தெளிவாகக் கூறியுள்ளனர். 

அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான-மாற்று அரசியல் தலைமையாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் பலவும் உரைத்துள்ளன. 
எதுவாயினும் தமிழ் மக்கள் பேரவையின் பணி எத்தகையது என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்த்தபின் கருத்துரைப்பதே நல்லதென்பது நம் தாழ்மையான கருத்து.

தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக அரசியல் கட்சி அமைத்து விட்டு அதனை மூட்டைகட்டி வைத்திருப்பதால் யாருக்கு என்ன இலாபம் கிடைக்கும் என்பதைப் பார்க்க வேண்டும். அரசியல் கட்சிகளை அமைத்துவிட்டால் அவை தமிழ் மக்கள் மத்தியில்  எடுபட்டு விடுமா என்ன? 
ஆக, தமிழ்த் தேசியப் பேரவை தனது அறிக்கையில் மிகத் தெளிவாகக் கூறுவது; அரசியல் எல்லைகளுக்கு அப்பால், தமிழ் மக்களின் நலனைப் பேணுவதற்கான அமைப்பு என்பதாகும்.

ஆகையால் அந்த அமைப்பு என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்பது நியாயமானது. மதத் தலைவர்கள், வைத்திய நிபுணர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்குக் கிழக்கு மாகாணத்தின் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வை கண்டபாட்டில் விமர்சிப்பது என்பது ஆரோக்கியமானதன்று. 

தமிழ் மக்கள் பேரவையை ஏற்படுத்தியவர்கள்; நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை உருவாக்கி அவர்கள் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை-அபிலாசைகளை பிரதிபலிக்கக் கூடியதும் நடை முறைக்குச் சாத்தியமானதுமான தீர்வு வரைபை தயாரித்து அதனை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதே தமது தலையாய பணி என்று குறிப்பிட்டுள்ளனர். ஆக, இங்கு பேரவையினர் தங்கள் பணியை நிறுதிட்டமாக வரையறுத்துள்ளனர்.

அப்படியானால் அந்த அமைப்பு தனது பணியை செம்மையாகச் செய்கிறதா? என்பதை அவதானித்து அதன் பின் கருத்துரைப்பது நல்லது.  
இதைவிடுத்து எவரும் எப்படியும் விமர்சிக்கலாம் என்றால் இந்த மண்ணில் தர்மம் எங்ஙனம் நிலை பெற முடியும்?

இதேசமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கான வேலை இது என்று சிலர் நாக் கூசாமல் சொல்லுகின்றனர். நேற்று ஆரம்பித்த  அமைப்பு ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து விட முடியுமா என்ன?

இன்று இருக்கக்கூடிய பிரச்சினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதோ! அன்றி மாற்றுத் தலைமையை உருவாக்குவதோ! அல்ல. மாறாக தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு ஏதோ ஒரு வகையில் எட்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இச் சூழ்நிலையின் பின்னணியில் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்து வருகிறது. 

ஆகையால், இச் சந்தர்ப்பத்தில் அரை குறைத் தீர்வுகள் என்றில்லாமல் தமிழ் மக்களின் நிம்மதியான-சுதந்திரமான வாழ்வுக்கு ஏற்புடைய தீர்வை பெற்றுக் கொள்வதே தமிழினத்தின் தலையாய கடமையாக இருக்கும். இந்தப் பணியை அனைத்துத் தமிழ்த் தரப்புகளும் இணைந்து செய்தாக வேண்டும்.
அதேசமயம் எமக்கான தீர்வுத்திட்ட வரைபுகளை யார் தயாரித்தாலும் அதனை தமிழ் மக்களிடம் முன்வைத்து அவர்களின் அங்கீகாரத்தைப் பெறுவது மிகவும் முக்கியமான விடயமாகும் என்பது நம் தாழ்மையான கருத்து.    
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila