இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட வரைபை தயாரிப்பதற்காக தமிழ் மக்கள் பேரவை நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமித்துள்ளது.
பேரவையால் நியமிக்கப்பட்ட குழுவானது இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட வரைபு ஒன்றைத் தயா ரித்து அதை தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்தி அதில் திருத்தங்கள் மாற்றங்கள் இருப்பின் அவற்றை செய்து தீர்வுத்திட்டத்தின் இறுதி வரைபை தயாரிக்கும் என்பது பேரவையின் அறிவிப்பு.
இங்குதான் ஒரு விடயம் கவனிக்கப்பட வேண்டும். அதாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையும் ஒரு தீர்வுத்திட்டத்தை தயாரித்து வைத்துள்ளதாகக் கூறியுள்ளது.
எனினும் அத்தீர்வுத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ள அம்சங்கள் எவை என்பது பற்றி எதுவும் தமிழ் மக்க ளுக்கோ, தமிழ் புத்திஜீவிகளுக்குகோ தெரியாது. தனித்து கூட்டமைப்பில் இருக்கக்கூடிய ஒரு சிலருக்குத் தெரிந்த விடயமாக மட்டுமே இருக்கும்.
அதே சமயம் தீர்வுத்திட்டம் ஒன்றை 2016இல் கொண்டு வருவதாக இருந்தால், தீர்வுத்திட்டம் தொடர்பில் அரச தரப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சு வார்த்தைகளை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அப்படியான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.
ஆக, தயாரிக்கப்பட்டுள்ள தீர்வுத்திட்டம் பற்றி தமிழ் மக்களுக்கு எதுவும் தெரியாது. தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை எனில், 2016 இல் தீர்வு என்பது அரசாங்கம் கொடுப்பதை இருகரம் நீட்டி வாங்குவது என்றால் மட்டுமே அது சாத்தியமாக முடியும்.
எதுவாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரித்துள்ளது எனின் அதனைத் தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்துவதன் பொருட்டு பேரவையின் நிபுணர் குழுவின் பார்வைக்கு வழங்குவது பொருத்தமானதாக இருக்கும்.
தமிழ்த் தரப்பில் யார் தீர்வுத்திட்டத்தை தயாரித்தா லும் அது தமிழ் மக்களுக்கானது என்ற அடிப்படையில், தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தை தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்துவது கட்டாயமானதாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வுத்திட்டம் ஒன்றினைத் தயாரித்திருக்குமாயின் மக்கள் அமைப்பு என்ற அடிப்படையில், பேரவையின் நிபுணர் குழு அத்தீர்வுத் திட்டத்தை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய் யப்பட்டால் அதை பேரவையின் நிபுணர் குழு ஆராய்வது நல்லது.
இதை விடுத்து இன்னமும் ஒரு தீர்வுத்திட்டம் முழுமையாக இல்லை என்றொரு நிலைமை இருந்தால், தீர்வுத்திட்டத்தைத் தயாரிக்கும் நிபுணர் குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது பரிந்துரைகளை முன்வைப்பது சிறப்பாகும்.
ஏனெனில் தயாரிக்கப்படுகின்ற தீர்வுத்திட்டமானது தமிழ் மக்களுக்கானது. இத்தீர்வுத்திட்டத்தை தமிழ்த் தரப்புகள் ஏற்றுக் கொள்வதுடன் இதுவே எங்களுக்கான தீர்வு என்பதை சர்வதேசத்தின் மத்தியிலும் வலி யுறுத்தவேண்டும்.
ஆகையால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 2016இல் எய்தப்படும் என நம்புகின்ற தீர்வு ஒன்றை வைத்திரு க்குமாயின் அதனை தமிழ் மக்கள் பேரவையால் நியமிக்கப்பட்ட அரசியல் தீர்வுக்கான நிபுணர் குழுவின் பார்வைக்கு வழங்குவது அல்லது தீர்வுத்திட்டம் இல்லை என்ற நிலையில் தீர்வுத்திட்டம் எப்படியாக அமைவது நல்லது என்ற ஆக்கபூர்வமான ஆலோசனைகளை நிபுணத்துவக் குழுவுக்கு வழங்குவதென்பது; தீர்வு என்ற விடயத்தில் தமிழ்த் தரப்புகள் உறுதியாக நிற்பதற்குப் பேருதவியாக அமையும்.