குடிசை வீட்டின் குந்தில் குந்தியிருந்த ஜனாதிபதி மைத்திரி


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார். ஒரு சாதாரண மனிதராக அவர் வருகை அமைந்திருந்தது. 

எந்தவித படோபகாரமும் கிடையாது. படையினரின் பாதுகாப்பு பதற்றங்களும் இல்லை. ஒரு நாட்டின் தலைவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஜனாதிபதி மைத்திரி நல்லதொரு உதாரணம் என்று கூறும் அளவில் அவர் பெருந்தன்மையோடு வந்திருந்தார்.  

முன்பெல்லாம் ஜனாதிபதி வருகிறார் என்றால் படையினர் படும்பாடு; பள்ளிக்கூடங்களில் வரவேற்று நடனத்துக்கான ஏற்பாடு; வீதிகளுக்கு வர்ணம் பூசாக்குறை என்ற பாட்டில் எல்லாம் தடல்புடலாக நட க்கும். 

ஆனால் ஜனாதிபதி மைத்திரி மிகவும் அமைதியாக வருகை தந்தார். அவரின் வருகையுடன் தொட ர்புபடாத ஒரு நிகழ்வு நடந்தமை தமிழ் மக்களின் மனங்களை நெகிழ வைத்து விட்டது. 
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மல்லாகம் கோணப்புலம் நலன்புரி முகாமுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டதுடன் அங்கு மக்களைச் சந்தித்தார். 

முகாம் மக்கள் படும் கஷ்டங்களை-துன்பங்களை எத்தனை பேர் சென்று ஜனாதிபதியிடம் தெரிவித்தாலும் அதன் புரிதல் என்பது 40 வீதத்தை தாண்டிவிடாது.
ஆனால் நேரில் சென்று பார்க்கின்றபோது, அதுவும் திடீர் விஜயமாகச் சென்று பார்க்கும்போது உண்மை நிலையை அப்படியே உணர்ந்து கொள்ள முடியும். 

இந்த வகையில் கோணப்புலம் நலன்புரி முகாமுக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரி, முகாமில் உள்ள ஒரு தற்காலிக குடியிருப்புக்குச் சென்று ஒரு குந்தில் குந்தியிருந்து அந்த வீட்டாருடன் கதைத்தார். அந்த வீட்டின் குசினிக்குள் சென்று சமைக்கப்பட்ட உணவைப் பார்த்தார். சமைக்கப்பட்ட கறி ஒன்று மூடப்பட் டிருந்தது. அந்த மூடியைத் திறந்து என்ன கறி என்றும் பார்த்தார். அதில் சொதி இருந்தது. 
இதில் இருந்து அந்த மக்கள் சாப்பாட்டிற்கும் இடர்படுகின்றனர் என்ற உண்மையை அவர் அறிந் திருப்பார் போலும். 

இவற்றை எல்லாம் பார்த்த பின்பு ஜனாதிபதி மைத்திரி என்ற மனிதம் பேசியது. 
தெற்கில் உள்ள கடும்போக்குவாதிகள் ஒரு முறை யாழ்ப்பாணத்துக்கு நேரில் வந்து பார்க்கவேண்டும். அப்போது அவர்களுக்கு இங்குள்ள நிலைமை என்னவென்று புரியும் என்று கூறினார்.. 
நலன்புரி முகாம்களில் உள்ள மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆறு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரி கூறிய உத்தரவாதம் என்பத ற்கு அப்பால் இந்த நாட்டின் ஜனாதிபதி ஒருவர் தமிழ் மக்கள் வாழ்கின்ற நலன்புரி முகாமுக்குச் சென்று; அந்த மக்கள் வாழ்கின்ற தற்காலிக குடிசைக்குள் நுழைந்து; அங்குள்ள குந்தில் குந்தியிருந்து என்ன உணவு சமைக்கப்பட்டன என்பதைப் பார்த்து; அந்த மக்களின் குறைகளைக் கேட்டு; சிறு பிள்ளைகளை அரவணைத்து; தனது மனித நேயத்தை வெளிப்படுத்தியபோது எங்கள் நெஞ்சமும் நெகிழ்ந்து கொண்டன.  

ஜனாதிபதி மைத்திரி எங்கள் பிரச்சினைக்கு நிச்சயம் நல்லதொரு தீர்வைத் தருவார். பேரினவாதத்தின் கூக்குரலுக்கு இசையார் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் எழுந்துள்ளது. 

ஜனாதிபதி மைத்திரியை குறித்த முகாமுக்கு அழைத்துச் சென்ற அத்தனை பேரும் இடம்பெயர்ந்த மக்கள் மீது தங்கள் கருசினையை-இரக்கத்தை கொண்டிருந்துள்ளனர் என்பதும் தெரிகிறது.
இது போல கடும் போக்காளர்களையும் அழைத்து வந்து எங்கள் மக்கள் படும் அவலத்தை நேரில் பார்க்கச் செய்வது பலத்த முன்னேற்றங்களைத் தரும் என்று நம்பலாம். 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila