வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முதல்முறையாக கடந்த வாரம் 22ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதை தென் இலங்கை அரசியல் தலைமைகள் கூர்ந்து கவனித்திருந்தன.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் 2013 செப்ரெம்பர் 21ஆம் திகதி வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்று 2013 ஒக்டோபர் 25ஆம் திகதி முதலாவது சபை அமர்வுகள் நடைபெற்ற காலப்பகுதியிலிருந்து தென் இலங்கை அரசாங்கம் பல அழைப்புக்களை விடுத்திருந்தபோதும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மத்திய அமைச்சரவை அமர்வுகளுக்கு சென்றிருக்கவில்லை.
இலங்கையின் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு மாகாணங்களின் முதலமைச்சர்களும் கலந்து கொள்வதற்கு ஏற்பாடுகள் இருக்கின்றது. அந்தவகையில் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்தபோதும் முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை. அதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்புவிடுத்தபோதும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை.
அதுமட்டுமல்லாமல், மாகாணங்களின் முதலமைச்சர்கள் கூட்டத்திற்கும் ஏனைய மாகாண முதலமைச்சர்கள் அழைப்புவிடுத்தபோதும், வட மாகாண முதலமைச்சர் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் இறுதியாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கலந்து கொண்டிருப்பது முக்கியத்துவம் பெறுகின்றது.
அண்மைக்காலமாக வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மீது மத்திய அரசாங்கம் உட்பட தென் இலங்கை அரசியல் சக்திகளும், கடும்போக்குச் சக்திகளும் கடுமையான விமர்சனத்தையும், அதிருப்தியையும் கொண்டிருக்கின்றன. அதற்குக் காரணம்,முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையான தீர்வுதான் தேவை என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவதும், இணைந்த வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஒரே அதிகார மாநிலமாகும் என்பதையும் கூறிவருவதும்தான்.
அதுமட்டுமல்லாமல் வட மாகாணத்திற்கு வருகைதரும் சர்வதேசப் பிரதிநிதிகளிடமும்,தூதுவர்களிடமும் அரசாங்கம் தமிழ் மக்களை பாரபட்சமாகவே நடத்துகின்றது என்றும், ஆட்சி மாற்றம் ஒன்றுக்காக நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சுமத்துகின்றார்.
வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தை முற்றாக அகற்ற வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கின்றார். இவைதான் வட மாகாண முதலமைச்சர் மீது தென் இலங்கை சக்திகளின் கோபத்துக்குரிய காரணங்களாகும்.
கடந்த மூன்று வருடமாக தமிழ் மக்களின் அரசியல் தளத்தில் செயற்படும் வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மீது தென் இலங்கை அரசியல் சக்திகளுக்கு மேற்கூறிய விடயங்களுக்காக கோபம் என்றால், இதே விடயங்களை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக உறுதியோடு கூறிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மீது தென் இலஙகை அரசியல் சக்திகளுக்கு கோபமில்லையா? என்று சிலர் சிந்திக்கலாம்.
சம்பந்தன் அவர்கள் 40 வருடமாக தமிழ் மக்களின் அரசியல் தளத்தில் இருந்திருந்தாலும் இன்றைய அரசியல் சூழலில் சம்பந்தன் அவர்களின் தமிழ் மக்கள் சார்பான குரல் என்பது வடிவம் மாறிவிட்டது. அவர் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றிருக்கின்றார். ஆகவே அவர் சுருதியை கொஞ்சம் மாற்றிக் கொண்டிருக்கின்றார்.
வடக்கு கிழக்கில் சமஷ்டியே தீர்வு என்று கூறினாலும், தெற்கில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்றை வரவேற்பதாக பிடி கொடுக்காமல் கூறுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார் என்ற விமர்சனமும் இருக்கவே செய்கின்றது. அது சம்பந்தனின் ஆளுமையான அரசியல் காய் நகர்த்தலாகவும் இருக்கலாம்.
ஆனால் வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனோ, வடக்கிலும், தெற்கிலும் தனது கருத்தை ஒரேவிதமாகவே பதிவு செய்கின்றார். அவரது அந்த நிலைப்பாட்டை உறுதி என்று கூறுவதா? அல்லது ஆளுமையற்ற தன்மை என்று கூறுவதா? என்பது ஆராயப்பட வேண்டும்.
கூட்டமைப்பின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தனது அணுகுமுறையையும்,கருத்தியலையும் வேறு வடிவத்துக்கு மாற்றிக்கொண்ட நாள்முதல் சம்பந்தனுக்கும்,வட மாகாண முதலமைச்சருக்குமிடையே இடைவெளிகள் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது ஒன்றும் இரகசியமானதல்ல.
இன்றுவரையும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை புறந்தள்ளியதாகவே அதன் தலைமையினதும், சில உறுப்பினர்களினதும் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக வட மாகாண முதலமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு சம்பந்தன் நேரடியாக பதிலளிக்கவில்லை.
சம்பந்தன் மற்றும் விக்கினேஸ்வரன் இருவருக்குமிடையேயான இடைவெளிதான்,தமிழ் மக்கள் பேரவையின் தோற்றத்திற்கும் பிரதான காரணமாகும். தவிரவும், இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதே செய்தித் தளங்களில் முன்னுரிமை பெறக்கூடிய ஆச்சரியமான நிகழ்வாகவே நடைபெறுகின்றது.
இந்த நிலையில் இன்று வட மாகாண முதலமைச்சர் கூறுகின்ற தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான பிரச்சினைக்குத் தீர்வும், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கூறுகின்ற தீர்வும் ஒன்றானதாக எவரும் கருதமுடியாது. இன்றைய நிலையில் சம்பந்தன் மென் அரசியல் தலைவர். விக்கினேஸ்வரனோ வன் அரசியல் தலைவர் இதுதான் இன்றைய நிலைமை.
இந்நிலையில், புதிய அரசியலமைப்பின் பிரகாரம் 13ஆவது திருத்தச் சட்டத்தை பலப்படுத்தி தீர்வொன்றை முன்வைப்பதே பெரும்பாலும் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது. மாகாண சபையை ஒரு மாநில அலகாக குறிப்பிடுவதோடு, சில அதிகாரப் பகிர்வுகளையும் செய்தால் அதுவே அரசியல் தீர்வாக இருக்கும். என்பதுதான் அரசாங்கத்தின் இறுதி தீர்மானம் என்றும் தெரியவருகின்றது.
இந்நிலையில், புதிய அரசியலமைப்பின் பிரகாரம் 13ஆவது திருத்தச் சட்டத்தை பலப்படுத்தி தீர்வொன்றை முன்வைப்பதே பெரும்பாலும் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது. மாகாண சபையை ஒரு மாநில அலகாக குறிப்பிடுவதோடு, சில அதிகாரப் பகிர்வுகளையும் செய்தால் அதுவே அரசியல் தீர்வாக இருக்கும். என்பதுதான் அரசாங்கத்தின் இறுதி தீர்மானம் என்றும் தெரியவருகின்றது.
அதாவது ஒற்றையாட்சிக்குள்ளேயே அதிகாரப்பகிர்வுடனான தீர்வு என்று சுருக்கமாக கூறிவிடலாம். அதைவிடுத்து யார்தான் தலைகீழாக நின்றாலும் எதுவும் சாத்தியமில்லை. இதைத்தாண்டி அரசாங்கம்; ஒரு அங்குலம் முன்னகர்ந்தாலும் கடும்போக்கு சிங்கள சக்திகளும், சிங்கள மக்களும் எதிர்த்து நிற்பார்கள்.
ஆனால் தமிழ் மக்களோ ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பரவலாக்கம் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் மக்களைப் பொறுத்தவரை சமஷ்டி அடிப்படையில் அதிகாரப் பங்கீடு அவசியமாகும். அவ்வாறான தீர்வு பெற்றுக் கொள்ளப்படாவிட்டால்,உரிமைகளுக்காக தமிழ் மக்கள் இலங்கை மண்ணில் இரத்தமும் சதையுமாக பெரும் இழப்புக்களுக்கு முகம் கொடுத்து போராடியதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.
தமிழ் இனம் இலங்கை மண்ணில் அரசியல் உரிமைகள் பெற்று, பாதுகாப்பாக தலை நிமிர்த்தி தம்மைத்தாமே ஆளுகின்ற இலக்கோடும், கனவோடும் களமாடி தமது உயிர்களை தியாகம் செய்த போராளிகளினதும், இறந்துபோன தமிழ் மக்களினதும் ஆத்மா அமைதி கொள்ளாது.
எனவே தமிழ் மக்களின் தன்னாட்சி நிலைப்பாட்டை வலியுறுத்துவதை தமிழ் இனவாதமாக சிங்கள கடும்போக்கு சக்திகளும், சிங்கள அரசியல் தலைமைகளும் விமர்சித்தாலும், கோபப்பட்டாலும். அவை குறித்து அக்கறை கொள்ளாது, எமது அரசியல் அபிலாஷையை முன்னோக்கி நகர்த்துகின்ற தேவையே தமிழ் மக்களுக்கு இப்போதும் இருக்கின்றது.
- ஈழத்துக் கதிரவன்.