நெஞ்சை உருக்கிய கொடுந்துயர் நீங்காதோ!

முன்னாள் போராளியாக இருந்த ஓர் இளம் குடும்பப் பெண் தீக்காயங்களால் இறந்துபோன சம்பவம் அண்மையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடந்துள்ளது.
மூன்று பிள்ளைகளின் தாயான வற்றாப்பளை கேப்பாப்பிலவைச் சேர்ந்த அந்த பெண் போராளியின் குடும்ப நிலைமைகளை அறிந்தபோது நெஞ்சு வெடிக்கும் போல் இருந்தது.
தாய் இறந்த பின்பு சாப்பிடுவதற்கே வழியில்லை என்று ஒரு பெண்பிள்ளை கூறிய சோகம் கேட்டு கண்ணீர் விடாதவர் இருக்கமுடியாது.
மூன்று நாட்களாகத் தாயின் உடலம் பிரேத அறையில் காத்திருக்கிறது. 17 வயதுப் பெண்பிள்ளை தாயின் சடலத்தை பார்ப்பதற்காக முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் வருகிறார்.
ஊருக்குத் திரும்பிப் போவதற்கே காசு இல்லை. அம்மா இறந்த பின்பு நாங்கள் சாப்பிடவில்லை. சாப்பாடு ஏதும் இல்லை என்று அந்தப் பிள்ளை கூறிய போது நாம் எல்லோருக்கும் அடுத்தவரின் துன்பங்களைப் பார்க்க மறந்த துயரம் எங்களை வாட்டவே செய்யும்.
தனியொரு மனிதனுக்கு உணவு இல்லை எனின் இந்த ஜெகத்தினையே அழித்திடுவோம் என்றான் பாரதி.
இங்கோ அந்தச் சின்னப்பிள்ளை உண்பதற்கு உணவுமில்லை. பெற்ற தாயுமில்லை. தந்தையுமில்லை என்ற பேரவலத்தில் வாடிவதங்கும் பெரும் துயர் நடந்து கொண்டிருக்கிறது.
ஓ! என் அருமை உறவுகளே! பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றினுள் எல்லாம் தலை என்றான் வள்ளுவன்.
இருப்பதில் மற்றவர்களுக்கும் கொடுத்து அவர்களின் பசியையும் ஆற்றி எல்லா உயிர்களையும் காக்கின்ற உயரிய அறத்தை நாம் செய்யத் தவறினால் இது போன்ற தாங்கொணாத் துன்பச் செய்திகளையே எங்கள் வாழ்வில் கேட்க வேண்டி வரும்.
தீக்காயத்தால் இறந்துபோன தன் தாயின் மரணச் சாட்சியத்தின் போது, அம்மா இறந்த பின்பு எங்களுக்குச் சாப்பிட வழியில்லை என்று அந்தப் பிள்ளை கூறிய வார்த்தை, இந்த உலகையே உருக்கி விடக்கூடிய வார்த்தை.
இத்தகைய வார்த்தையை கேட்கும் அவலத்துக்கு ஆளானால், நாம் பசியாற உணவு உண்பதில் எந்தப் பயனும் இல்லை என்பதையே பொருள்படுத்தி நிற்கும்.
ஆகையால் அன்புக்குரிய உறவுகளே! இது போன்ற துன்பங்களைத் தடுக்க உங்கள் பரோபகாரங்களைச் செய்யுங்கள். தாயை இழந்த அந்தப் பிள்ளைகள் வாழ்வதற்கு வழி செய்யுங்கள்.
இதைவிடப் புண்ணியம் வேறு எதுவுமாக இருக்க முடியாது.
இதேநேரம் அரசியல்வாதிகளே! பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளே! யுத்தத்தின் கொடுமையால் அனைத்தையும் இழந்து உண்ண வழியின்றி இருக்கின்றவர்களின் அவலத்தை எங்கள் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினதும் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். உலர் உணவு நிவாரணத்தை வழங்குங்கள் என்று கேளுங்கள்.
மனிதநேயம் மிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது விடயத்தில் நிச்சயம் கவனம் செலுத்துவார். மக்களின் அவல நிலைமைகளை எடுத்துக்கூறி இதுபோன்ற வறுமை நிலைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இது மிகவும் அவசியமானது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila