தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டம் என்றொரு பழமொழி நம் தமிழ்மொழியில் உண்டு.
சிறுவயதில் இப் பழமொழியைப் படித்தபோது அதன்பொருளை விளங்குவதில் கடினம் இருந்தது. காரணம் உதாரணங்களை கண்டறிய முடியவில்லை.
ஆனால் இப்போது இந்தப் பழமொழியின் பொருள் அப்படியே உள்வாங்கப்படுகிறது. காரணம் வடக்கு மாகாண சபையில் உள்ள சில உறுப்பினர்கள் ஆடுகின்ற ஆட்டமே இதற்கு நல்ல உதாரணமாக இருப்பதால்.
வடக்கு மாகாண சபையின் செயற்பாட்டைக் குழப்புவதில் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் மிகமோசமான-அடாவடித்தனமான முறையில் செயற்பட்டு வருகின்றனர்.
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துவரும் வட க்கு மாகாண சபையின் முதலமைச்சருக்கு எதிர்ப் புத் தெரிவிக்கும் வகையில் இவர்களின் செயற்பாடுகள் அமைந்திருப்பது உறுதியாகியுள்ளது.
அதிலும் கடந்த தைப்பொங்கல் தினத்தன்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் மிக உன்னதமான உரை ஒன்றை பிரதமர் ரணில், பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இருந்த அரங்கில் ஆற்றியிருந்தார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய இந்த உரை உலகத்தமிழினம் முழுமையினதும் கவன த்தை ஈர்ப்புச் செய்திருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த; இலங்கை அரசுக்கு ஆதரவான; வன்னிப்போரில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற வேண்டும் என அல்லும் பகலும் பாடுபட்டவர்கள் என இனங்காணப்பட்ட; வடக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பில் இருக்கக்கூடிய நான்கு, ஐந்து மாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் முதலமைச்சராக இருந்தால் அது தமிழினத்துக்குப் பலமாக அமையும் என்ற அடிப்படையில், அவருக்கு எதிராகத் தீர்மானங்களைக் கொண்டு வருவதில் கடுமையாக முயற்சி செய்கின்றனர்.
இவர்களின் நடவடிக்கையால் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழர் அரசு என்ற அடிப்படையில் அமையப் பெற்ற வடக்கு மாகாண சபையில் இருந்து கொண்டு மாகாண சபையை குழப்புவதற்கு இவர்கள் செய் கின்ற சதித்திட்டம் தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப்பெரும் துரோகத்தனமாகும்.
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களுக்கான உரிமையை அரசு உரியவாறு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பது இவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது என்பதை தமிழ் மக்கள் நிச்சயம் அவதானிப்பர்.
இதேவேளை வடக்கு மாகாண சபையில் உறுப்பினர்களாக இருந்து கொண்டு, முதலமைச்சர் விக் னேஸ்வரனுக்கு எதிராகத் தொடர்ந்தும் செயற்பட்டு வரும் வடக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பின்- தமிழரசுக் கட்சி சார்ந்த சில உறுப்பினர்கள் தொடர்பில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொறுப்புடன் நடக்க வேண்டிய சபை உறுப்பினர்கள் சபையில் சண்டித்தனக்காரர்களாக; குழப்பம் விளைவிப்பவர்களாக நடந்து கொள்வது அவ்வளவு நல்லதல்ல என்பதை சம்பந்தப்பட்ட உறுப்பின ர்களுக்கு எடுத்துரைக்கவேண்டும்.
இதைச் செய்யாமல் விட்டால், பரட்டைக்காட்டுக்கு கரட்டி ஓணான் பஞ்சவர்ணக் கிளி என்பதாக நிலைமை ஆகிவிடும். இந்நிலைமை ஏற்பட்டால் தமிழ் மக்கள் உரிய நேரத்தில் தக்க பாடம் புகட்டுவர்.