“புதிய அரசியலமைப்பின் மூலம் பௌத்த மதத்திற்குரிய சிறப்பு அந்தஸ்து இல்லாமல் செய்யப்படுவதுடன் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் பங்கம் ஏற்படும் எனவும் சிலர் கூறுகின்றனர். ஒருவரும் நாட்டைப்பிரிக்க விரும்பவில்லை. நான் உட்பட எங்களில் பலர் பௌத்தர்கள். நான் சிங்களவன். எனக்கு இந்த நாட்டை ஒருமைப்படுத்தவேண்டிய தேவையுள்ளது, அரசியலமைப்புத்திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும். பௌத்தமதமானது சிறப்பு அந்தஸ்தை இழக்கும் என்று கூறுபவர்களுக்காக பாராளுமன்றத்தில் நான் ஒரு விசேட அறிக்கை ஒன்றை சமர்பிப்பேன். பௌத்த மதத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்திருப்பதை அரசியலாக்க வேண்டாம் என சிறிய கட்சிகளிடம் வலியுறுத்துவேன்” எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக இன்று காலை அலரி மாளிகையில் ஆற்றிய விஷேட உரையின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவரது உரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘1983 அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தம் சிறிலங்காவுக்குள் ஒரு தனி அலகு மாநிலம் அமைவதை ஏற்றுக்கொள்ளாது. அதன் வரையறைக்குள் நின்றே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். ‘
‘இதற்கு பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அனைவரது யோசனைகளையும் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு முன்னோக்கிச் செல்ல நாம் தயாராகவே உள்ளோம். இது தொடர்பில் அனைத்து கட்சி தலைவர்களுடனும் வெவ்வேறாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். புதிய அரசியல் அமைப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்களை இதன் பின்னர் தான் பொது மக்கள் கருத்துக்கள் ஊடாக தீர்மானிக்க வேண்டும்.’
‘தொலைநகல், ட்விட்டர் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படவுள்ளது. உலகில் முதல் தடவையாக இவ்வாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக பொது மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு அரசியலமைப்பை உருவாக்கும் நாடாக இலங்கை அமையப் போகின்றது.’ என்றார்.