ஈழத்தமிழரின் வீரத்தை இதிகாசமாய் பாடுக கவிப் பேரரசே!


அன்புமிகு கவிப் பேரரசு வைரமுத்து அவர்களுக்கு அன்பு வணக்கம். ஈழத்தமிழர்கள் மீது தாங்கள் கொண்ட பாசம் கண்டு மனம் நெகிழ்பவர்கள் நாம். எங்கள் மீது நீங்கள் கொண்ட அன்பின் காரணமாக எங்கள் வட புலத்து மண்ணுக்கு வந்து உழவர் விழாவில் பங்கு பற்றியமை கண்டு உள்ளம் உவந்து கொண்டோம்.
உங்களின் வரவால் மட்டற்ற மகிழ்ச்சி. யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த தாங்கள், வடக்கின் முதலமைச்சரைச் சந்தித்து உரையாடியமையும் எங்கள் நெஞ்சத்தைத் தொட்டுக் கொண்டன.

வீரம் செறிந்த முல்லைத்தீவு மண்ணில்தான் மிகப்பெரும் துயரமும் நடந்தது. அந்த மண்ணில் நடந்த உழவர் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்துவும் கலந்து கொண்டார் என்ற செய்தி அனைத்தும் இழந்த எங்கள் மனங்களுக்கு ஆறுதலைத் தந்தன. 
வன்னிப் பெருநிலப்பரப்பில் உயிரிழந்து போன தமிழ் உறவுகளின் ஆத்மாக்கள் உங்கள் சிம்மக் குரல் கேட்டு நிச்சயம் விழித்திருப்பர்.

ஓ! எங்கள் தமிழகத்தின் கவிப்பேரரசு வைரமுத்துவின் குரல் அல்லவோ இது என்று தங்களுக் குள் கதைத்திருப்பர். நாங்கள் உயிரோடு இருந்த காலத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகளைப் படித்தோம்; பாடினோமேயன்றி அவரை நேரில் காணமுடியவில்லையே என்று கவலை கொண்டிருப்பர். 
இந்த நாட்டின் ஆட்சி அதிகாரம் தமிழ் மக்களைக் கொன்றொழித்த துயரம் நீங்கள் அறியாத தல்ல. அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அமைதியாக இருந்ததுதான் மிகப்பெரும் கொடுமை.

கலைஞர் கருணாநிதி உங்களுக்கு கவிப்பேரரசு என்ற பட்டத்தை வழங்கியவர் அவர். தமிழ் மீது கொண்ட பற்றினால் நீங்களும் அவர் மீது பெரும் பாசம் கொண்டிருந்தீர்கள். இருந்தும் கலைஞர் தமிழ் மீது கொண்ட பாசத்தை ஈழத்தமிழ் மக்கள் மீதும் காட்டியிருந்தால் இன்று பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரோடு இருந்திருப்பர். 

என்ன செய்வது? எங்கள் எழுதாக்குறை யுத்தம் நடந்தபோது தமிழகத்தின் முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்து கொண்டார். பரவாயில்லை. இழந்த வலியின் இதயத்துடிப்பை நீங்கள் அறியாதவர்கள் அல்ல. வீரம் செறிந்த ஈழத் தமிழர்கள் பற்றி காவியம் படைப்பேன் என்று நீங்கள் முல்லைத்தீவு மண்ணில் கூறியபோது நாங் கள் மட்டுமல்ல; வன்னிப்போரில் உயிரிழந்த எங்கள் அத்தனை உறவுகளும் ஒரு கணம் விழித்துப் பார்த்ததை உணர்ந்தோம்.   

ஓடும் நதியில் அள்ளுண்டு போன உங்கள் கள்ளிக்காட்டு ஊருக்கு இதிகாசம் எழுதிய தாங்கள், ஈழத் தமிழினத்தின் வீரத்தை; தமிழ்ப்பற்றை; இனப்பற்றை நிச்சயம் காவியமாய் படைப்பீர்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. 

அந்த நம்பிக்கை விரைவில் நிறைவேறும் என்பதும் உண்மை. எங்கள் தமிழினத்தின் வீரத்தை  காவியமாய் நீங்கள் படைக்கும் போது எங்கள் இனத்துக்கு ஈனம் இழைத்த உலக நாடுகளையும் குறிப்பிடத் தவறிவிடாதீர்கள்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila