இந்திரா காந்தியின் நிலைதான் ஈழத்தமிழ் மக்களுக்கும்


விடுதலைப் புலிகள் மீது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கொண்ட வெறுப்பு பல இடங்களில் வெளிப்பட்டுள்ளது. சில வேளைகளில் புலிகளின் மரண தண்டனைப் பட்டியலில் தனது பெயரும் இருந்தது என்பதால் அவ்வாறானதொரு கோபத்தை புலிகள் மீது அவர் கொண்டிருக்கலாம்.

எனினும் விடுதலைப் புலிகள் மீதான கோபத்தை தமிழ் மக்கள் மீது அவர் காட்டுவது அவ்வளவு நல்ல தல்ல. 
இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் எதனையும் பெற்றுக் கொள்ள கையேந்துவதென்பது தமிழினத்தை இழிவுபடுத்தக் கூடியது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக் கொண்ட சம்பந்தரை இந்த நாட்டின் தேசியத் தலைவராக பிரத மர் ரணில் விக்கிரமசிங்க புகழ்ந்து பேசினார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை தேசியத் தலைவர் என்று இந்த நாட்டின் பிரதமர் புகழ்ந்து கூறிய தான வரலாறு முன்பு நடந்ததுமில்லை. இனி நடக்கப் போவதுமில்லை.

ஆக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதன் காரணமாக தமிழ் மக்களின் பிரச்சினை பற்றி பாராளுமன்றத்தில் விலாவாரியாக எடுத்துக் கூறுவார். அதற்கான சந்தர்ப்பம் அவருக்கு நிறையவே உண்டு என்றெல்லாம் கற்பனை செய்த தமிழ் மக்கள் நிறையவே உள்ளனர்.

இதற்கு மேலாக இந்த நாட்டின் ஜனாதிபதியை, பிரதமரை இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எந்த நேரத்திலும் சந்திக்க முடியும் என்ற நியதியின் கீழ் எங்கள் சீமான், அடிக்கடி ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்து எங்கள் பிரச்சினையைத் தீர்ப்பார் என்று நாம் நம்பியிருந்த வேளை,

எவரும் எதிர்பார்க்காத வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­வை தேசியத் தலைவர் என்று புகழாரம் சூட்டி எங்கள் இனத்தை சங்காரம் செய்தவருக்கு விருது கொடுத்து சம்பந்தர் மகிழ்ந்தார். 
இவற்றை எல்லாம் நாம் குறிப்பிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கருத்து என்று ஒரு சிலர் கூறிக் கொள்வர். 

இனப்பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் வடக்குக் கிழக்கு இணைப்பு என்றோ சமஷ்டி என்றோ எதுவும் கூறவில்லை.

ஆக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கிராம சேவையாளர் பிரிவுகளை ஒன்றிணைக்கும் கிராம இராச்சியம் என்ற என்ற தீர்வைத் தந்தாலும் சம்பந்தர் ஏற்றுக் கொள்ளத் தயார் என்பது அவரின் உரையில் இருந்து தெரியவருகிறது. 

என்ன செய்வது! இந்தியப் பிரதமராக இருந்த அன்னை இந்திரா காந்தி தன் மெய்ப்பாதுகாவலரை நம்பி அலுவலகக் கடமையை ஆரம்பிப்பதற்காக ஆயத்தமாகிறார்.
துப்பாக்கியை ஏந்திய தன் மெய்ப்பாதுகாவலரைப் பார்த்து புன்சிரிப்புச் செய்கின்ற அன்னை இந்திரா காந்தியின் நம்பிக்கை எல்லாம் மெய்ப்பாதுகாவலர் தன்னை பாதுகாப்பர் என்பதுதான்.

திடீரென துப்பாக்கி வேட்டுக் கேட்கிறது. மெய்ப் பாதுகாவலன், அன்னை இந்திரா காந்தியை நோக்கி சுடுகின்ற சத்தமே அது. தன் மெய்ப்பாதுகாவலனின் துப் பாக்கி ரவைகளை மீதமின்றி தன் மெய்யில் தாங் கிய அன்னை, நீ என்ற செய்கிறாய்? என்ற பெறுமதியான கேள்வியை தன் மரண வேளையிலும் அந்தப் பாதகனிடம் கேட்டு விடுகிறார்.

என்ன செய்வது? நாமும் தமிழ் அரசியல் தலைமையை நம்பினோம். அவர்கள் இந்திரா காந்தியின் மெய்ப்பாதுகாவலர்களாக நடந்து கொள்கின்றனர். 

நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்பதற்கும் திராணி அற்றவர்களாக இருப்பதுதான் எங்களின் துரதிர்ஷ்டம். எதுவாயினும் அன்னை இந்திரா காந்தியின் நிலைதான் ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கும். அவ்வளவுதான்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila