மக்கள் குடியிரப்புக்கள் வளலாய் பகுதியில் அழிப்பு மீள்குட்யேறச் சென்ற மக்கள் தவிப்பு


இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த வளலாய் பகுதியில் நேற்று மீள்குடியமர்வுக்காக அனுமதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகள், காணிகள், தேவாலயங்கள் மற்றும் வீதிகளைத் தேடி அலைந்தே சலிப்புற்றிருந்தனர்.

மீள்குடியமர்வுக்காக அனுமதிக்கப்பட்ட இடங்களில் மக்களுடைய குடியிருப்புக்கள் இருந்தமைக்கான அடையாளங்கள் அடியோடு அழிக்கப்பட்டதாலேயே இந்த குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

வலி.வடக்கு மற்றும் வலி. கிழக்குப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் 25 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் மீள்குடியமர்த்தப்படாத நிலையில் முகாங்களில்தத்தளித்து வந்தனர்.

இந்நிலையில் தமது மீள்குடியேற்றங்களை வலியுறுத்தி பல போராட்டங்களை அம்மக்கள் முன்னெடுத்ததுடன், சர்வதேச பிரநிதிதிகள் யாழ் வருகைதரும்போதும் அவர்களிடமும் தமது நிலமைகள் தொடர்பாக முறையிட்டிருந்தனர்.

இதன் காரணமாக தற்போது ஆட்சி ஏறியுள்ள புதிய அரசாங்கம் அம்மக்களின் காணிகளில் இருந்து முதற்கட்டமாக ஆயிரம் ஏக்கர் நிலத்தினை விடுவிப்பதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.மாவட்டச் செயலத்தில் நடை பெற்ற இறுதிக் கலந்துரையாடலில் வலி. கிழக்கு வளலாய் பகுதியினை பெருமளவு உள்ளடக்கிய ஆயிரம் ஏக்கர் நிலம் விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி கோப்பாய் பிரதேச செலகத்தினால் விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட காணி உரிமையாளர்கள் நேற்றுக் காலை வளலாய் பகுதிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

பிரதேச செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய அங்கு வந்த காணி உரிமையாளர்களுடைய விபரங்கள் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களால் சேகரிக்கப்பட்டது.

அதன் பின்னர் காலை 10.30 மணியளவில் இராணுவத்தினர் மீள்குடியமர்வுக்கு இனங்காணப்பட்ட பகுதிக்கு பொது மக்கள் செல்வதற்கான அனுமதியினை வழங்கியிருந்தார்கள்.

பதிவுகள் செய்யப்பட்ட இடங்களில் இருந்து விடுவிக்கப்படும் பகுதிகளுக்கு மக்கள் செல்வதற்காக வலி.கிழக்குப் பிரதேச சபையினால் வாகன ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்த போதும் காணிகளை பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டு இராணுவத்தினர் காவலரண் கதவுகள் திறக்கப்பட்டதும் மக்கள் பொடி நடையாகவே தமது காணிகளை நோக்கி விரைந்திருந்தனர்.

ஆரம்பத்தில் அந்த வெட்டவெளிக்கு அப்பால்தான் எங்களுடைய காணி என்று தமக்குள் கதைத்துக் கொண்டு மிக வேகமாக உள்ளே சென்றனர்.

இவ்வாறே சிறிது தூரம் சென்று பார்த்த போது தான் அவர்களுக்குப் புரிந்தது! எல்லாமே வெட்டவெளியாகத்தான் இருக்கின்றது! தமது வீடுகள், ஆலயங்கள் என்பன இடித்தழிக்கப்பட்டுவிட்டன, வீதிகள் கூட இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டு விட்டது என்று.

இருந்தாலும் சலித்துக் கொள்ளாமல் தமது காணிகளையும் வீடுகள் இருந்த இடங்களை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த மக்கள் பற்றைக் காடுகளாக இருந்த பகுதிகளுக்குள்ளால் ஊடுருவ ஆரம்பித்தனர்.

முதல் முதலாக உள்ளே வந்த தாய் ஒருவர் தனது வீடு இருந்த காணிக்குள் இருந்த மரம் ஒன்றினை மட்டுமே அவரால் அடையாளம் காண முடிந்தது. அந்தத் தாய் தனது காணியை அடையாம் கண்ட பின்னர் அவர்களுடைய உறவினர்கள் அயலவர்கள் சிலரும் தமது காணிகளை இணங்கண்டு கொண்டார்கள்.

ஆனால் அவர்களுடைய காணிகளுக்குள் இருந்த கிணறுகளோ அல்லது மரங்களோ ஒன்றும் இல்லை. சகலதும் அழிக்கப்பட்டுவிட்டன. இராணுவத்தினர் தமது படைமுகாம் தேவைகளுக்காக பயன்படுத்தியிருந்த விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில வீடுகள் மட்டுமே பகுதியளவில் குறிப்பான நான்கு சுவர்களுடன் மக்களுக்கு திரும்பவும் கிடைத்தது.

அதிலும் சில பொருட்களையும் உடமைகளையும் அவ்வீடுகளில் இருந்து இடம் பெயர்ந்து செல்லும் இராணுவத்தினர் தமது கனரக வாகனங்களில் ஏற்றிச் செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது.

மேலும் இதுவரை காலமும் இருந்த மின்சார இணைப்புக்களையும் இராணுவத்தினர் அங்கிருந்து அகற்றிச் சென்றிருந்தனர்.

குறிப்பாக காணிகளுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட மக்கள் சுமார் ஒரு மணித்தியாலங்களின் பின்பே தமது காணிகள் இருப்பதை இனங்காணக் கூடியதாக இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் தமது காணிகளை இனங்கண்டு கொள்ளாமல் ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila