
காணாமல் போனோரின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் கொடூரங்கள் இடம்பெறுவதாக முன்னணி மனித உரிமை அமைப்பொன்று குற்றம்சாட்டுகின்றது.
படைப் புலனாய்வாளர்கள், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், துணை இராணுவக் குழுக்கள் மாத்திரமன்றி அரசியல்வாதிகளும் பெண்களுக்கு எதிரான இந்த கொடூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக பெண்கள் செயற்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான கட்டமைப்புக்களை அமைப்பதற்கு மக்களின் கருத்துக்களை அறிவதற்காக ஸ்ரீலங்கா அரசினால் சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகமுவ தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள 11 பேர் கொண்ட குழு காணாமல்போனோருக்கான பணியகம் தொடர்பில் மனித உரிமைகள் மற்றும் பொது அமைப்புக்களின் யோசனைகைளை கேட்டறிந்து வருகின்றது.
இந்த அமர்வில் பங்கேற்று தமது ஆலோசனைகைளை வழங்கிய பெண்கள் செயற்பாட்டு அமைப்பின் தலைவி ஷெரீன் சரூர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தமது ஆலோசனைகளை முன்வைக்கையில் “பெண்கள் செயற்பாட்டு அமைப்பு - காணாமல்போனோரது குடும்பங்களைச் சேர்ந்த சில பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டுள்ளது. குறிப்பாக குற்றப் புலனாய்வு பிரிவு, பயங்கரவாத தடுப்புப் பிரிவு, துணை இராணுவக் குழுக்கள் மற்றும் அரசியல்வாதிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே அது தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும் தங்களது உறவினர்களை தேடித்தருமாறு கோரி பலர் பெருந்தொகை பணத்தை குற்றப் புலனாய்வு பிரிவு, பயங்கரவாத தடுப்புப் பிரிவு, துணை இராணுவக் குழுக்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு வழங்கியுள்ளனர் ஆகவே அதனை மீளப்பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுக்களிகடம் தகவல்கள் பெறப்பட்டு அது வெளிப்படுத்தப்பட வேண்டும்.
காணாமற்போனவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பார்களாயின் அவர்களது பெயர் விபரங்கள், எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள், விடுதலை செய்யப்பட்டிருந்தால் அவை அது தொடர்பிலான தகவல்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.“
காணாமல்போனோர் தொடர்பிலான விடயங்களை அணுகுவதற்காக அமைக்கப்படவுள்ள பணியகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் கோரிக்கை விடுப்பதாகவும் ஷெரீன் தெரிவிக்கின்றார்.
இந்த கோரிக்கையில் நியாயம் இருப்பதாகத் தெரிவிக்கும் அவர், அரசாங்கம் இதனை கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
“தமிழர்கள் காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகத்தை அமைத்தல் என்பதில் முரண்படுகின்றனர். தனது அன்பிற்குரியவர் பலவந்தமாக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகவே நினைக்கின்றனர். காணாமற்போனதாக அர்த்தப்படாது என்பதே அவர்களது வாதம். ஆகவே அலுவலகத்தின் பெயரில் பிரச்சினை இருக்கிறது. பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு காணாமற்போனதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அதனை மாற்றியமைக்ககூடிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
ஒரு பெண் காணாமற்போன தனது கணவர் தொடர்பிலான சான்றிதழ் ஊடாக அவரது வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் செய்யக்கூடிய வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதோடு, தனியார் நிறுவனங்களும் குறித்த சான்றிதழை அங்கீகரிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம், காணாமற்போன ஒரு தந்தை, அல்லது கணவரின் கடன் சுமையை குறைப்பதற்கு வழியமைக்க வேண்டும்.“
யுத்தத்தின் போதும், அதற்குப் பின்னரும் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும், சரணடைந்த நிலையிலும் ஏராளமானோர் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளதால் பெண்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஷெரீன், இதனால் குறித்த பணியகத்திற்கான அலுவலர்கள் தெரிவின்போது பெண்களின் பிரதிநிதித்துவம் 50 வீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அது மாத்திரன்றி 2013 ஆம் ஆண்டு முதல் கொழும்பிலும், வடக்குக் கிழக்கிலும் காணாமல்போனோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவந்த ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்தவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“வடக்கு கிழக்கில் நாங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட 300 பேருடனும், 100 செயற்பாட்டாளர்களுடனும் கலந்துரையாடியுள்ளோம். சாட்சியாளர்களின் பாதுகாப்பு, வெளிபடைத்தன்மை, பாலின முக்கியத்துவம் மற்றும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். காணாமற்போனவர்களின் குடும்பங்கள் மீதான கரிசனை கருத்திற்கொள்ளப்பட வேண்டும்.
பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகள் செயற்றிறன் அற்றதாக காணப்பட்டது. குறிப்பாக குடும்பங்கள் தங்கள் பிரச்சினைகளை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் இடையூறு விளைவிக்கப்பட்டது அல்லது குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.“ எனக் குறிப்பிட்டார்.