முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தில் யோஷிதவின் கைது அவர் சார்ந்தவர்களை வறுத்தெடுத்துள்ளது. அரசியல் சார்ந்த ஒருவரைக் கைது செய்து சிறையில் அடைப்பது என்பது பாரதூரமான செயலன்று.
இருந்தும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் மகன் யோஷித ராஜபக்சவின் கைது மகிந்த குடும்பத்தில் மிகப்பெரும் அதிர்ச்சியை - தாக்கத்தை - ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குக் காரணம் தனித்து யோஷிதவின் கைது மட்டுமல்ல; மாறாக யோ´தவை கைது செய்ததன் மூலம் மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தில் சட்டம் பாயத் தொடங்கிவிட்டது. இனி இந்த நாட்டில் போர் வெற்றி கொண்டாடிய மகிந்த ராஜபக்சவும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்பதேயாகும்.
இதனாலேயே யோஷித ராஜபக்சவின் கைது மகிந்த குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, ஒரு குழந்தையை கைது செய்து சிறையில் அடைப்பது அரசியல் பழிவாங்கல் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறிய கருத்துதான் இன்றைய மிகப்பெரும் அதிசயத் தகவல்.
தங்கள் குடும்பத்து இளைஞன் ஒருவன், அதுவும் கடற்படையில் அதிகாரி தரத்தில் இருக்கக் கூடிய ஒரு வரை கைது செய்தபோது அவரைக் குழந்தை என்று கோத்தபாய கூறியது தான் வேடிக்கையும் விசித்திர மும் ஆகும்.
ஒருவருக்கு எத்தனை வயதாயினும் அவரின் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் குழந்தைகள் தான் என்ற பாசத்தை நாம் இங்கு எந்தவகையிலும் கொச்சைப்படுத்தவில்லை.
ஆனால் அதே நினைப்பு எல்லாப் பிள்ளைகள் மீதும் இந்த நாட்ட ஆண்ட மகிந்த ராஜபக்சவுக்கும் அவர் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இருந்திருந்தால் யோஷிதவை குழந்தை என்று கூறியதில் ஆச் சரியப்படுவதற்கில்லை.
ஆனால் இவர்களின் ஆட்சியில் நடந்தது என்ன? பதினொரு வயதான பாலச்சந்திரனை படையினர் கூட்டிச்சென்று தங்களுடன் வைத்திருந்து உண்பதற்கு பிஸ்கெட் கொடுத்தபோது,
எல்லாவற்றையும் இழந்த அந்தக்குழந்தை படையினரின் செயலை தனக்கான ஆறுதலாக நினைத்த போது அந்தோ! என்ன செய்தீர்கள்?
பதினொரு வயதுப் பாலகன் மீது எந்த அரக்கனும் இரக்கம் கொள்வான். ஆனால் உங்களுக்கு மட்டும் ஏன்? அந்த இரக்கம் வரவில்லை.
தமிழ்க் குழந்தை என்பதாலா? அல்லது உங்கள் ஏதிலர் படைத் தலைவனின் குழந்தை என்பதாலா? உங்களுக்கு உங்கள் பிள்ளை குழந்தை என்றால், மற்றவர்களுக்கும் அவரவர் பிள்ளைகள் எந்த வயதிலும் குழந்தைகள் தானே!
அப்படியாயின் அவர்களைக் கொன்றது; காணாமல் போகச்செய்தது; கடத்தியது ஏன்? எதற்காக? அந்த நிகழ்வுகள் நடந்தபோது அந்தப் பெற்றோர்களின் வலி எப்படியிருந்திருக்கும் என்பது இப்போது தெரிகிறதா?
அட! இது வலியல்ல. வலி ஊசிக்கு முன்பாக சோதனை ஊசி. இனித்தான் வலி ஊசி ஏற்றப்படும்.
எதுவாயினும் இந்த நாட்டின் 68ஆவது சுதந்திர தினத்தில் முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் சிறையில் என்பதை இந்த நாட்டின் மக்கள் ஒரு கணம் நிதானமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.