புலிகளுக்குப் பிந்திய சிறிலங்கா

போரால் பிளவுபட்ட தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரலாற்று வாய்ப்பை சிறிலங்கா அரசாங்கம் பெற்றுள்ளது. ஆனால் பழைய வடுக்களை ஆற்றக்கூடிய மீறல்கள் தொடர்பான பொறுப்புக் கூறல்கள் இடம்பெறும் பட்சத்தில் மாத்திரமே இது வெற்றியளிக்கும்.
இவ்வாறு Foreign Affairs ஊடகத்தில், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய பணிப்பாளர் Meenakshi Ganguly எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். Sri Lanka After the Tigers என்ற தலைப்பில் மன்னாரில் இருந்து இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் வடக்குப் பெருநிலப்பரப்பை மன்னார்த் தீவுடன் இணைக்கும் பாலத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் நிலைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவத்தினர் தமது முகாம்களின் முன்னே பூந்தொட்டிகளால் அலங்கரித்துள்ளனர். அத்துடன் இவர்களது நிலைகளின் முன்னே இராணுவத்தினரின் உடைகள் உலரவிடப்பட்டுள்ளன.
இராணுவ முகாம்களுக்கு இடையில் சிவப்பு நிறக் கூரைகளினாலான சிறிய வீடுகள் தென்னந்தோட்டங்கள் மற்றும் காடுகளின் ஊடாகத் தென்படுகின்றன.
இந்த வீடுகளை அடைவதற்கான பாதைகள் வெறும் புழுதி மண், களிமண் போன்றவற்றால் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆங்காங்கே மரக்கறித் தோட்டங்களையும் காணமுடிகிறது.
இந்த சிறிய வீடுகள் சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த நாங்கள் சிறிலங்காவின் வடக்கிற்குப் பயணித்த போது சந்தித்த பல தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பிள்ளைகளையும் தங்களையும் யுத்தத்தில் ஈடுபடுத்தியதாகக் குற்றம்சுமத்தினர்.
முன்னாள் புலி உறுப்பினர்கள் தம்மை இனங்காட்டிக் கொள்ள விரும்பவில்லை.  ஆனால் நாங்கள் சந்தித்த சில தமிழ் மக்கள், புலிகள் தோற்கடித்ததைத் தொடர்ந்து சிங்களவர்களால் போர் வெற்றி கொள்ளப்பட்டமை தொடர்பாக அதிருப்தியடைவதாகத் தெரிவித்தனர்.
தேசிய மீளிணக்கப்பாட்டை விட, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது அரசாங்கமும் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் மீது சித்திரவதைகளைக் கட்டவிழ்ப்பதையே நோக்காகக் கொண்டு செயற்பட்டனர்.
தமிழர் வாழிடங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் எண்ணற்ற பல சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர். தமிழ் மக்களின் அன்றாடச் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்காகவே இவ்வாறான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தாங்கள் பலவந்தமாகக் கைதுசெய்யப்பட்டும் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டு விடுவோமோ என்கின்ற அச்சத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்தனர்.
வெள்ளைவான்கள் மூலம் புலிச் சந்தேகநபர்கள் கடத்தப்பட்டதாகவும் பொது மக்களின் வாகனங்கள் சிறிலங்காப் படைகளால் பயன்படுத்தப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட தமிழர்கள் பலர் மிகவும் கொடூரமாக சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் எம்மிடம் தெரிவித்தனர்.
போரின் போது இறந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவுகூருவதற்கும் தடைவிதிக்கப்பட்டது.
‘சிறிலங்கா இராணுவத்தினர் இறந்த தமது படையினரை நினைவுகூரும் அதேவேளையில், நாங்கள் போரின் போது இறந்த எமது உறவுகளை நினைவுகூருவதற்குத் தடைவிதிக்கப்பட்டமை மிகவும் கொடுமையானது’ என தமிழ்ப் பெண்மணி ஒருவர் தெரிவித்தார்.
போரால் சிதைவுற்ற தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான சிறந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க வாய்ப்பை சிறிலங்கா அரசாங்கம் தற்போது பெற்றுக் கொண்டுள்ளது.
ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது பழைய போர் வடுக்களுக்குப் பொறுப்புக் கூறும் பட்சத்திலேயே நாட்டை ஒன்றுபடுத்துவதற்கான முயற்சி வெற்றிபெறும்.
சிறிலங்காவின் தமிழ் சமூகத்தைத் தவிர்ந்த ஏனைய சமூகங்கள் மத்தியில் ராஜபக்சவின் நடத்தையானது அவரது செல்வாக்கின் மீது தாக்கத்தைச் செலுத்தவில்லை என்பது இங்கு நிச்சயமானது.
26 ஆண்டுகால யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்த ஆட்சியாளர் என்ற வகையில் அவர் சிறிலங்காவைப் பல ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கலாம்.
ஆனால் இவரது அரசாங்கமானது பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டது. அத்துடன் அதிகாரத்துவ ஆட்சியையும் மேற்கொண்டது. இதனாலேயே ஜனவரி 2015ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியுற்றார். இவரது முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மகிந்தவை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிட்டார்.
தற்போதைய அதிபர் சிறிசேன கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பல மீறல்களைக் குறைத்துள்ளார். அத்துடன் சிறிலங்கா இராணுவச் சோதனைச் சாவடிகளையும் இராணுவப் பிரசன்னங்களையும் சிறிசேன குறைத்துள்ளார்.
மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்போர் போன்றவர்கள் மீது காவற்துறையினர் தலையீடு செய்வதானது தற்போது குறைந்துள்ளதாக உள்ளுர் சிவில் சமூக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
போரின் போது இறந்த தமிழ் மக்களை நினைவுகூருவதற்கான அனுமதியும் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
எவ்வித பிடியாணைகள் மற்றும் முன்னறிவித்தலும் இன்றி ‘சட்ட ரீதியற்ற செயற்பாடுகளுக்கு’ கைதுசெய்வதற்கான அனுமதியை வழங்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மூலம் கைதுசெய்யப்பட்டு நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் வழக்குகளை ஆராய்ந்து தீர்வெடுப்பதற்கான நடவடிக்கையையும் சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
புனர்வாழ்வை நிறைவு செய்த சிலரையும் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் விடுவித்துள்ளது. நவம்பர் 2015ல், காணாமற் போதல்கள் தொடர்பான இரண்டு முக்கிய அரசாங்க ஆணைக்குழுக்களால் வெளியிடப்படாத அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
கடந்த ஆண்டின் இறுதியில், சிறிலங்காப் பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களைச் சந்திப்பதற்கான அழைப்பு மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு விடுக்கப்பட்டதுடன் அரசாங்கத்தால் நடத்தப்படும் தொலைக்காட்சி சேவையால் நேர்காணலும் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளில் முதற்தடவையாக, வடக்கு மற்றும் கொழும்பைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுதந்திரமாகச் சந்திப்பதற்கான சூழல் உருவாக்கப்பட்டது.
நாங்கள் வடக்கிற்குப் பயணித்த போது எங்களை எவரும் நிறுத்தவோ அல்லது விசாரணை செய்யவோ இல்லை. சிறிலங்கா அரசாங்க அலுவலகம் ஒன்றில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது அரசாங்கப் பணியாளர்கள் எழுந்து நிற்பதை நாம் அவதானித்தோம். முன்னைய ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான முன்னேற்றங்கள் காணப்படுகின்ற போதிலும், வேதனையளிக்கின்ற சில சமிக்கைகள் இன்னமும் காணப்படுகின்றன.
போரின் போது மனித உரிமை மற்றும் போர் மீறல்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்பளிக்கப்படவில்லை என்பது மிகப்பாரிய பிரச்சினையாகக் காணப்படுகிறது.
இவ்வாறான மீறல்களைத் தீவிரமாக விசாரிப்பதற்கு ராஜபக்ச அரசாங்கம் மறுத்தது. போரின் போது பூச்சியப் பொதுமக்கள் இழப்புக் கைக்கொள்ளப்பட்டதாக மகிந்த ராஜபக்ச அறிவித்தது.
உள்ளுர் மற்றும் அனைத்துலக மனித உரிமைக் கண்காணிப்பாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என மகிந்த அரசாங்கம் குற்றம் சுமத்தியது.
மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அமெரிக்கா தலைமையிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் இரண்டு தீர்மானங்களையும் ராஜபக்ச அரசாங்கம் நிராகரித்தது. 2015இன் இறுதிப்பகுதியில், மனித உரிமைகள் சபையால் சிறிலங்கா மீது பிறிதொரு தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதாக சிறிலங்காவின் புதிய அரசாங்கம் உறுதியளித்தது. இத்தீர்மானமானது ஒக்ரோபர் 1, 2015ல் மேற்கொள்ளப்பட்டது.
இத்தீர்மானத்தில் போர்க்கால மீறல்களை விசாரணை செய்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கான நீதிப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் அனைத்துலக நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்கள் உள்ளடக்கப்பட்ட நீதிப்பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஒப்புதல் அளித்த போதிலும், ஜனவரி 21ல் அதிபர் சிறிசேனவால் பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில், ‘அனைத்துலக சமூகத்தின் தலையீடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது’ எனத் தெரிவித்திருந்தார்.
 ‘எமது உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான போதியளவு வல்லுனர்கள், நிபுணர்கள் மற்றும் துறைசார் அறிவாளிகளை நாம் அதிகளவில் கொண்டுள்ளோம்’ என சிறிசேன தனது நேர்காணலில் சுட்டிக்காட்டியிருந்தார்.
சிறிசேனவின் இக்கூற்றானது சிறிலங்காவால் இணை அனுசரணை வழங்கப்பட்ட ஐ.நா தீர்மானத்தை நேரடியாகத் தாக்குகிறது. சிறிசேனவின் நேர்காணலை அடுத்து அதற்குப் பதிலளிக்கும் முகமாக, ஜனவரி 28 அன்று சிறிலங்காவின் முன்னணி வல்லுனர்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 144 பேரைக் கொண்ட குழுவானது கடிதம் ஒன்றை அனுப்பியது.
இக்கடிதத்தில், போர்க் கால மீறல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் சுயாதீன வெளிநாட்டு வல்லுனர்கள், நீதிபதிகள், சட்டவாளர்கள் போன்றவர்களும் உள்ளடக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட சமூகத்தினர்கள் முற்றிலும் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையானது நம்பகத்தன்மையற்றது எனக் கருதுகின்றனர்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் இன்றும் மனவடுக்களுடனேயே வாழ்கின்றனர். காணாமற் போன தமது உறவுகள் மீண்டும் வந்துவிடுவார்கள் என குடும்பத்தினர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
காணாமற் போன தமது உறவுகளை மீட்டுத் தருமாறு இவர்களது குடும்பத்தினர் காணாமற் போனவர்கள் தொடர்பான அதிகாரிகள் மற்றும் ஆணைக்குழுக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு உடனடியாக உதவிகள் வழங்கப்படுவதுடன் உளவள ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும். போரில் காயப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும்.
‘கால்கள், கைகள், கண்கள் போன்ற அவயவங்களை இழந்து பலர் தவிக்கின்றனர்’ என மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.
போரின் போது தமது கணவன்மாரை இழந்த, காணாமற் போன மற்றும் தடுத்து வைக்கப்பட்டவர்களின் மனைவிமார் தமது குடும்பங்களைத் தலைமை தாங்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இவர்கள் தமது அன்றாடச் செலவுகளைக் கூடச் சமாளிக்க முடியாது திணறுகின்றனர்.
ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டும் போதுமானதல்ல. இவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும்.
தனது கணவர் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்போதும் அவர் காணாமற் போனோர் பட்டியலிலேயே உள்ளதாக வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
‘மக்களின் படுகொலைகளுக்குக் காரணமான அடிப்படைக் காரணங்களை சிறிலங்கா அரசாங்கம் கண்டறிய வேண்டும். எமது நிலங்களை சிறிலங்கா இராணுவம் தற்போதும் ஆக்கிரமித்துள்ளன.
மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். எமக்கு நீதி கிடைக்க வேண்டும். எமது வாழ்வாதாரங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்’ என அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
போரால் பிளவுபட்ட தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரலாற்று வாய்ப்பை சிறிலங்கா அரசாங்கம் பெற்றுள்ளது. ஆனால் பழைய வடுக்களை ஆற்றக்கூடிய மீறல்கள் தொடர்பான பொறுப்புக் கூறல்கள் இடம்பெறும் பட்சத்தில் மாத்திரமே இது வெற்றியளிக்கும்.
சிறிலங்காவிற்கு அண்மையில் பயணம் செய்த ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசேன், இனவாதம் போன்றன நாட்டிலிருந்து களையப்பட வேண்டும்எனத் தெரிவித்திருந்தார்.
போரின் போது காயமடைந்த மற்றும் இறந்த குடும்பங்களுக்காக மன்னார் மாவட்டத்தின் கணேசபுரம் கிராமத்தில் 71 வீடுகள் ஒதுக்கப்பட்டன.
இந்தக் கிராமத்தை அடைவதற்கு நாங்கள் இராணுவ முகாமைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. வாழ்க்கை என்பது மிகவும் கடினமானது என பெண்மணி ஒருவர் எம்மிடம் தெரிவித்தவாறு தனது மரக்கறித் தோட்டத்தைப் பெருமையுடன் காண்பித்தார்.
இவரது தோட்டத்தைப் போலவே இன்று சிறிலங்காவில் காணப்படும் நம்பிக்கை அறிகுறிகள் பொய்த்துப் போகாது நீடித்து நிலைத்து நிற்கத்தக்க வகையில் செயற்படுத்தப்பட வேண்டும்.
மொழியாக்கம்- நித்தியபாரதி
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila