சமூக சீர்திருத்தம் என்பது சகல துறைகளிலும் செய்யப்பட வேண்டும்

மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள்; நீதிபதியின் உத்தரவு; ஜனாதிபதியின் அறிவுறுத்தல்; சட்டத்தரணிகளின் கொள்கை என்பன மன ஆறுதலையும் திருப்தியையும் தருகிறது.

மாணவி வித்தியாவை படுகொலை செய்தவர்களுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. மாணவி வித்தியாவின் படுகொலையோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு அதி உச்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதோடு எதிர் காலத்தில் இது போன்ற குற்றச்செயல்களோ அதி உயர்ந்த தண்டனைகளோ இருக்கக்கூடாது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

எனவே, இத்தகைய குற்றச்செயல்களை தடுக்க வேண்டுமாயின் எமது சமூகத்தின் சகல மட்டங்களிலும் சீர்திருத்தம்  என்ற விடயம் முன்னெடுக்கப்படுவது அவசியம்.

அதிலும் குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கக் கல்வியின் முக்கியத்துவம்- மகிமை பற்றி எடுத்துரைப்பது அவசியமாகும். பொதுவில் சமகாலத்துப் பாடசாலைக் கல்வி என்பது பாடவிதானத்தை-பரீட்சைப் பெறுபேற்றை மையமாகக் கொண்டதாக இருக்கிறது.

அதிபர், ஆசிரியர்கள், கல்வித் திணைக்களம், பெற்றோர் என்ற தரப்பினர் பரீட்சைப் பெறுபேற்றை மையமாக வைத்தே தமது செயற்பாடுகளை நகர்த்துகின்றனர்.

இதனால் பரீட்சையில் எத்தனை மாணவர்கள் சித்தியடைந்தனர் என்ற கேள்வியும் அதற்கான பகுப்பாய்வும் ஒப்பிடுகைகளுமே நடந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் மாணவர்களில் எத்தனை பேர் மனித நேயத்தை, சமூக விழுமியத்தை, பண்பாட்டை, ஆன் மிகத்தை கற்றுத் தேர்ந்தனர் என்று எவரும் கணக்கெடுப்பதில்லை. இங்குதான் கல்வியின் அடைவு தோல்வி அடைகிறது. சமயபாடத்தில் அதிவிசேட சித்தி பெற்றிருக்கக் கூடிய ஒரு மாணவன் சமூக விழுமியத்தை கடைப்பிடிப்பதில் தோற்று விடுகிறான்.

இங்குதான் சமயம் வாழ்க்கைக்கான கல்வியாக அல்லாமல், உயர் பெறுபேற்றை எடுக்கக்கூடிய பாடமாக மாற்றம் பெறுகிறது.

எனவே, பாடசாலைகளில் மாணவர்களின் ஒழுக்க விழுமியம் தொடர்பில் அனைவரும் கூடிய கவனம் செலுத்துவதுடன் அதற்கான முக்கியத்துவத்தையும் கொடுத்தாக வேண்டும்.

இதேபோன்று எமது சமூகத்தில் உள்ள இளைஞர்களை வழிப்படுத்துவதற்கான திட்டமிடல்களும் அவசியமாகின்றன. இளைஞர் கூட்டத்திற்கான வழிகாட்டிகளாக பெரியவர்கள் இருந்தாக வேண்டும். எனினும் சமகாலத்து இளைஞர்கள் சமவயதுடனான நட்பைத் தவிர, பெரியவர்களின் அறிவுரைகளை-அனுபவங்களை பகிர்ந்து கொள்வதாகத் தெரியவில்லை.

எனவே, சமகாலத்து இளைஞர்களை வழிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் ஒழுங்குபடுத்தலும் அவசியமாகும். ஒவ்வொரு ஊரிலும் உள்ள சன சமூக நிலையங்கள், கிராம முன்னேற்ற சங்கங்கள் என கிராம அமைப்புகள் முன்வந்து இளைஞர்களுக்கான கருத்தரங்குகள், தொழில் வழிகாட்டல்கள், உயர் கல்விக்கான வாய்ப்புகள் என்பவற்றை வழங்கும் போது இளைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

எனவே, எமது மண்ணில் சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் சகல துறைகளிலும் சீர்திருத்த முறைகள் அமுல்படுத்தப்படுவது கட்டாயம்.          
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila