விடுதலைப்புலிகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பவர்களும் இருக்கவே செய்வர். அவ்வாறு எதிர் விமர்சனங்களை முன்வைப்பவர்களும் புலிகளின் காலத்தில் களவு, கொள்ளை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் பெண்களுக்கு நூறு வீத பாதுகாப்பு இருந்தது என்பதையும் ஏற்றுக் கொள்வர்.
அந்தளவுக்கு விடுதலைப்புலிகளின் காலத்தில் கட்டுப்பாடுகள் இருந்தன.
ஓர் இடத்தில் களவு நடந்தால் அதைச் செய்தவர்கள் சில நாட்களுக்குள் அகப்பட்டு விடுவர். அந்தளவுக்கு புலிகளின் புலனாய்வு மிக உச்சமாகச் செயற்பட்டது.
இதனால் அச்சமற்ற உறக்கத்தை மக்கள் அனுபவித்தனர். யன்னல் கதவுகளைத் திறந்து விட்டு இயற்கையின் காற்றை சுவாசித்துக் கொண்டு சுகமாக உறங்கிய அந்தக் காலம் இப்போது இல்லை.
எந்த நேரமும் கள்வர் வீடு புகுந்து களவு எடுக்கலாம். எத்தனை இலட்சங்களை அவர்கள் எடுத்துச் சென்றாலும் அவர்களைக் கண்டுபிடிப்ப தென்பது நடக்கப்போவதில்லை என்பது தெரிந்த விடயம். களவு கொடுத்தவர் பொலிஸில் முறைப்பாடு செய்வார். பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருவார்கள்.
கைரேகையைப் பதிவு செய்வார்கள். அத்தோடு அவை புத்தகப் பதிவாகி பொலிஸ் நிலையத்தில் களஞ்சிய அறையில் ஆவணமாகிக் கொள்ளும். இதைவிட வேறு எதுவும் நடந்ததாக அறிய முடியவில்லை.
களவு நடந்த வீடுகளில் கைரேகையைப் பதிவு செய்யும் பொலிஸார் இதுவரையில் கைரேகை அடையாளத்தை வைத்து கள்வரை கைது செய்த தான சம்பவங்கள் ஏதேனும் உண்டா என்பதும் தெரியவில்லை.
களவு, கொள்ளை தொடர்பில் பொலிஸாரின் வினைத்திறன் மிக்க நடவடிக்கை இன்மையால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் நாளுக்கு நாள் களவுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
யன்னல் கதவுகளை இறுக்கப்பூட்டி காற்றாடியின் கடகடப்போடு உறங்கி விழிக்கின்ற பரிதாப நிலையிலேயே இன்று யாழ்ப்பாண மக்கள் உள்ளனர்.
சுருங்கக் கூறின், வீடுகளுக்கு யன்னல் வைத்த தன் பயனை யாழ்ப்பாண மக்கள் அனுபவிக்க முடியாமல் இருக்கின்ற துர்ப்பாக்கிய நிலைமை மிகவும் வேதனைக்குரியது.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் களவு என்பது அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. ஆட்களில்லாத வீடுகளில் பகல் வேளையில் திருட்டு; இரவில் வீடு உடைத்து வீட்டில் இருப்பவர்களை கொன்று விடுவோம் என்று அச்சுறுத்தி நடக்கின்ற கொள்ளைகள் இதற்கு மேலாக வீதிகளில் நடந்தும் துவிச்சக்கர வண்டிகளிலும் செல்கின்ற பெண்களை தள்ளி விழுத்தி அவர்கள் அணிந்திருக்கும் சங்கிலி, காப்பு, தோடு என்பவற்றை பறித் தெடுப்பதிலும் மோட்டார் சைக்கிள் குழுக்கள் செய்யும் அநியாயம் என எங்கும் ஒரே அட்டகாசம் மிக வேகமாக அரங்கேறி வருகிறது. இது தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் நிலைமை எல்லை மீறிச் செல்லும் என்பது மட்டும் உண்மை.
அதேசமயம் களவுச் சம்பவங்கள் தொட ர்பில் மோப்ப நாய்களை சேவையில் ஈடுபடுத்துவது மிகவும் அவசியமானதாகும். எனினும் மோப்ப நாய்களை சேவையில் ஈடுபடுத்துவதில் மன உடன்பாடு இல்லாத நிலைமையையும் அவதானிக்க முடிகிறது.
எது எப்படியாயினும் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் களவு மற்றும் கொள்ளைகளைக் கட் டுப்படுத்துவதில் பொலிஸார் அதிகூடிய நடவடிக்கை எடுப்பது அவசியம்.
வலம்புரி ஆசிரியர் தலையங்கம்