அநுராதரபுரம் சிறையில் இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களாக குற்றம் சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மதியரசன் சுலக்ஷன், கணேசன் தர்சன் ஆகியோரே இவ்வாறு உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர்.
இவர்களில் மதியரசன் சுலக்ஷன் வன்னி யுத்த முடிவில் படையினரிடம் சரணடைந்துள்ளார். அதன் பின் 2009.07.1ம் திகதி வரை ஓமந்தை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் பின்னர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் ஒன்றரை வருடங்கள் கொழும்பு மற்றும் பூசா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சுலக்ஷன், 2012.01.09ம் திகதி கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் 2013.07.15 ம் திகதி வவுனியா நீதிமன்றத்தில் சுலக்ஷன் ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த அவரது வாக்குமூலம் என்று கூறப்பட்டிருந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்த குற்றச் செயல்கள் தொடர்பில் போதுமான ஆதாரங்களை பொலிசார் சமர்ப்பிக்கவில்லை.
வழக்குத் தொடரப்பட்டு மூன்று மாதங்களின் பின்னர் குற்றப்பத்திரிகையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, முன்னைய குற்றப் பத்திரிகை வாபஸ் பெறப்பட்டது. புதிய குற்றப்பத்திரிகைக்கான கால அவகாசம் கோரப்பட்டிருந்தது.
எனினும் சுமார் இரண்டு வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் அவருக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படவில்லை. இது தொடர்பாக சுலக்ஷனின் வழக்கறிஞர் பல தடவைகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
அத்துடன் சுலக்ஷனின் தாயார் ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோருக்கும் பல்வேறு தடவைகள் கடிதம் மூலம் முறைப்பாடு செய்திருந்தார். எனினும் இன்றுவரை எதுவித பதிலும் கிடைக்கப் பெற்றிருக்கவில்லை.
இதனையடுத்து சுலக்ஷன் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார். அவருடன் கணேசன் தர்சன் என்ற இன்னொரு தமிழ் அரசியல் கைதியும் இணைந்து கொண்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila