விமல் வீரவன்ஸவுக்கு அன்பு வணக்கம். இன்று வரை பேரினவாதத்தை கைவிடாத தங்களின் மன வக்கிரம் கண்டு அதிர்ந்து போனவர்களில் நானும் ஒருவன்.
அரசியல் அனுபவம், துணிச்சல், பேச்சாற்றல் என்ற சிறப்பம்சங்கள் தங்களிடமிருந்தும் அவையனைத்தும் இனவக்கிரத்தைத் தூண்டுவதற்காக செலவிடப்படுவதைக் கண்டு வேதனை கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
இனவாதம் பேசிப்பேசியே தமிழ் மக்களுக்கு எதிரான போக்கை நிலைநாட்டிவரும் தாங்கள் என்றோ ஒருநாள் இதற்கான தண்டனையை அனுபவித்தாக வேண்டும் என்பதில் எந்தமறுதலிப்பும் இருக்க முடியாது.
இது ஒருபுறம் இருக்க; தங்களின் பேச்சு நுட்பங்கள், அரசியல் கருத்துக்கள் குறித்து கவனம் செலுத்தும் நமக்கு, நேற்று முன்தினம் தாங்கள் திருகோணமலையில் நடந்த மக்கள் சந்திப்பொன்றில் பங்கேற்று கருத்துரைக்கையில்,
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெற்றால் அதன் ஆபத் துக்களைப் பட்டியல்படுத்தியுள்ளீர்கள்.
ஒரு நாட்டில் இராணுவத்தினரால் அந்த நாட்டின் பிரஜைகள் கொல்லப்பட்டிருந்தால், அதனை சர்வதேச விசாரணைகள் மூலம் நிரூபித்து பாதிக்கப்பட்ட இனம் தனி நாடு கோர முடியும் எனக் கூறியுள்ளீர்கள்.
இதன்மூலம் ஓர் உண்மையை நீங்கள் கூறியிருப்பது கண்டு அதிசயிக்காமல் இருக்க முடியாது. அதாவது இலங்கையில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டுள்ளனர் என்ற உண்மையை தாங்கள் ஏற்றுள்ளீர்கள்.
நல்லது தமிழ் மக்கள் தனி நாடு கேட்டுவிடுவதை தடுப்பதற்காக சிங்கள மக்களிடம் நீங்கள் ஒரு உண் மையை கூறவேண்டிய தேவையிருந்துள்ளது.
ஆக, உங்களின் பயமெல்லாம் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட உண்மையை சர்வதேச விசாரணை நிரூபித்து விட்டால், தமிழர்களுக்கு தனிநாடு வழங்க வேண்டி வந்துவிடும் என்பதுதான்.
தமிழினத்தை இந்த நாட்டின் ஆட்சி அதிகாரங்கள் காலத்துக்குக் காலம் கொன்றொழிக்கின்ற போதிலும் தமிழ்மக்கள் பேரினவாதப் பிடிக்குள் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புவதற்குக் காரணம்,
காலத்திற்கு காலம் இன அழிப்பிற்கு தமிழ் மக்கள் தேவையயன்றோ அல்லது தமிழ் மக்களை முற்றாக அழித்தால் தான் இலங்கையை தனித்து பெளத்த சிங்கள நாடாக்க முடியும் என்பதற்காகவோ அவர்கள் உங்களோடு இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவதாக இருக்கலாம்.
இங்குதான் நீங்கள் ஒரு உண்மையை மறந்துள்ளீர்கள். அதாவது சர்வதேச விசாரணையை தமிழ் அரசியல் தலைமை வலியுறுத்தவில்லை என்பதை நீங்கள் அறியாதது ஆச்சரியமே.
ஐ.நா. சபையில் எழுந்து நின்று போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் எனக் கேட்பதற்குத் தமிழர்களிடம் ஆட்கள் இல்லை. கேட்க வேண்டியவர்களும் விலைபோய்விட்டனர்.
ஆகையால் அன்புக்குரிய விமல் வீரவன்ஸ அவர்களே! சர்வதேச விசாரணை வந்துவிடும் என்று பயம் கொள்ளாதீர்கள்.
சர்வதேச விசாரணையை நீங்கள் விரும்பினால் கூட, எங்கள் தமிழ்த் தலைமைகள் ஒருபோதும் விரும்ப மாட்டா. ஏனெனில் சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து அவர்களுக்கு நிறைந்த இலாபம் கிடைக்கின்றது.
எனவே தமிழ் மக்களுக்காகக் கதைப்பதை விட தமிழ் மக்களுக்காகக் கதைப்பது போல நடித்து ஆட்சியாளர்களுக்கு உதவுவது சுயநன்மை தரும் என்ற உண்மை அவர்களுக்குத் தெரியும் என்பதால் அவர்கள் ஒருபோதும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தப் போவதில்லை.
ஆகையால் தேவையற்ற மனப் பிரம்மையைக் கைவிடுவது உங்களுக்கும் நாட்டுக்கும் நல்லது.