கேள்விக்குள்ளாகியுள்ள இராணுவத்தின் ஒழுக்கம்

யாழ்ப்பாணத்தில் நடந்த பாதுகாப்பு உயர்மட்ட மாநாட்டில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன், மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே முரண்பட்ட விவகாரம்அரசியல், இராணுவ மட்டங்களில் பாரதூரமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும், நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு இராணுவத் தரப்பில் இருந்து சவால்கள் கிளம்புவதற்கான ஒரு சமிக்ஞையாகவே இதனைப் பலரும் நோக்குகின்றனர்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் கடந்த 12ஆம் திகதி நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஆலோசனைச் செயலணியின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றிருந்தது. அதற்கு முதல்நாளே யாழ்ப்பாணம் சென்றிருந்தார் மங்கள சமரவீர.
அவர், யாழ். படைகளின் தலைமையகத்தில், டிவிஷன் தளபதிகள், பிரிகேட் தளபதிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்தியிருந்தார்.
அந்தக் கூட்டத்தில் பாதுகாப்புச்செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, கூட்டுப்படைகளின் தளபதியான எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலக, யாழ். படைகளின் கட்டளை தளபதி மேஜர்ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில், 51ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயும் பங்கேற்றிருந்தார். அவரது டிவிஷன் தலைமையகம், கோப்பாயில், உள்ளது.
முன்னர் யாழ்ப்பாணம் ஞானம்ஸ் விடுதியில் இயங்கிய இந்த டிவிஷனின் தலைமையகம் பின்னர், கோப்பாயில் விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலுமில்லம் இருந்த இடத்தின் மீது புதிதாக அமைக்கப்பட்டது.
பலாலி படைத் தலைமையகத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, படையினரின் நலன்களை அரசாங்கம் பாதுகாக்கும் என்று தெளிவுபடுத்தியதுடன், நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணி பற்றியும் விளக்கமளித்திருந்தார்.
அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே, 11 பேரைக் கொண்ட நல்லிணக்கச் செயலணியில் இராணுவத் தரப்பின் பிரதிநிதியாக மேஜர்ஜெனரல் ஒருவர் உள்ளடக்கப்பட வேண்டும் என்று கோரினார்.
அதற்கு மங்கள சமரவீர இணங்க மறுத்து விட்டார். இதனால் தான், மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே கடுமையான வாதம் செய்திருந்தார். அது அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பதவிக்கு வந்து சுமார் 13 மாதங்கள் கழித்து இராணுவத்தின் கீழ்ப்படியாமை நிலையை புதிய அரசாங்கம் முதன் முதலாக எதிர்கொண்டது இந்தச் சந்தர்ப்பத்தில் தான்.
ஏற்கனவே இதுபோன்றதொரு இராணுவ ஒழுக்கநெறிக்கு முரணான சம்பவம் அண்மையில் நிகழ்ந்திருந்தது.
கடந்த நவம்பர் மாதம், நீர்கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் நடந்த நிகழ்வில், ஒன்பது மேஜர் ஜெனரல்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேச்சுநடத்தியிருந்தனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் இறுதிப்போரில் முக்கிய பங்காற்றியவர்கள்- முன்னைய அரசாங்கத்துடன் நெருக்கமாக இருந்தவர்கள்.
அந்த ஒன்பது மேஜர் ஜெனரல்களில் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
55 வயதுடன், இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற வேண்டும் என்ற விதியை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவதை தளர்த்த வேண்டும் மற்றும் போர்க்குற்ற விசாரணை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துமே, அவர்கள் ஜனாதிபதியுடன் பேசியிருந்தனர்.
எனினும், இராணுவ ஒழுக்கநெறிமுறைகளுக்கு ஏற்ப அந்தச் சந்திப்பு இடம்பெற்றிருக்கவில்லை.
இராணுவத் தளபதி, பாதுகாப்புச் செயலர் ஆகியோரின் முன் அனுமதியைப் பெற்றே இராணுவ உயர் அதிகாரிகள் இத்தகைய சந்திப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
அந்த விதிமுறை கையாளப்படாதமை, இராணுவத் தளபதி மற்றும், பாதுகாப்புச் செயலாளருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
அந்தச் சந்திப்பினால்- கீழ்ப்படியாமை நிலையினால், ஜனாதிபதிக்கோ, பிரதமர் அல்லது அமைச்சர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை. ஆனால், யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில், இராணுவ ஒழுக்கநெறிமுறைகளுக்கு அப்பால், கீழ்ப்படியாமை நிலை ஒன்றை வெளிவிவகார அமைச்சர் நேரடியாகவே எதிர்கொண்டார்.
இந்த வாக்குவாதத்தின் பின்னர், 51 ஆவது டிவிஷன் தளபதி பதவியில் இருந்து மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே இராணுவத் தளபதியால், நீக்கப்பட்டார்.
அவருக்குப் பதிலாக பிரிகேடியர் மேர்வின் பெரேராவிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் தரைப்படைகளின் பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே இப்போது வகிக்கும் பதவி படையினருக்கு தலைமை தாங்கக்கூடிய ஒன்று அல்ல. நிர்வாகத்துறை சார்ந்த பதவி அது.
ஏற்கனவே, 51ஆவது டிசவிஷன் தளபதி பதவியில் அவர் இரண்டு ஆண்டுகள் வரை பதவியில் இருந்திருக்க முடியும். ஆனால், அதற்கு முன்னரே அவர் இடமாற்றப்பட்டதற்கு மங்கள சமரவீரவுடனான வாய்த்தர்க்கமே காரணமாக கூறப்படுகிறது.
51ஆவது டிவிஷன் தளபதி பதவி என்பது, ஒரு மூத்த மேஜர் ஜெனரலான சாஜி கல்லகேயைப் பொறுத்தவரையில், குறைவான ஒரு பதவி நிலையே என்றாலும், அதுஅந்த டிவிஷனில் உள்ள படையினருக்கு ஆணையிடும் அதிகாரத்தை கொடுத்திருந்தது.
ஆனால், இப்போது அவர் வகிக்கும் பதவியில் இருந்து கொண்டு படையினர் எவருக்கும் அவரால் உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது. இது முக்கியமானதொரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
எனினும், மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, இராணுவத் தளபதிலெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே, கொமாண்டோ படைப்பிரிவின் தளபதியாக இருந்து, 2006--07 காலகட்டத்தில் கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
அதன் பின்னர், 2007இல் முதல்முறையாக அதிரடிப்படை-1 என்ற பெயரில், 58ஆவது டிவிஷன் செயற்படத் தொடங்கிய போது, அந்தப் படைப்பிரிவினால் சிலாவத்துறையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கும் இவரே தலைமை தாங்கியிருந்தார்.
மன்னார் உயிலங்குளத்தில் இறுதிப் போருக்கான இரண்டாவது களமுனையும் இவரால் தான், திறக்கப்பட்டது.
உயிலங்குளம், பாப்பாமோட்டை, மாந்தை பகுதிகளில் சண்டைகள் நடந்து கொண்டிருந்த போது, அதிரடிப்படைப் பிரிவு -1 இற்குத் தலைமை தாங்கிய பிரிகேடியர்சாஜி கல்லகே சுகவீனமுற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், அவசரமாக களமுனையில் இருந்து அகற்றப்பட்டார். அதற்குப் பின்னர் தான், அதிரடிப்படை- 1 என்ற பெயரில் செயற்பட்ட 58ஆவது டிவிஷனுக்கு பிரிகேடியராக இருந்த சவேந்திர சில்வா தளபதியாக்கப்பட்டார்.
மருத்துவ சிகிச்சை முடிந்து திரும்பிய போதும் பிரிகேடியர் சாஜி கல்லகேயினால், தனது முன்னைய பதவியைப் பெற முடியவில்லை.
காரணம், மன்னார் களமுனையில், பிரிகேடியர் சவேந்திர சில்வாவின் தலைமையில் 58ஆவது டிவிசன் கணிசமாக முன்னேறத் தொடங்கியிருந்தது.
இருவரும் ஒரே குழுவில் பயிற்சி பெற்றவர்கள். ஆனால் சாஜி கல்லகேயை விட சவேந்திர சில்வா ஒரு வயது இளையவர் என்ற போதும், இராணுவத்தில் இணைந்துகொண்டதன் அடிப்படையில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சற்று சேவை மூப்பு கொண்டவர்.
அதனாலும், மீண்டும் பிரிகேடியர் சாஜி கல்லகேயினால், அந்தப் பதவியைப்பெற முடியவில்லை. ஆனால், அவர் 58ஆவது டிவிஷனின் துணை கட்டளை அதிகாரியாகவும், கொமாண்டோ படைப்பிரிவுகளை வழிநடத்தும் அதிகாரியாகவும், போர் முனையில் செயற்பட்டார்.
2009 பெப்ரவரி முதல் வாரம் விடுதலைப் புலிகள் புதுக்குடியிருப்பு பகுதியில் நடத்திய ஒரு பாரிய ஊடறுப்புத் தாக்குதலையடுத்து, 59 ஆவது டிவிஷன் நிலைகுலைந்து பின்வாங்கியது.
அந்தக் கட்டத்தில், நிலைகளை மீளமைத்து, அந்த படைப்பிரிவை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு, பிரிகேடியர் சாஜி கல்லகேயிடமே ஒப்படைப்பட்டது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், 59ஆவது டிவிசனின் தளபதியாக நியமிக்கப்பட்டதுடன், மேஜர் ஜெனரலாகவும் பதவி உயர்த்தப்பட்ட அவர், பின்னர், புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவத்தின் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கு தளபதியாக்கப்பட்டார்.
ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து, சில மாதங்களுக்கு முன்னர் இந்தப் படைப்பிரிவு கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவும், பின்னர் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவும் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே பதவி வகித்திருந்தார்.
இவர் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷவுடன், பிரித்தானியா சென்றிருந்த போது, அங்கு போர்க்குற்ற வழக்கு ஒன்று இவருக்கு எதிராக தொடுக்கப்பட்டது.
கோத்தபாய ராஜகபக் ஷவுடன் கஜபா படைப்பிரிவில் இணைந்து செயற்பட்டவர் என்ற வகையில், அவரது நம்பிக்கையைப் பெற்றிருந்த சாஜி கல்லகே, ஜனாதிபதிபாதுகாப்புப் படைப்பிரிவிலும் இருந்தவர் என்ற வகையில், தற்போதைய அரசாங்கத்தினால் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே, உள்ளிட்ட இறுதிப்போரில் முக்கிய பங்காற்றிய இராணுவ அதிகாரிகள் பலரும், தற்போதைய அரசாங்கத்தினால் அதிக முக்கியத்துவமற்ற பதவிகளிலேயே அமர்த்தப்பட்டுள்ளனர்.
அது அவர்களைப் பெரிதும் பாதிக்கின்ற விடயமாக காணப்படுகிறது.
மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா போன்ற போரில் முக்கிய பங்காற்றிய அதிகாரிகள், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிகேடியராக இருந்த போது– டிவிசன்களுக்குத் தலைமை தாங்கிய அதிகாரிகளாக இருந்ததுபோன்று தான் இப்போதும் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களுக்கு சில அதிகாரிகளைப் பொறுப்புக்கூற வைக்க அரசாங்கம் முனைகிறது என்ற தகவல்களும் வெளியாகியிருந்தன.
அதாவது ஒட்டுமொத்த இராணுவத்தின் பெயரையும் போர்க்குற்றச்சாட்டில் இருந்து பாதுகாக்க, சில படையினர் மற்றும் அதிகாரிகளை அவற்றுக்குப் பொறுப்பேற்க வைக்க அரசாங்கம் முனைகிறது என்ற கருத்தும் வலுவாக இருக்கிறது.
இப்படியானதொரு சூழலில் தான், மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் விவகாரம் தீவிரம் பெற்றிருக்கிறது.
இராணுவத்தின் ஒரு பகுதியினர் மத்தியில் இருக்கின்ற அதிருப்திகள் அரசாங்கத்தை அச்சம் கொள்ள வைக்கும் அளவில் இருக்கின்றது.
அதாவது போர்முனையில் முக்கிய பங்காற்றிய அதிகாரிகள் தாம் ஓரம்கட்டப்பட்ட போது பொறுத்துக் கொண்டார்கள். ஆனால், குற்றச்சாட்டுகளுக்கும் பொறுப்பாக்கப்படுவதை சாதாரணமாக பொறுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்பதையே இந்த விவகாரம் எடுத்துக் காட்டியிருக்கிறது.
பொறுப்புக்கூறல் விவகாரத்தில், அரசாங்கம் சிக்கலானதொரு நிலையை விரைவிலேயே எதிர்கொள்ளும் என்பதைத் தான் இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டியிருக்கிறது,
அதேவேளை, இந்த விடயம் தொடர்பாக கடுமையான நடவடிக்கையில் இறங்கினால், அது நாட்டைப் பாதுகாத்த படை அதிகாரிகள் பழிவாங்கப்படுவதாக பிரசாரத்தைசிங்களத் தேசியவாத சக்திகள் தீவிரப்படுத்தும்.
அவ்வாறு கடும் நடவடிக்கை எடுக்கவில்லையாயின், இராணுவத்தில் ஒழுக்கக்கேடு அதிகமாவதுடன் அது இராணுவத்தின் பெயரை மேலும் நாசப்படுத்தி விடும்.
எனவே இந்த விவகாரம் அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் முடிவுகளை எடுப்பதில் சிக்கலானதொரு சூழலை ஏற்படுத்தியிருக்கிறது என்றே கூறலாம்.
சுபத்ரா
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila