நாடாளுமன்றத்தினை அரசியலமைப்பு சபையாக மாற்றுவதற்கு நாளை வாக்கெடுப்பு(இரண்டாம் இணைப்பு)

19-1439965776-srilanka-parliament57நாடாளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக மாற்றுவது தொடர்பிலான பிரேரணை இன்றும், நாளையும் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டு நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆளுங்கட்சி பதில் பிரதம கொறடா அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேரரணை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சியினரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை முன்வைப்பதற்காகவே விவாதத்தை இரண்டு நாட்கள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அஜித் பி.பெரேரா மேலும் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு பேரவை குறித்த பிரேரணை தொடர்பில் இன்றும் நாளையும் விவாதம் நாடாளுமன்றத்தை அரசியலமைப்புப் பேரவையாக மாற்றுவது குறித்த பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை சபையில் முன்னெடுக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த விவாதம் இன்றும்(செவ்வாய்கிழமை) நாளையும்(புதன்கிழமை) நடத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் வகையில் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தில் அரசியல் கட்சித்தலைவர்களின் அனுமதி பெறப்பட்டு பிரேரணை மீதான விவாதம் முன்னகர்த்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவது குறித்த பிரேரணை மீதான விவாதம் முன்னகர்த்தப்படுவதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்படும் பட்சத்தில் எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் காணாமல்போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக இன்றைய தினம் கொண்டு வரப்படவிருந்த சபை ஒத்தி வைப்பு பிரேரணையானது எதிர்வரும் வெள்ளிக்கிழமையே சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக 225 மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்தினை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவது குறித்த பிரேரணை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்த பிரேரணை மீதான விவாதம் கடந்த ஜனவரி மாதம் 09 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவிருந்தபோதும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் அது தொடர்பிலான திருத்தங்களை முன்வைக்க வேண்டுமெனக் கோரியிருந்தனர். இதன் காரணமாக அந்த பிரேரணை மீதான விவாதம் பிற்போடப்பட்டு எதிர்வரும் 25ஆம் திகதி வியாழக்கிழமை அவ்விவாதம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக மக்கள் கருத்தறியும் நிபுணர் குழு 19 மாவட்டங்களில் தமது அமர்வுகளை நிறைவு செய்துள்ளது. இம்மாத இறுதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் அக்குழுவினரின் அமர்வுகள் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் சில மாவட்டங்களில் விசேட அமர்வுகளை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila