விடுதலை புலிகள் அமைப்பின் புலனாய்வுத் துறையை சேர்ந்த காந்தி என அழைக்கப்படும், நல்லையா மகேஸ்வரன் என்ற தனது கணவரை இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்ற பின்னர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி சாட்சியம் அளித்துள்ளார்.
கோப்பாய் பிரதேச செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப்பதிவின் போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்துள்ளார். அந்த அமர்வில் காணாமல் போன தனது கணவன் குறித்து அவர் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில்,
‘எனது கணவர் 2009ம் ஆண்டு 5ம் மாதம் 16ம் திகதி காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவ்வேளை அங்கு இராணுவத்தினருடன் புலிகள் அமைப்பின் புலனாய்வுதுறையை சேர்ந்த ஒருவர் எனது கணவரும் புலனாய்வு துறையை சேர்ந்தவர் என அடையாளம் காட்டினார்.
அதனையடுத்து எனது கணவரை இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்றனர். அதன் பின்னர் கணவரை பற்றிய எந்த தகவலும் இல்லை.’ என்றும் கூறினார்.