கெளதம புத்தபிரான் பரிநிர்வாணம் அடைந்த நாள் இன்று.
பெளத்த மதத்தவர்களுக்கு இன்றையநாள் புனிதமான வழிபாட்டு நாள்.
கெளதம புத்தபிரானின் போதனைகள் உன்னதமானவை. அவரின் போதனைகள் சரியான முறையில் பின்பற்றப்படுமாயின் இந்த உலகில் அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று வாழ முடியும்.
இருந்தும் கெளதம புத்தபிரானின் போதனைகள் பின்பற்றப்படவில்லை. அதிலும் குறிப்பாக பெளத்த மதத்தை பின்பற்றுகின்ற மக்கள் அதிகளவில் வாழ்கின்ற இலங்கைத் தீவில் புத்தபிரானின் போதனைகள் எந்தளவு தூரம் பின்பற்றப்படுகின்றன என்றொரு ஆய்வு செய்தால், கிடைக்கின்ற முடிவுகள் கவலை தருவதாகவே அமையும்.
அந்தளவிற்கு புத்தபிரானின் போதனைகளை பின்பற்ற வேண்டிய புத்ததுறவிகளே அதனை மறந்து செயற்படுகின்றனர்.
புத்தபகவானின் போதனைகளால் கவரப்பட்டு அவரின் வழியில் வாழப்புறப்பட்ட புத்ததுறவிகளில் பலர் அரசியல் பேசுகின்றனர். மதவாதம், இனவாதம் கதைக்கின்றனர்.
நீதி, தர்மம், உண்மை என்பவற்றை எடுத்துக் கூறுவதற்குப் பதிலாக மனிதவதையை விரும்புபவர்கள் போல சிலரின் பேச்சுக்கள் அமைந்திருப்பது மிகுந்த வேதனைக்குரியது.
புத்தபிக்குகள் சிலர் ஆற்றிய-உரைகளால் இந்த மண்பட்ட அவலம் கொஞ்சமல்ல. இருந்தும் இந்தத் துயரம் நீண்டு செல்கிறது.
ஒட்டுமொத்தத்தில் கெளதம புத்தபிரானின் போதனைகள் எழுத்திலும் புத்தகத்திலும் மட்டுமே உயிர் வாழ்வதை உணரமுடிகின்றது. கெளதம புத்தபிரானின் வழிபாட்டுத் தலங்களின் அடிப்படை தர்ம உபதேசமாகும்.
இருந்தும் இன்று பெளத்த மதம் இலங்கை முழுவதிலும் இருந்துள்ளமை என்பதை நிரூபிப்பதற்கான அடையாளச் சின்னங்களாக கெளதம புத்த பிரானின் வழிபாட்டுத் தலங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.
இவற்றால் போதிமாதவன் ஒரு போதும் மகிழ்வுறப் போவதில்லை. மாறாக தன் வழியைப் பின்பற் றுவர்கள் இப்படி நடந்து கொள்கின்றனரே என்ற கவலையே புத்தபிரானிடம் அதீதமாக ஏற்படும்.
அந்த அறிகுறிகள் தெரிகிறதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
வைகாசி மாதம் பன்னிரு மாதங்களில் மிகவும் இனிமையானது.
எனினும் 2009 வைகாசி மாதம் தமிழ் மக்களுக்கு பெரும் துன்பமாகிப் போனதையடுத்து தொடர்ந்து வரும் வைகாசி மாதம் என்பது இயற்கை சீற்றம் கொள்கின்ற மாதமாக மாறி விட்டதோ என்று ஏழை மனம் எண்ணும் அளவில் நிலைமை உள்ளது.
ஒரு முறை வன்னிப் போர் வெற்றியை கொண்டாடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முற்பட்ட போது அதற்கு இயற்கை இடம் தரவில்லை.
இப்போதும் இயற்கை கடும் கோபம் கொண்டது போல் நடந்து கொள்கிறது.
ஓ! கெளதம புத்தபிரானே! இவை இந்த நாடு குறித்த உங்கள் கோபமோ! தர்மம் நிலை குலைந்து விட்டது என்ற ஆத்திரமோ! யாமறியோம்.
எதுவாயினும் இயற்கையின் சீற்றத்தை நீதியோடு தர்மத்தோடு மக்கள் பட்ட துன்பத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற ஆட்சியாளர்கள், பெளத்த துறவிகள் இல்லாதவிடத்து இயற்கையின் சீற்றம் பொது மக்களைப் பாதிக்கும் என்பதால்,
இயற்கையாய் எழுந்து நிற்கும் இறைவா! உன் சீற்றத்தை தவிர்த்து மக்களுக்கு ஆறுதல் கொடு. பாதி க்கப்பட்டவர்களுக்கு உன் கருணையைக் காட்டு. இன்றைய புனித நாளில் இதுவே எம் கோரிக்கையா ஆகட்டும்.