ஞானசம்பந்தக் குழந்தைக்கு மூன்று வயது. சீர்காழிப் பகுதியில் இருக்கும் தோணிபுரத்திற்கு தந்தை யார் தன் மகன் சம்பந்தனைக் கூட்டிச் செல்கிறார்.
குழந்தையைக் கேணிக்கட்டில் இருத்திவிட்டு தந்தை நீராடுகிறார். தன் தந்தையைக் காணாத குழந்தை அம்மையே! அப்பா! என்று அழுகிறது.
அம்மை அப்பன் எருதேறிவந்து சம்பந்தக் குழந்தைக்கு ஞானப்பால் ஊட்டுகின்றனர். குழந்தைக்கு ஞானம் பிறக்கிறது.
தோடுடைய செவியன் விடையேறி... எனச் சம்பந்தக் குழந்தை தேவாரத் திருமுறைபாடுகிறது. அன்று மூன்று வயது நிரம்பிய சம்பந்தக் குழந்தை அழுததனால்தான் வேதநெறி தழைத்தோங்கியது; மிகு சைவத் துறை விளங்கியது என்று பட்டியல் படுத்துவர் நம் பெரியோர்.
ஞானம் என்பது அறிவுக்கும் அப்பாற்பட்டது. அறிவுடையவர்கள் எல்லோரும் ஞானமுடையவர்கள் அல்ல. ஞானம் என்பது அறிவும் தெய்வப்பலமும் இணைந்தது.
இந்த ஞானம் சிலருக்கு மூன்று வயதில் வந்து விடுகிறது. இன்னும் சிலருக்கு 83 வயதில் வருகிறது. இன்னும் பலருக்கு ஞானம் கை வராமலே போகிறது.
இதைப் பார்க்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த சில தினங்களுக்கு முன் திருகோணமலையில் உள்ள தனது இல்லத்தில் சந்தித்த கட்சி ஆதரவாளர்களிடம் வடக்குக் கிழக்கு இணைந்த சமஷ்டி அதிகாரம் கொண்ட தமிழர் தேசம் கிடைக்கும்வரை போராடுவோம் எனக் கூறியுள்ளதாகத் தகவல்.
இவ்வாறு சம்பந்தர் கூறும்போது பலரும் திணுக்குற்று போயினராம். சம்பந்தர் ஐயாவுக்கு என்ன நடந்தது? ஒற்றையாட்சிக்குள் தீர்வு காண்பதற்கு சம்பந்தர் சம்மதித்து விட்டார் என்றல்லவா பேச்சுக்கள் அடிபட்டன. இது என்ன புதுக்கதை.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழர் தேசம்... தமிழர் தேசம்... ஒருநாடு இருதேசம் என்று அடிக்கடி கூறிவந்த போதெல்லாம் அதனை ஏளனப்படுத்திக் கூறியவர்கள் இப்போது தமிழர் தேசத்தை உச்சாடனம் பண்ணத்தொடங்கியது ஏன்? தமிழர் தேசம் என்று சம்பந்தர் கூறியது உண்மையா? அல்லது இயற்றலா? எதுவும் புரியவில்லை.
இருந்தும் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பதற்கு சம்பந்தர் உடன்பட்டிருந்தாலும் அதனைக் கொடுப்பதற்குக் கூட இலங்கை அரசு மறுதலித்து விட்டது என்ற நிலையில், வடக்குக் கிழக்கு இணைந்த சமஷ்டி - தமிழர் தேசம் என்று சம்பந்தர் ஐயா கூறியிருக்கலாம்.
அல்லது தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத் திட்டம் மிகவும் அற்புதமானது. பேரவையின் தீர்வுத் திட்டத்தில் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தேசம் என்பது வலியுறுத்தப்பட்டிருப்பதால், அதனை நானும் ஏற்று ஒரே குரலில் கூறுவதுதான் நல்லது என்று கருதி சம்பந்தர் அவ்வாறு கூறியிருக்கலாம்.
ஐயா! நீங்கள் கூறிய இரண்டும் காரணம் அல்ல. மாறாக சம்பந்தர் ஐயாவுக்கு ஞானம் பிறந்து விட்டது. அதனால் அவர் மெய்ம்மையைக் கண்டு கொண்டார் அவ்வளவுதான் என்று நீங்கள் கூறி அதை நாம் மறு தலிக்கப் போவதில்லை.
அட, அவருக்கு மூன்று வயதில் ஞானம் - இவ ருக்கு 83 வயதில் ஞானம் என்று உணர்வதைத் தவிர வேறு என்னதான் நாம் செய்ய முடியும்!