
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பு நடந்துள்ளதை சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப முறையான ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன அழிப்பு நடக்கவில்லை என்று தான் கூறியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும் அவர் முற்றாக நிராகரித்துள்ளார்.
வெளிநாட்டு தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று புதன்கிழமை வழங்கிய செவ்வியொன்றிலேயே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் மக்கள் மீது இன அழிப்பு மேற்கொள்ளப்படுகின்றது என்று இலங்கைப் பாராளுமன்றத்துக்குள்ளேயே பேசியவன் நான். அப்படியிருக்க என் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இன அழிப்பு என்பதை சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், முறையான ஆதாரங்களை நாம் சேகரித்து முன்வைக்க வேண்டும்.
அதைவிடுத்து, வெற்றுக் கோசங்கள் எழுப்புவதால் எதுவும் நிகழ்ந்து விடாது. சரியான ஆதாரங்களோடு சட்ட ரீதியான இன அழிப்பு எமக்கு எதிராக நிகழ்த்தப்பட்டிருக்கின்றது என்று நாம் நிரூபிக்கா விட்டால், அது எமக்கு பாதிப்பாக அமையும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.