புதிய அரசியலமைப்பிலேயே வெற்றி தங்கியுள்ளது


புதிய அரசியல் அமைப்பை வரைபதற்காக நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சாசனப் பேரவையாக மாற்றுவதற்கு அனைத்துக் கட்சிகளும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.
அரசியலமைப்பு சாசனப்பேரவையாக பாராளுமன்றத்தை மாற்றுவதற்கான அங்கீகாரத்தை அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டிருப்பது ஒரு பெரும் முன்னேற்றம் என்று கூறிக்கொள்ளலாம்.

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவதற்கு பொது எதிரணியினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று பரவலாகப் பேசப்பட்ட போதிலும் பொது எதிரணியினரும் அரசியலமைப்பு சபையாக பாராளுமன்றத்தை மாற்றுவதற்கு சம்மதம் தெரிவித்தமை வரவேற்கத்தக்க முடிவே.
சில வேளைகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ­ அனுபவிக்கின்ற துன்பதுயரங்களை பார்த்தபின் ஐயா! எதற்கும் அரசுடன் ஒத்துப்போவதுதான் ஒரேவழி என்று பொது எதிரணியினர் முடிவு எடுத்திருக்கலாம்.

எது எப்படியாயினும் ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சியில் ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைத்தல் மற்றும் பாராளுமன்றத்தை அரசியல் அமைப்பு சபையாக மாற்றுதல் என்ற இரு விடயத்திலும் மைத்திரியின் அரசு வெற்றிபெற்றுள்ளமை முக்கியமான திசைதிருப்பம் என்றே கூறவேண்டும்.

இது ஒருபுறம் இருக்க, பாராளுமன்றத்தை அரசியல் அமைப்பு சபையாக மாற்றியதன் வெற்றி என்பது அமையப் போகும் புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமையும் என்பதை பொறுத்தே தங்கியுள்ளது.
புதிய அரசியலமைப்பானது மீளவும் இலங்கையை பெளத்த சிங்கள நாடாகவே எடுத்துரைக்குமாயின், சிறுபான்மை மக்களுக்கு உரிமை கொடுக்க மறுக்குமாயின் புதிய அரசியலமைப் பால் எந்த பிரயோசனமும் இருக்காதென்பதே உண்மை.
ஆக பாராளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக  மாற்றப்பட்டமை வெற்றி என்பதாக அமைய வேண்டுமாயின்,

இந்த நாடு அனைத்து இன, மத, மொழி சார்ந்த மக்களுக்கும் உரியது; மத சார்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. சிறுபான்மை மக்கள் என்றில்லாமல் அனைவரும் ஆட்சிப்பீடம் அமரக்  கூடியவர்களாக - அனைவரும் சமத்துவமான உரிமைகளோடு வாழக்கூடியதான சூழலை ஏற்படுத்துவதாக புதிய அரசியலமைப்பு அமையுமாயின் அதுவே பெருபெற்றியாகும்.

எனினும் பெளத்த சிங்கள நாடு என்பதை இந்த நாட்டின் உன்னதமான மதம் பெளத்தம் என்பதை விட்டுக் கொடுப்பதாக அரசியலமைப்பு அமையும் என்று சொல்லமுடியாதென்பதே நம் சிற்றறிவின் முடிவு.
எதுவாயினும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஒருகளம் அமைந்துவிட்டது. இந்தக் களத்தை இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு என்பதாக ஆக்குவதற்கு பயன்படுத்தினால் அதுவே பெரும் பயனாக அமையும்.

இதைச் செய்ய வேண்டுமாயின் சிங்கள பேரினவாதிகளும் பெளத்த பீடங்களும் தங்களிடம் இருக்கக் கூடிய ஆணவக்கூறுகள் பலவற்றை தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என்பதே உண்மை.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila