நேற்று பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குற்றப்புலனாய்வப் பிரிவின் உதவி கண்காணிப்பாளர் அபேசேகர அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
“2015இல் இந்த விசாரணைகளை குற்றப்புலனாய்வுத்துறை பொறுப்பேற்கும் வரை பிரகீத் கடத்தல் குறித்து எந்த முறையான விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
குற்றப்புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட் விசாரணைகளின் மூலம், பிரகீத் எக்னெலிகொட படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறிலங்கா இராணுவத்தினரால் ஒலிப்பேழை ஒன்று விசாரணையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.அது முத்திரையிடப்பட்ட நிலையில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த ஒலிப்பேழையை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கேட்கவில்லை. எனினும் இந்த இரகசிய ஒலிப்பேழை பல்வேறு இணையத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது.
கிரித்தல இராணுவ முகாமில் இருந்து சந்தேகநபர்கள் அக்கரைப்பற்று சென்றதற்கான ஆதாரங்களை கைத்தொலைபேசி சமிக்ஞை பதிவுகள் காட்டுகின்றன.
சந்தேக நபர்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்தார்
இதையடுத்தே, இந்த விவகாரத்துடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு மார்ச் 15ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன் சந்தேக நபர்களின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.