மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்படும் : ஜனாதிபதி உறுதி
புதிய அரசியல் யாப்பினூடாக ஒன்றிணைந்த இலங்கைக்குள் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் பகிரப்படுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். காலியில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமான 32ஆவது மாகாண முதலமைச்சர்களுக்கான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி- ‘அதிகாரங்களை பகிர்வதன் ஊடாகவே சமூகத்தில் கொள்கைகள் விரிவாக்கப்படுமென்பது, புத்திஜீவிகளினதும் அனுபவமிக்கவர்களதும் கருத்தாகவுள்ளது. ஜனநாயகம், சுதந்தரம், மனித உரிமை உள்ளிட்ட விடயங்களில் முன்னேற்றம் கண்டுள்ள சமூகமாக இன்றைய சமூகம் உள்ளது. இதற்கு எந்த வகையிலும் பாதிப்பேற்படாத வகையில் அதிகாரங்கள் பகிரப்படும். மனித உரிமை உள்ளிட்ட விடயங்களில் ஏற்பட்ட முன்னேற்றம், எதிர்காலத்தில் எந்த வகையிலும் பாதிப்படையாத அதே சந்தர்ப்பத்தில், பின்னடைவையும் சந்திக்காத வகையில் நாம் இதனை முன்னெடுப்போம். இவ்வாறு இருக்கும்போது அதற்கு எதிராக யாரேனும் கருத்துக்களை முன்வைப்பார்களாயின், அவர்கள் முன்னேற்றமடையாத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றே அடையாளப்படுத்தப்படுவர். நான் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், குறித்த அமைச்சின் அதிகாரங்களை மாகாண சுகாதார அமைச்சர்களுக்கு பகிர்ந்தளித்தேன். சில அமைச்சர்கள் அது தொடர்பில் என்னிடம் கேள்வியெழுப்பினர். குறித்த அமைச்சின் பணிகளை சரிவர செய்வதே அவசியம் என அதற்கு நான் பதிலளித்தேன். காரணம், ஒவ்வொரு மகாணங்களுக்கும் விஜயம் செய்து ஒவ்வொரு வைத்தியசாலை மற்றும் மருந்தங்கள் என்பவற்ற கண்காணிக்க முடியாது. அதேபோன்று நான் விவசாய அமைச்சராக இருந்தபோதும், ஒவ்வொரு வயல்களிலும் இறங்கி பார்வையிட முடியாது. அந்தந்த மாகாணத்திலுள்ள அமைச்சர்கள் இப்பணியை செய்வார்கள். ஆகவே மாகாண அமைச்சர்களுக்கு அதன் அதிகாரங்களை கொடுத்திருந்தேன். நான் ஜனாதிபதியாக இந்த இடத்திற்கு வந்தது கொடுப்பதற்கு அன்றி பறிப்பதற்கு அல்ல. அந்தவகையில் புதிய அரசாங்கம் என்ற ரீதியில், புதிய அரசியல் யாப்பினூடாக மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரங்களை கொடுப்பது அவசியமாகின்றது. ஒன்றிணைந்த இராச்சியத்திற்குள் அதிகாரங்களை பகிர்வது பற்றியும், சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகள், மக்களது அடிப்படை பிரச்சினைகள் என்பவற்றிற்கு தீர்வு காண்பது குறித்தும் நாம் கலந்துரையாடி தீரமானம் எடுக்கவேண்டியுள்ளது. இதன்போது நாம் எமக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட வேண்டியுள்ளது. அதனூடாகத்தான் இப்பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ளலாம்’ என்றார். குறித்த மாநாட்டில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தவிர, எனைய எட்டு மாகாணங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Related Post:
Add Comments