கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் பாடசாலையில் நூறு மாணவர்கள் கல்வி கற்கின்ற போதும் அங்கு மூன்று ஆசிரியர்கள் மட்டுமே கற்பிப்பதாகவும் இந்த அவலத்தை தீர்த்து எங்கள் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துங்கள் என மயில்வாகனபுரம் பாடசாலை பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று செவ்வாய் கிழமை கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தங்களது பாடசாலையில் மிக நீண்ட காலமாக இந்த நிலை காணப்படுவதாகவும், பல தடவைகள் பலருக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் பாடசாலை நேரங்களில் மாணவர்கள் பெரும்பாலும் கற்றல் செயற்பாடுகள் இன்றி காணப்படுகின்றனர் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
இதேவேளை கண்டாவளை கல்விக் கோட்டத்தில் இருக்கின்ற இரண்டு 1ஏபி பாடசாலைகளான தர்மபுரம் மத்திய கல்லூரி, முருகானந்தா கல்லூரி ஆகிய இரண்டு பாடசாலைகளிலும் க.பொ.த.உயர் தரதிற்கு பௌதீகவியல் ஆசிரியர் இன்மையால் இங்கு உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பிரிவுகளில் கல்வி கற்கின்ற மாணவர்களின் நிலைமை கவலையளிக்கிறது என கோட்டக்கல்வி அதிகாரி இராஜகுலசிங்கத்தினால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதேவேளை வடமாகாண கல்வி அமைச்சரின் தந்தையின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட தர்மிராசாபுரம் பாடசாலையில் கற்பிக்கின்ற ஜந்து ஆசிரியர்களுக்கும் கதிரையும் மேசையும் இல்லை என வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளையால் சுட்டிக் காட்டப்பட்டதோடு வளங்களை பங்கீடு செய்கின்ற போது மனசாட்சியுடன் பங்கீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.
இதன் போது ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சமூகமளித்திருந்த வடமாகாண கல்வி அமைச்சர் கல்வி விடயம் ஆராயப்பட்டு முடிவுறும் வரை மக்களால் தெரிவிக்கப்பட்ட எந்தக் கருத்துக்களுக்கு எவ்வித பதிலும் அளிக்காது மௌனமாகவே இருந்து விட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மக்களின் கல்வி தொடர்பான கோரிக்கைகளை கவனத்தில் எடுப்பதாக பதிலளித்தார்