இதே மஹிந்த ராஜபக்சதான் 2009ஆண்டு மே மாதம் 19ஆம் திகதியுடன் இலங்கையில் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்றும், இலங்கையையை பயங்கரவாதமற்றதும், அச்சமற்றதுமான சுதந்திர நாடாக மாற்றியிருப்பதாகவும் சூளுரைத்தார். ஆனால் தேர்தல் நெருங்கும்போதும், தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் முன் வைக்கப்படுகின்றபோதும், மீண்டும் புலிகள் வருவார்கள் என்றும், இலங்கையின் பாதுகாப்பில் எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடமளிக்க முடியாது என்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவும் பேசுவார்.
இராணுவ ஆதிக்கத்தை வடக்கு கிழக்கில் நிலை நிறுத்துவதற்காகவும், யுத்த வெற்றியை தனது அரசியல் மூலதனமாக வைத்திருப்பதற்காகவும், மஹிந்த ராஜபக்ச படைகளை மகிழ்ச்சிப்படுத்துவதிலும், படைகளுக்கு தேவைக்கும் அதிகமான அதிகாரங்களை வழங்குவதிலும் அக்கறை செலுத்தினார். அதற்குக் காரணம், பாதுகாப்புச் செயலாளராக அவரது சகோதரர் கோட்டபாய இருந்ததாகும்.
வடக்கிலும் கிழக்கிலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்களின் நிலங்களை படையினர் அபகரித்தது ஒருபுறம், முன்னர் விடுதலைப் புலிகள் நிலை கொண்டிருந்த நிலங்களும், கட்டிடங்களும் படையினருக்கே உரித்தானவை என்றும் சில அபகரிப்புக்களை மேற்கொண்டிருந்தது மறுபுறம். விடுதலைப் புலிகளின் முகாம்கள், மயானங்கள், பயிற்சி முகாம்கள் என்பனவற்றை படையினர் தமது முகாம்களாகவே இன்றும் வைத்துள்ளனர். இந்தச் செயற்பாட்டை மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் வரவேற்றது அல்லது கண்டு கொள்ளவில்லை. இதனால் படையினருக்கு யுத்தத்தின் பின்னர் தமது பழைய நிலைகளுக்கு திரும்பிவிட வேண்டும் என்ற கடப்பாடு போதிக்கப்படவில்லை. படையினரின் செயற்பாடு விடுவிப்பு என்பதைத் தாண்டி அபகரிப்பாக மாறிப் போய்விட்டது.
படையினர் இந்த மனோநிலையிலிருந்து யுத்தம் முடிந்து ஏழு வருடங்களாகிவிட்ட போதும் விடுபடவில்லை. ஆகையினாலேயே வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலையங்களாக படையினர் அபகரித்த நிலங்களை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தமது பழைய நிலைகளுக்கோ, அல்லது பொது மக்களுக்கு இடையூறு இல்லாத தூரப்பகுதிக்கோ செல்ல மறுக்கின்றார்கள். மக்களின் நிலங்களுக்குள் இருந்த வீடுகளை அழித்துவிட்டு படையினர் இப்போது ஆடம்பரமாக முகாம்களையும், களியாட்ட விடுதிகளையும், விளையாட்டு மைதானங்களையும், இருப்பிடங்களையும் அமைத்துக் கொண்டுள்ளனர். அந்த இடங்களை விடுவதற்கு இப்போது அவர்களுக்கு விருப்பமில்லை.
அந்த நிலங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் இப்போதும் சுமார் 32 நலன்புரி நிலையங்களிலும், உறவினர், நண்பர்களின் வீடுகளிலும் கடந்த 26 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருக்கும்வரை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்றும், படையினரின் அடாவடித் தனங்கள் குறையாது என்றும் தமிழ் மக்கள் தெரிந்து கொண்டிருந்தார்கள். ஆகையால் ஆட்சி மாற்றம் ஒன்றுக்காக தமிழ் மக்களும் கைகோர்த்து அதில் வெற்றியும் கண்டார்கள்.
புதிய ஜனாதிபதி மைத்திரிபால பதவியேற்றார். அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகின்ற போதெல்லாம் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு உரிய தீர்வை வழங்குவென் என்று கூறியிருக்கின்றார். ஆனால் இதுவரை ஒரு வருடமாகியும் ஒன்றும் நடக்கவில்லை. கடந்த வருடம் டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால, விசேடமாக நலன்புரி நிலையங்களுக்கும் விஜயம் செய்து அங்கிருந்த மக்களுடன் கலந்துரையாடினார், அவர்களின் உணவு தயாரிப்பை தெரிந்து கொண்டார். அந்தப் பிள்ளைகளின் கல்வி எவ்வாறு உள்ளது என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டார். ஆறு மாத காலத்தில் உங்களை உங்களது சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் வாக்குறுதி வழங்கிவிட்டு திரும்பினார்.
அதன் பிறகு யாழ்ப்பாணம் சென்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் ஹுசைன் அவர்களும், அந்த மக்களை நலன்புரி நிலையங்களுக்கே சென்று பார்வையிட்டார், அவர்கள் கண்ணீரோடு கூறிய அவலக் கதைகளை கேட்டுவிட்டு, நான் அடுத்த தடவை இங்கே வரும்போது நீங்கள் உங்கள் சொந்த நிலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் என்று கூறிவிட்டுச் சென்றார்.
இதற்கு முன்னர், பிரித்தனியப் பிரதர் டேவிட் கெமரூன், அமெரிக்காவின் ஐக்கிய நாடகளுக்கான செயலாளர் சமந்தா போன்றவர்களும் இதே நலன்புரி நிலையங்களுக்கு சென்றவர்கள்தான். அவர்களும் வாக்குறுதிகளை வழங்கினார்கள். ஆனாலும் நலன்புரி வாழ்வெனும் நரகத்திலிருந்து அந்த மக்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை.
வாக்குறுதிகளை நம்பிப்பயன் இல்லை என்ற நிலைக்கு அந்த மக்கள் வந்துவிட்டார்கள். சர்வதேசப் பிரதிநிதிகளையும், உள்ளுர் அரசியல் தலைமைகளையும் நம்பிப்பயன் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்ட அவர்கள் தமது இருப்யையும், தமது கோரிக்கையையும் தொடர்ச்சியான அகிம்சை வழிப் போராட்டம் ஒன்றின் ஊடாக வெளிப்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றார்கள்.
மார்ச் மாதம் 4ஆம் திகதியிலிருந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதற்கு அந்த மக்கள் தீர்மானித்திருக்கின்றார்கள். அதற்கமைவாக கண்ணகி நலன்புரி நிலையத்தில் உண்ணதவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கும் இவர்கள் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நலன்புரி நிலையங்களில் உண்ணா விரதப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டம் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்படுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இவ்வாறு கடுமையான போராட்டம் ஒன்றை இந்த மக்கள் ஆரம்பிப்பதற்கு இரண்டு பிரதான நோக்கங்கள் இருக்கின்றன. ஓன்று கடந்த டிசம்பர் மாதம் யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி கூறிய படி ஆறுமாதத்துக்குள் தம்மை சொந்த நிலத்தில் குடியேற்றுவதற்கான கால எல்லையில் தற்போது இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. அரசாங்கம் தமது மீள் குடியேற்ற விடயத்தில் எந்தவொரு முன் நகர்வையும் எடுக்கவில்லை என்பதை உணர்த்துவதோடு, ஜனாதிபதியின் அந்த வாக்குறுதியை தொடர்ந்தும் ஞாபகப்படுத்துவதாகும்.
இரண்டாவது, வடக்கில் இந்தியாவின் அக்கறைக்குரிய அபிவிருத்தித் திட்டங்களான காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரிப்புச் செய்து அபிவிருத்தி செய்வதும், பலாலி விமான நிலையத்தை விஸ்தரிப்புச் செய்து அபிவிருத்தி செய்வதுமான இரண்டு திட்டங்கள் குறித்தும் இந்தியா அதிக ஈடுபாட்டைக் காட்டிவருகின்றது. இந்த நிலையில் இந்த இரு திட்டங்களுக்கும், உயர் பாதுகாப்பு வலயங்கள் என்று மீள் குடியேற்றம் மறுக்கப்படும் மக்களின் நிலங்களும் தொடர்பு பட்டிருக்கின்றன.
எனவே அபிவிருத்தி குறித்து அக்கறை காட்டும் இந்திய மத்திய அரசு, தமது சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியேற்றவும் அக்கறை காட்டவேண்டும். தம்மை மறந்து இந்தியா அந்தப் பகுதிக்குள் சுய நலனோடு செயற்படுவது ஏற்புடையதல்ல என்பதை உணர்த்துவதுமாகும். இந்த இரண்டு நோக்கங்களும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் இந்த மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் இருக்கும் கடமையை அல்லது பொறுப்பை உணர்த்துவதற்காகவே அந்த மக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளார்கள்.
மறுபக்கத்தில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் தமக்கு அரசியல்வாதிகளால் வழங்கப்பட்ட பல வாக்குறுதிகளும் பொய்யாகிப் போயுள்ளதைக் கண்டித்தும், தமது விடுதலையை வலியுறுத்தியும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள். இலங்கையில் தமிழர்கள் விடுதலைக்காவும், மீள்குடியேற்றத்திற்காகவும், இன்னும் பிறவுக்காவும், உண்ணாவிரதமிருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையிலேயே தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். என்பதையே புலம் பெயர்ந்து வாழ்கின்ற தாயக உறவுகள் தமது அமைதியான பொழுதொன்றில் சிந்திக்க வேண்டும்.
- ஈழத்துக் கதிரவன்.