
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சற்று முன்னர் கொழும்பில் அமைந்துள்ள குற்றப்புலனாய்வு பிரிவு தலைமையகத்தில் முன்னிலையானார் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். யாழ். சாவகச்சேரியில் அண்மையில் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே, அவர் இன்று சீஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளார். ‘தேசிய பாதுகாப்பு’ என்ற அடிப்படையில் பீரிஸின் கருத்து பாரதூரமானது என்று கருதியே அவரின் வாக்குமூலம் பெறப்படுகிறது. தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸிடம் சி.ஐ.டி. இன்று விசாரணை தற்கொலை அங்கி மீட்பு விவகாரத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று (சனிக்கிழமை) வாக்குமூலம் பெறவுள்ளனர். இதற்காக இன்று காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமையன்று சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை குண்டு அங்கியும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஜி.எல்.பீரிஸ், அப்பொருட்கள் வெள்ளவத்தைப் பகுதிக்கு எடுத்து வருதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியெழுப்பட்ட போது முன்னாள் அமைச்சரிடம் அதுகுறித்து விசாரணை செய்யப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கஜந்த கருணாதிலக்க தெரிவித்திருந்தார். இதனையடுத்தே இன்றையதினம் அவ்விடயம் குறித்து பீரீஸிடத்தில் விசாரணை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்பு பிரிவு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பீரிஸ் குறிப்பிடுகையில் அனைத்துமே அரசியலுக்காக மேற்கொள்ளப்படுகின்றன எனக் குறிப்பிட்டார்.