பெண்களைத் தாயாகப் போற்றும் பண்புடமை எங்களுக்கே உரியது


மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம். உலகம் முழுமையிலும் நேற்றைய தினம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
பெண்களின் உரிமை விடயத்தில் இன்னமும் போராட வேண்டிய அளவிலேயே நிலைமை உள்ளது. 
அரசியலிலும் பொருளாதாரத்திலும் சமூகவியலிலும் பெண்களின் வகிபங்கு போதுமானதல்ல.
சில நாடுகள்-சில மதங்கள் பெண்களை அடிமைகளாக வைத்திருப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. 

ஒரு பெண் தன் முகத்தைக்கூட முழுமையாக தெரியப்படுத்த முடியவில்லை என்றால், பெண்களின் நிலைமை எப்படியாக இருக்கும் என்பதை புரிந்து கொள்வதில் கடினம் இருக்க முடியாது. 
இது தவிர சில தீவிரவாத அமைப்புக்கள் பெண் களின் உரிமை விடயத்தில் கடுமையான கட்டுப்பாட்டை விதிக்கின்ற அதேவேளை அக்கட்டுப்பாடுகளை மீறுகின்றபோது கடுமையான தண்டனை கொடுப்பதிலும் தீவிரமாக உள்ளன. 

மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை பெண்களுக்கான சுதந்திரம் அதிகமாகிவிட்டதோ! என்று எண்ணத் தோன்றும். மேற்கு நாடுகள் பெண்களுக்குக் கொடுத்த அதீத சுதந்திரத்தால் பெண்ணியம் பற்றிய மதிப்பீடுகள் குறைவானதாக அமைந்து விடுவது உண்டு.
மேற்கு நாடுகளின் அதீதமான சுதந்திரமே மத்திய கிழக்கு நாடுகள் எங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக் காரணமோ என்று எண்ணுவதிலும் தவறில்லை.  

மேற்கும் மத்திய கிழக்கு நாடுகளும் பெண்கள் விடயத்தில் எதிரும் புதிருமான போக்கை கொண் டிருக்கின்ற போது, தென்கிழக்காசிய நாடுகளில் அதிலும் குறிப்பாக  இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பெண்களுக்கான உரிமை எவ்வாறு உள்ளது என்பது பற்றி ஆராய்ந்தால்,
பெண்களை தாயாக-தெய்வமாகப் போற்றுவதைக் காணமுடியும். இங்கு பெண்களுக்கான கட் டுப்பாடு என்பது பெண்களால் ஏற்படுத்தப்பட்டவை தான்.

என் கணவன் என் பிள்ளை என்ற உறவும் என் மனைவி, என் தாய் என்ற உறவும் பாசமும் பெண்களை தியாகிகளாக்கின. ஒவ்வொரு வீட்டிலும் தாய் இல்லை என்றால் பிள்ளைகள் சாப்பிடவே மாட்டார்கள் என்பதுதான் நிலைமை. 

ஆண்களும் தாய்க்குப் பின் தாரம் என்ற உறவு நிலையில் கட்டுண்டுள்ளனர். 
இதனால் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் இல்லை என்றால் குடும்பத்தில் மகிழ்வே இல்லை என்றாகி விடுகிறது. 

இவ்வாறான நிலையில் பார்க்கும் போது பெண்களே முதன்மை பெறுகின்றனர். அந்த முதன்மை என்பது அன்பு, பாசம், கருணை, இரக்கம் என்பவற்றால் கட்டுண்டு என் பிள்ளைக்காக; என் கணவனுக்காக; என் பெற்றோருக்காக வாழுதல் என்ற முடிவை பெண்களிடம் ஏற்படுத்தி விடுகிறது. 
இந்த அடித்தளம் எங்கள் நாட்டில் இருப்பதால் பெண்கள் எப்போதும் தாயாக- தெய்வமாக போற்றப்படும் தகைமை நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இருந்தும் ஆங்காங்கே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தலைதூக்குவது வேதனைக்குரியது. இத்தகைய துன்பங்கள் புறச் சூழலின் தாக்கத்தால் ஏற்படுபவை.
இவை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமாயின் எங்களுக்கான மதிப்பும் மரியாதையும் எங்கள் மண்ணில்தான் உன்னதமாக உள்ளது என்று கூறிக் கொள்ளலாம்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila